சீன நாடோடிக் கதை: ஒரு மரத்தின்  கதை!

மலையின்  உச்சியில் இருந்த குகையில், புலி ஒன்று  வசித்து வந்தது.
சீன நாடோடிக் கதை: ஒரு மரத்தின்  கதை!

மலையின்  உச்சியில் இருந்த குகையில், புலி ஒன்று  வசித்து வந்தது. மலையின் அடிவாரத்தில் இருந்த குளத்தில், பெரிய ஆமை ஒன்று குடி கொண்டிருந்தது. மலையின் உச்சிக்குப் போகும் பாதி வழியில், தேவதாரு மரம் ஒன்று காணப்பட்டது.  ஆயிரம்  ஆண்டுப் பழமை வாய்ந்தது  அது.

புலியும் ஆமையும் சிறந்த நண்பர்களாயின; அடிக்கடி சந்தித்து  வந்தன. புலியைக் காண்பதற்காக  மலையுச்சிக்கு  ஆமை சென்றாலும், ஆமையைச் சந்திப்பதற்காகப் புலி மலையடிவாரத்துக்குப் போனாலும்,  இடைப்பட்ட வழியில் மரத்தைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது.

இந்த இரண்டு ஜீவன்களும் நட்புறவு கொண்டிருந்ததை  மரத்தால் சகித்துக் கொள்ள முடியவில்லை. பொறாமையால்  வெந்து தவித்தது.

நண்பர்களை எதிரிகளாக்குவது எப்படி? என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தது.  ஒருநாள், புலியைச் சந்திக்க ஆமை சென்று கொண்டிருந்தது. 

""ஆமையாரே?   உங்களுக்குச் சேதி தெரியுமா?'' என்று மரம்  கேட்டது.

""என்ன?''  என்றது ஆமை

""உங்கள் நன்மைக்காகத்தான் சொல்கிறேன். புலியைச் சந்திக்காமல் இருப்பது நல்லது''  என்று கூறி ஏக்கப் பெருமூச்சு விட்டது மரம்.

"" ஏன் ?''   ஒன்றுமே புரியவில்லையே என்று திகைத்தது ஆமை.  

""நேற்றிரவு,  உம்மைப் பற்றி  தாறுமாறாகப்  புலி பேசியதாகத் தகவல்''  என்று மரம் கூறியது.  

""அப்படியா?  நம்பவே முடியவில்லையே,  அப்படி என்னதான் பேசியது''  என்று ஆமை கேட்டது.

""நீ மோசமான  ஆமையாம்.  அடுத்த முறை சந்திக்கும்போது,  உன் மேல் ஓட்டை  சுக்கு நூறாக்கி,  உடலைச் சகட்டு மேனிக்குக் கிழித்துப்போடப்  போவதாகப் புலி கூறியது''  என்று மரம்  சற்றே  மெதுவான  குரலில்  பற்ற வைத்தது.

ஆமைக்கு அதிர்ச்சி உடனே,  குளத்துக்குத் திரும்பி விட்டது.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த புலி,  ஆமை ஏன் வரவில்லை நாமே போய்ப் பார்ப்போம்  என்று தீர்மானித்தது.  மலையடிவாரத்துக்குப் புறப்பட்டது.

வழியில்,  அதைத் தடுத்து நிறுத்தியது  தேவதாரு மரம்.

ஆமையிடம்  கோள் மூட்டியது  போலவே,   புலியிடமும் கைவரிசை காட்டியது அந்த மரம்.

"" அப்படியா  நம்பவே முடியவில்லையே''  என்று  அதிர்ந்து  போனது புலி. 
"" என்னால்  கூட  நம்ப முடியவில்லை. நீ மோசமான, கேடுகெட்ட  புலியாம். அடுத்து உன்னைச் சந்திக்கும்போது,  உன்  தாடையைக் கிழித்து,  உன் வாலைப் பிடித்துச் சுழற்றி, குளத்தில் போட்டுச் சாகடிக்கப் போவதாக  அந்த ஆமை   அகங்காரமாகப் பேசியது''  என்று சகுனியின்  பாணியில்,  அலட்டிக் கொள்ளாமல் தீயைப் பற்ற வைத்தது அந்த மரம்.

வேறு வழியின்றி, மீண்டும்  குகைக்கே  திரும்பியது புலி.

நாட்கள் பறந்தன. புலியும் ஆமையும் சந்தித்துக் கொள்ளவேயில்லை. வழக்கம்போல,  பொறுமை இழந்தது புலி.

நேராக ஆமையிடம் போய்,  ""ஏய், கேடுகெட்ட  ஆமையே  நீ என் வாலைப் பிடித்துச் சுழற்றி,  குளத்தில் தூக்கிப் போட்டு, சாகடிப்பாயா? வா,  வந்து செய்து காட்டு''  என்று உறுமியது.

ஆமையும் வெளியே  தலை காட்டியது.

"" கேடு கெட்ட புலியே நீ மட்டும் என் உடலைச் சுக்கு நூறாகக் கிழித்துப் போட விரும்பியது  ஏன்?''  என்று  ஆமை கேட்டது.

இரண்டுமே  சுயநினைவை  இழந்துவிட்ட  நிலையில்,  எதையும்  காதில் வாங்கிக் கொள்ளத் தயாராக  இல்லை.

விளைவு?

இரண்டும் மூர்க்கத்தனமாக  மோதின; மடிந்து போயின பொழுது விடிந்தது.
அவற்றின்   சடலங்கள் குளத்தில் மிதந்தன.  சிலர் ஒன்று   சேர்ந்து, வெளியே எடுத்துப் போட்டனர், பின்னர்  கிராமத்துக்கு எடுத்துச் சென்றனர்.

என்ன  செய்வது  என்று தீவிரமாக  யோசித்தனர்.

இரண்டையும்  சமைத்துச் சாப்பிடலாம் என்று முடிவு  செய்தனர்.

""நிறைய விறகு தேவைப்படுமே இளைஞர்கள் சிலர்,  மலைக்குச் சென்று, விறகை  வெட்டி வாருங்கள்''  என்று ஊர்ப் பெரியவர் உத்தரவிட்டார்.

ரம்பம், கோடரி என எடுத்துக் கொண்டு, சில  இளைஞர்கள் மலைக்குப் புறப்பட்டனர்.

மலை மீது ஏறிச் செல்லும் வழியில், தேவதாரு மரம் அவர்களின்  கண்ணில்பட்டது.

ஏற்கெனவே  பட்டுப்போன  மரம் இது,  இதை  மட்டுமே வெட்டி எடுத்துச் சென்றால்  போதும்  என்று தீர்மானித்து,  அதை விறகாக  மாற்றிவிட்டனர் அந்த இளைஞர்கள்.  

நண்பர்களைப் பிரித்துவிட்ட மகிழ்ச்சி  நீடிப்பதற்குள், மரணத்தைத் தழுவிக் கொண்டது மரம்.

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் என்ற வள்ளுவர் வாக்கு, அர்த்தம்  பொதிந்த  வாக்குதான்.

தேவதாரு  மரத்தின் கதை, வெறும் கதையல்ல, பாடம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com