ஏமாந்தது யார்?

ஒரு கிராமத்தின் வழியாக இளைஞன்  ஒருவன் சென்று கொண்டிருந்தான். அவன்  நாகரிகமாக உடை  அணிந்திருந்தான்.
ஏமாந்தது யார்?

ஒரு கிராமத்தின் வழியாக இளைஞன்  ஒருவன் சென்று கொண்டிருந்தான். அவன் நாகரிகமாக உடை அணிந்திருந்தான். அங்கே நிகழும் நிகழ்ச்சிகளையெல்லாம் வேடிக்கை பார்த்தபடிச் சென்றான்.

வழியில் வயல்களின் நடுவே கிணறு  ஒன்று இருந்தது.  அதில் உழவன் ஒருவன் ஏற்றம் இறைத்துக் கொண்டிருந்தான். தண்ணீர்  வயல்களுக்குப் பாய்ந்து கொண்டிருந்தது.

ஏற்றம் இறைத்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து,  ""ஐயா,  இந்த வாளி கிணற்றுக்குள்  போகிறது அதற்குள் தண்ணீர் நிரப்பி  மேலே  அனுப்புவது யார்?''  என்று கேட்டான் அவன்.

இதைக் கேட்டதும்  ஏற்றம் இறைக்கும் உழவன் வந்திருப்பவன் ஓர் அடிமுட்டாள்.  அவனை ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தான். 
""இளைஞனே! கடவுள் உன்னை இங்கே  அனுப்பியிருக்கிறார். கிணற்றுக்குள் இருப்பது உன் தந்தைதான்.  அவர்தான் வாளியில்  தண்ணீர் நிரப்பி மேலே அனுப்புகிறார்''  என்று  அளந்தான் உழவன்.

""என் தந்தையா?  கிண்ற்றுக்குள்ளா? இருக்க  முடியாதே.  அவர் இறந்து பல ஆண்டுகள் ஆகிறதே'' என்றான்  அவன்.

""உன் தந்தை இறந்ததும் சொர்க்கத்திற்குச் சென்றார். அங்கே, என் வயலில் வேலை செய்யுமாறு  அவரை அங்கிருந்து அனுப்பி வைத்திருக்கின்றனர்'' என்றான்  உழவன்.

""அப்படியா  என் தந்தை  கிணற்றுக்குள்  இருக்கிறாரா?  இது எனக்குத் தெரியாதே! நான் அவரைப் பார்க்கலாமா?''  என்று  கேட்டான்  அவன்.

""அவர் யார்  கண்ணுக்கும்  தெரியமாட்டார்.  குளிரில்  நடுங்கியபடியே வேலை செய்து   கொண்டிருக்கிறார்.  அவர்  போட்டுக் கொள்ள நல்ல சட்டை  இல்லை. நீ  அணிந்திருக்கும்  சட்டையைத் தரக் கூடாதா?'' என்று கேட்டான்  உழவன்.
""என் தந்தைக்கு நான் உதவி செய்ய வேண்டும்?''  என்ற அவன் தன்  சட்டையை உழவனிடம்  தந்தான்.

""என் தந்தையிடம்  இதை தந்துவிடு''  என்று சொல்லிவிட்டு அங்கிருந்து  சென்றான்.

நான் சொல்வதையெல்லாம் நம்புகிறானே,  இவன்  பெரிய முட்டாளாகத்தான் இருக்க வேண்டும். எப்படியோ  நல்ல சட்டை  ஒன்று கிடைத்தது என்று தனக்குள் மகிழ்ந்தான் உழவன்.

இரண்டு மாதங்கள் சென்றன.  வயலில் வேலை செய்து  கொண்டிருந்தான் உழவன்.  தொலைவில்   அந்த இளைஞன் வருவதைப் பார்த்தான் அவன்.   

அந்த  முட்டாள் மீண்டும்  இங்கு வருகிறான்.  அவனை இப்போதும் ஏமாற்றிச் சட்டையை வாங்க வேண்டும் என்று  நினைத்தான். 

இளைஞன் அவன் அருகில் வந்தான். ""உன்  தந்தைக்கு மரியாதை செய்வதற்காக  இங்கு வந்திருக்கிறாய்.  அப்படித்தானே?'' 

""ஆமாம்''

""எவ்வளவு  அழகான  சட்டையைப் போட்டுக் கொண்டிருக்கிறாய்.  இந்தச் சட்டை  உன் தந்தைக்கு மிகவும் பிடிக்கும்.''

தன் சட்டையைக் கழற்றி அவனிடம்  தந்தான் இளைஞன். மகிழ்ச்சியுடன் அதை வாங்கினான் உழவன்.

""சென்றமுறை நான்  இங்கு வந்தபோதும் என் தந்தை  உழைத்துக் கொண்டிருந்தார்.  இப்போதும் என் தந்தை உங்கள் வயலில்  கடினமாக  உழைக்கிறார். அப்படித்தானே?''

""ஆம்! அதில் என்ன சந்தேகம்?   உன் தந்தை இரவு பகல் பாராது இங்கே கடினமாக உழைத்து வருகிறார்''.

""இந்த ஆண்டு, உன் வயலில் நல்ல விளைச்சல் போல் தெரிகிறது. என் தந்தை இப்படி உழைத்திருக்கா விட்டால்  இவ்வளவு நல்ல விளைச்சல்  உனக்கு கிடைத்திருக்காது.  என்ன நான் சொல்வது சரிதானே?''

""ஆமாம் !  கிடைத்திருக்காதுதான்''

""நேர்மையானவன் நீ. எனக்கு உரியதை நான் கேட்டால் நீ உடனே  தந்துவிடுவாய் அல்லவா?''

""என்ன சொல்கிறாய்?'' என்று அதிர்ச்சியுடன் கேட்டான் உழவன்.

""என் தந்தை உன் வயலில் பல மாதங்களாக  உழைத்து வருகிறார்.  அவர் இலவசமாக  வேலை செய்வார்  என்று நீ எதிர்பார்க்கக் கூடாது.  அவர் உழைப்பினால் இந்த ஆண்டு உனக்கு  நல்ல விளைச்சல். இதை நீயே  ஒப்புக் கொண்டாய். 

அறுவடையில் பாதிப் பங்கை நீ நேர்மையாக என் தந்தைக்குத் தரவேண்டும். அவர் கண்ணுக்குத் தெரியாததால் அவர் பங்கை  அவர் மகனான என்னிடம்  தரவும்''.

""உனக்குத் தர விருப்பம்  இல்லையானால்,  ஊர் மக்களை  இங்கே அழைக்கலாம். நடந்ததை  எல்லாம்  ஒன்று விடாமல்   சொல்லி அவர்களிடம்   நீதி கேட்போம். அவர்கள் என்ன சொல்கிறார்களோ  அப்படியே  நடந்து கொள்வோம்'' என்று  கூறினான்  இளைஞன்.

நடுநடுங்கிய  உழவன்,  ""இளைஞனே! என்னை மன்னித்துவிடு.   உன்னிடம் கேலி செய்து விளையாடலாம் என்று நினைத்தேன்.  அந்த எண்ணத்தில்தான் உன் தந்தை கிணற்றுக்குள் வேலை செய்வதாகப் பொய் சொன்னேன்.  நீ கொடுத்த  இரண்டு  சட்டைகளையும் திருப்பித் தந்து விடுகிறேன்.  நான் செய்த கேலிக்கு  அபராதமாக இரண்டு மூட்டை நெல்  தருகிறேன்.  அறுவடையில் பாதியைக் கேட்காதே!  அப்படித் தந்தால் என் குடும்பமே  பட்டினி கிடந்து சாக நேரிடும்.  இனி யாரையும் கேலி செய்ய மாட்டேன்'' என்று கெஞ்சினான்  அந்த உழவன்.

""எல்லாரையும் ஏமாளிகள் என்று எண்ணிக் கேலி செய்யாதே'' என்ற இளைஞன்  நெல் மூட்டைகளை வாங்கிக் கொண்டு  அங்கிருந்து புறப்பட்டான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com