எலக்ட்ரானிக் குப்பைகளை சேகரிக்கும் மாணவர்கள்!

மனிதர்கள் பயன்படுத்தும் பொருள்களில் ஏற்படும்  மாற்றங்களுக்கேற்ப அவர்கள் கொட்டும் குப்பையிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
எலக்ட்ரானிக் குப்பைகளை சேகரிக்கும் மாணவர்கள்!

மனிதர்கள் பயன்படுத்தும் பொருள்களில் ஏற்படும்  மாற்றங்களுக்கேற்ப அவர்கள் கொட்டும் குப்பையிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.  ஒவ்வொரு வீட்டிலும்  கடந்த பத்தாண்டுகளாகப் பயன்படுத்திய பழைய  பழுதடைந்த, பயன்படுத்தப்படாத செல்போன்கள், கம்ப்யூட்டர், சிடி, பிரிண்டர்ஸ்,  கால்குலேட்டர், பேட்டரிகள்,  டிவி,   மருத்துவக் கருவிகள், வாஷிங் மெஷின், குளிர்சாதனப் பெட்டிகள் போன்ற  எலக்ட்ரானிக் குப்பைகள் நிறைந்திருக்கின்றன.  இவற்றை பழைய பொருள்களை வாங்குபவரிடம் கொடுத்துவிடுவார்கள். அவர் இந்தப் பொருள்களில் உள்ள செம்பு, வெள்ளி, பிளாட்டினம் போன்ற உலோகங்களை மட்டும்  எடுத்துக் கொண்டு,  அப்படியே அவற்றைக்  குப்பையில் போட்டுவிடுவார்.  இந்தப் பொருள்களில் உள்ள லித்தியம், மெர்க்குரி,  கோபால்ட்,  செலினியம் போன்ற நச்சுத்தன்மை உள்ள பொருள்கள் அப்படியே  மண்ணிலும் நீரிலும் கலந்து பலவிதமான சுற்றுச்சூழல் பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன.  

பயன்படுத்தப்படாத எலக்ட்ரானிக் பொருள்கள் குறித்து  மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தார்கள்  மும்பை புறநகர்ப் பகுதியான  கோரிகானில் உள்ள விப்கியார் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் கிரேடு படிக்கும் சூர்யா பாலசுப்ரமணியனும், 9 ஆம் கிரேடு படிக்கும் த்ரிஷா பட்டாசார்யாவும்.

பள்ளியின் ஊக்குவிப்பு காரணமாக இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள்,   பல்வேறு போட்டிகளில் பங்கேற்பார்கள். அந்த அடிப்படையில் சூர்யா பாலசுப்பிரமணியனும், த்ரிஷாவும்  "பேன் இண்டியா போட்டி'யில்  கலந்து கொண்டார்கள். பேன் இண்டியா போட்டிகளில் வேறு பல  போட்டிகள் இருந்தாலும், பயன்படாத எலக்ட்ரானிக் பொருள்களைச் சேகரிப்பதை இவர்கள் எடுத்துக் கொண்டார்கள். நான்காவது பரிசையும் வென்றார்கள். 

""பலவிதமான போட்டிகள் இருந்தாலும்,  யார் கவனத்திலும் அதிகம் படாத -ஆனால் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும்   பயன்படுத்தப்படாத எலக்ட்ரானிக் பொருள்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான்  அவற்றைச் சேகரிக்கும் போட்டியை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். 

இதற்காக நாங்கள் செய்த முதல்  வேலை, எங்களுடைய பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் அவர்கள் வீட்டில் பயன்படுத்தப்படாமல் கிடக்கும் எலக்ட்ரானிக் பொருள்களைக் கொண்டு வரச் சொன்னதுதான்.  அப்போது பள்ளி மாணவர்களிடம்  இந்தப் பொருள்களினால் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றிச் சொன்னோம்.  மாணவர்கள் எங்கள் கோரிக்கையை ஏற்று அவர்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்தார்கள்.  நிறைய பழைய செல்போன்களும் சிடிகளும் வந்து குவிந்தன.    அதற்குப் பிறகு பள்ளியருகே, எங்களுடைய வீட்டருகே உள்ள பல அபார்ட்மென்ட்களில் வாழ்பவர்களிடம் கேட்டோம். அவர்களிடமும் பயன்படுத்தப்படாத எலக்ட்ரானிக் பொருள்களினால் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றி விளக்கிச் சொன்னோம்  இப்போது எங்களுக்கு நிறைய பொருள்கள் கிடைத்தன.  பயன்படுத்தப்படாத வாஷிங் மெஷின்கள், லேப்டாப்கள், சார்ஜர்கள்,  செல்போன்கள் என  380 கிலோ எடையுள்ள பொருள்கள் கிடைத்தன. அவற்றை எல்லாம் ஒரு லாபநோக்கமற்ற தன்னார்வ அமைப்பிடம் கொடுத்தோம்.  அவர்கள் அவற்றை முறையாக கழிவுநீக்கம் செய்யும் நிறுவனங்களிடம் விற்றுவிட்டார்கள். அதிலிருந்து கிடைத்த பணத்தை  படிக்க வசதியில்லாத 17 ஆயிரம் ஏழை மாணவர்களின் கல்விக்குப் பயன்படுத்துகிறோம்.

நாங்கள் போட்டிக்காக  இந்தப் பணியில் ஈடுபட்டோம். ஆனால் போட்டி முடிந்துவிட்டாலும், நாங்கள் இந்த பணியில் இருந்து விலகிவிடவில்லை. தொடர்ந்து பயன்படாத எலக்ட்ரானிக் பொருள்களைச் சேகரித்து முறையாகக் கழிவுநீக்கம் செய்வதற்குத் தந்து வருகிறோம்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com