கல்லா அறிவும் கற்றல் அறிவும்...சுகி. சிவம்

தூக்கணாங்குருவிக்கு இத்தனை அழகாகக் கூடுக் கட்டும் தொழில்நுட்பத்தைச் சொல்லிக் கொடுத்தவர் யார்? எந்த Polytecnic -இல் அது இந்த வித்தையைப் படித்தது? அடைகாக்கத் தெரியாத குயிலுக்கு
கல்லா அறிவும் கற்றல் அறிவும்...சுகி. சிவம்

நீ... நான்... நிஜம்! 46
தூக்கணாங்குருவிக்கு இத்தனை அழகாகக் கூடுக் கட்டும் தொழில்நுட்பத்தைச் சொல்லிக் கொடுத்தவர் யார்? எந்த Polytecnic -இல் அது இந்த வித்தையைப் படித்தது? அடைகாக்கத் தெரியாத குயிலுக்கு, இனவிருத்தி கெடாமல் இருக்க, முட்டையைக் காகத்தின் கூட்டில் விட வேண்டும் என்ற திருட்டுத்தனம் எங்கிருந்து வந்தது? காகங்கள் இல்லாத நேரம் பார்த்து முட்டையை விடுவதால் திருட்டுத்தனம் என்கிறேன்! அது சரி! முட்டையில் இருந்து வந்த குயில்குஞ்சுகள் காக்கைக் குஞ்சுகளை (போட்டியாகக் கருதி) கீழே தள்ளி விட வேண்டும் என்கிற கள்ளத்தனத்தை எங்கிருந்து கற்றன? கற்பதற்கான வாய்ப்பே இல்லாத போது அவை பிறவிக்குணம் என்றுதானே கொள்ள வேண்டும்? இவையாவும் மரபணுக்களில் பொதிந்துள்ள மகத்துவம் என்கிறார் பேரா.க.மணி... தமது "மனித ஜினோம்' என்கிற புத்தகத்தில்... நான் படித்து முடித்ததும் பிரமித்துப்போனேன். படைப்பின் ரகசிய சுருதிகளை வரிக்கு வரி உள்ளடக்கிய அந்தப் புத்தகம், வாழ்க்கை பற்றிய என் பார்வையையே புரட்டிப்போட்டு விட்டது.
வாழ்வைக் கொண்டு செலுத்த எல்லா உயிரினங்களுக்கும் அறிவு தேவைப்படுகிறது. இந்த அறிவை இரண்டாகப் பகுத்து கற்ற அறிவு - கல்லா அறிவு என்று வகைப்படுத்த முடியும். தாய்ப்பறவையிடமிருந்து விதவிதமான வித்தைகளைக் குஞ்சுப் பறவைகள் கற்கின்றன. தாய்ப்பருந்து நெருக்கடிகளைச் சமாளிக்கும் வித்தைகளைக் குஞ்சுப் பருந்துக்குப் போதிக்கின்றது. அதேசமயம் தாயையே அறியாத, தாயுடன் வாழாத, குயில்கள் கல்லா அறிவை மரபணு மூலம் பெற்று வாழப் பழகி விடுகின்றன. ஒரு விழிப்படைந்த விவேகமான சமூகம் கல்லா அறிவுக்கும், கற்றலறிவுக்கும் சம மரியாதை கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறது. பேராசிரியர் மணி அழகாக எழுதுகிறார்: "நாம் மூளை கல்லா அறிவுக்காகத் தந்திருக்கும் முக்கியத்துவத்தை நாம் குறைத்து மதிப்பிட்டிருப்பது போல், விலங்குகளின் கற்றலறிவையும் கல்வித்திறனையும் நாம் குறைத்து மதிப்பிட்டிருக்கிறோம்'' என்கிறார். 
இப்போது நீங்கள், "எதற்காக இவன் திடீர் என்று மரபணு, அதன்மூலம் பெறும் கல்லா அறிவு என்பதை எழுதுகிறான்' என்று யோசிக்கக் கூடும். சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கைப் பயிலரங்குகள் நடத்தும் பலர், ஒரு பகுதியை அறவே அறியாமல் நடத்துகிறார்கள் என்ற கருத்தை வற்புறுத்தத்தான்... வேறென்ன காரணம்! மனிதனுடைய 7வது குரோமோசோமில் உள்ள ஒரு ஜீன் (மரபணு) அவனுக்கு விசேடமான உள்ளுணர்வை (Instinct) வழங்கி அதன்மூலம் அவனுக்கென்று தனி பண்பாட்டுக் கலாச்சாரத்தையும் வழங்குகிறது என்று விஞ்ஞானம் விளக்குகிறது என்று கேள்விப்பட்டால் நாம் திடுக்கிட்டுப் போக மாட்டோமா என்ன? பிறவிக்குணம் என்பது விலங்குகளுக்கு மட்டும் இல்லை... மனிதனுக்கும் இருக்கிறது என்கிற புரிதல் பல வகையில் நாம் விழிப்புணர்வு பெற உதவக் கூடும் என்றே நான் கருதுகிறேன். விலங்குக்கும் நமக்கும் உள்ள ஒற்றுமை என்ன? வேற்றுமை என்ன என்ற தெளிவு பிறக்க இந்த உண்மையை நாம் கண்டிப்பாக உணரவேண்டும். "மனித ஜினோம்' புத்தகத்தில் பேராசிரியர் க. மணி எழுதி இருப்பதை அப்படியே தருகிறேன். ஒரு முறைக்குப் பலமுறை கவனமாக வாசிக்க வேண்டிய பகுதி அது: 
"சிலந்திகள் வலை பின்னுகின்றன.. ஈசல்கள் புற்று கட்டுகின்றன. ஆசிரியர் சொல்லித் தராமலேயே அவை தமது உள்ளறிவால் அதாவது பிறவி அறிவால் செய்து கொள்கின்றன. அவற்றின் பிறவி அறிவு என்ன சொல்கிறதோ, அதைமீறி அவை எதுவும் செய்வதில்லை. செய்யவும் கற்றுக் கொள்வதில்லை. கரடி, பாம்பு, முதலை, கோழி, குதிரை போன்ற விலங்குகள் பிறக்கும் போதே பெற்ற அறிவின்படி வாழ்கின்றன. மூளையில் பதிக்கப்பட்ட குணாதிசயங்களின்படி சங்கிலிப் பிணைப்பால் விலங்கிடப் பட்டிருப்பதால்தான் அவற்றை நாம் விலங்கு என்கிறோம்'' என்று எழுதுகிறார். மனிதன் அப்படியா? பிறவி அறிவு தாண்டி "கற்றல்' என்கிற அதி ஆச்சரியமான ஆற்றல் பெற்றிருக்கிறான். தாய், தந்தை, ஆசிரியர், சமூகம், திரைப்படம், கணினி, உறவு, நட்பு, இப்படி எங்கெங்கிருந்தோ பலவற்றைக் கற்கும் பழக்கம் உடையவன் மனிதன். அவனுக்குள் இருக்கும் Freewill என்கிற சுதந்திர உணர்வு ஒவ்வொரு மனிதனை ஒவ்வொரு திசையில் உந்தித் தள்ளி விடுகிறது. 
மனிதன் எப்படி விலங்கிலிருந்து பீறிட்டெழுந்து விண்ணகம் நோக்கி விரைவில் உயர முடிகிறது என்ற கேள்விக்கு அந்தப் புத்தகம் விடையளிக்கிறது. அப்படியே தருகிறேன். வாசியுங்கள்:
"யானை என்னவெல்லாம் செய்யும் என்பதைப் பட்டியலிட்டுச் சொல்லிவிடலாம். ஆனால் ஒரு மனிதனால் இவ்வளவு தான் செய்ய முடியும் என்பதைப் பட்டியலிட முடியாது. அதனால் தான் உலகில் ஆயிரக்கணக்கான மொழிகளும், பண்பாட்டு, சடங்கு வேற்றுமைகளும் காணப்படுகின்றன. ஒரு காரியத்தைச் செய்வதற்கு முன்பே முழுவதையும் மனத்தில் எண்ணித் துணிந்து மனிதன் செயல்படுகிறான். விலங்குகள் அப்படிச் சிந்தித்து ஒரு காரியத்தை முடிவு செய்வதில்லை. உள்ளுணர்வு பிறப்பிக்கும் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தே செயல்படுகின்றன. விலங்குகள் சனிப்பிரதோஷத்திற்கு நோன்பிருப்பதோ, நெற்றியில் திருநீற்றுப்பட்டை இட்டுக் கொள்வதோ, திருமாங்கல்யம் அணிவதோ, நல்ல காரியம் செய்வதற்கு முன்பாகக் குளித்து முழுகுவதோ, வேள்வி செய்து, பூணூல் பூண்டு கொள்வதோ, கணவனை இழந்துவிட்டால் ஈமக்கிரியைகளை செய்து விதவைக் கோலம் பூணுவதோ கிடையாது. தான் பெற்ற அறிவை நூலாக எழுதி அச்சடித்து கடையில் விற்பதும் இல்லை' என்கிறார் பேரா.க. மணி. இதை அப்படியே Serious ஆக எடுத்துக் கொண்டு இவற்றை அவசியப்படுத்துவதாகச் சண்டைக்கு வரவேண்டாம். கலகலப்பான ஒரு Observation அவரது வர்ணனை என்று புரிந்து கொள்ள வேண்டும். 
இப்போது புத்தகத்தை நிறுத்திக் கொண்டு நம்முடைய சிந்திக்கிற திறனைப் பயன்படுத்துவோம். மனிதன் விலங்கா? என்று கேட்டால், ஓர் எல்லையில் "ஆம்' என்று தான் பதில் அளிக்க வேண்டி வரும். விலங்கு இல்லையா என்று கேட்டால் அதற்கும் பதில் "ஆம்' என்றுதான் வரும். இதுதான் மனித இனத்தின் அதி ஆச்சரியம். படைப்பின் அற்புதம். பிரபஞ்சத்தின் பேராற்றல்... ஆம்... இல்லை... என்று பதில் எதிர் எதிராகச் சொல்ல முடியாமல் "ஆம்' என்றே இரண்டிற்கும் சொல்ல வேண்டி இருக்கிறது. 
பசி, தாகம், காமம் இவை எல்லாமே விலங்கிற்கு வெறும் உடல் தேவைகள். உடலின் உந்துதல்கள். ஆனால் மனிதனுக்கு இவை உடல் சார்ந்த பிரச்னைகள் மட்டுமல்ல. அந்தஸ்து, கவுரவம், பாவபுண்ணியம், காவல்துறை, நீதிமன்ற தண்டனைகள் என்கிற சமய, சமூகப் பிரச்னைகள். மரபணுவின் தூண்டுதலால் ஒரு மனிதன் ஒரு செயலைச் செய்ய முற்பட்டாலும் அவனது கற்றல் அறிவு, சமூகப் பொறுப்பு, மான அவமானம் குறித்த கவனம், இவையெல்லாம் கூட செயல் மீதான மறு தீர்மானத்திற்குக் காரணிகள் ஆகின்றன. கட்டுக் கடங்காத காமம் ஏற்பட்டு ஒரு பெண்ணைக் கற்பழிக்கக் கூட தயங்காத காமுகர்கள், குறுக்கே தன் மனைவியோ தாயோ வந்துவிட்டால் ஏன் தடுமாறுகிறார்கள்? எல்லாரும் அப்படி இல்லை என்றாலும் ஒரு சிலருக்கு இந்தத் தடுமாற்றம் உண்டுதானே? இவையெல்லாம் விலங்கு நிலையில் இருந்து சமூகம் பரிணாமம் அடைந்து கொண்டிருத்தலின் வெளிப்பாடு. 
விலங்குகள் மனிதனைப் பயத்தாலோ, பசியாலோ நெருங்குமே ஒழிய, பிடித்து வைத்து பிழைப்பு நடத்தலாம்... காட்சிப் பொருளாக்கிக் காசு சம்பாதிக்கலாம் என்றெல்லாம் நெருங்குவதில்லை. ஏன்? எந்த ஈயும் தவளையும் மனிதனைப் பிடித்து சோதனைச் சாலையில் அடைத்து வைத்து நோய்களையும் மருந்துகளையும் கண்டறிவதில்லை. பன்றிகளின் பான்கிரியாûஸ அறுத்து மனிதனுக்கு இன்சுலின் கொடுத்து, சர்க்கரையால் சாக இருந்தவனின் சர்க்கரையைச் சாகடிக்க முடியும் என்று பன்றிகள் கண்டறிந்ததில்லை. ஆனால் இவை அனைத்தையும் மனிதன் செய்திருக்கின்றான். பாதிவிலங்கு... பாதிமனிதன்... சேர்ந்து செய்த உருவம் என்று மிருகங்கள் பாட்டு படிப்பதில்லை. மனிதனால் குதிரை போல் ஓடமுடியவில்லை. ஆனால் குதிரை வேகத்தைப் பெற குதிரைமீது உட்காரலாம் என்று மனிதனுக்கு மட்டுமே தோன்றியது. ஆச்சர்யம் இல்லையா? நாம் விலங்கும் கூட... ஆனால் விலங்கு மட்டும் அல்ல என்று விளங்கிக் கொள்ள வேண்டும். 
ஒரு வேடிக்கைக் கதை... முரட்டுக் குதிரைகளை விரைவாக ஓட்டும் போட்டியில் கலந்து கொள்ள முடிவு செய்த இருவர், எதற்கும் திறமைகளைத் தாண்டி ஜெயிக்க வேண்டி வந்தால் உதவட்டும் என்று ஒரு மந்திரவாதியிடம் உதவி கேட்டனர். அவர் ஒரு மத்து, விளக்குமாறு, செருப்பு மூன்றையும் மந்திரித்துக் கொடுத்தார். குதிரை மெதுவாகப் போனால் மத்தால் ஒரு தட்டு தட்டினால் வேகம் இரண்டு மடங்காகும் என்றார். அது போதாத போது விளக்கு மாற்றால் அதன் தலையில் ஒரு தட்டு தட்டினால் வேகம் இன்னும் இரண்டு மடங்காகும் என்றார். முடிவில் ஜெயிக்கப்போட்டி கூடிவிட்டால் செருப்பால் அதன் தலையில் மூன்று அடி போட்டால் வேகம் கட்டுக்கடங்காமல் பன்மடங்காகும் என்று விளக்கி இருவருக்கும் மத்து, விளக்குமாறு, செருப்பு ஆளுக்கு ஒன்று கொடுத்தனுப்பினார்.
முதல் நபர் தோற்றுப் போய் திரும்பி வந்தார். இரண்டாம் நபரோ ஜெயித்துப் பரிசு கொண்டு வந்தார். இருவருக்கும் ஒரே அனுபவம் தான். மத்தால் தட்டிய போது குதிரைகள் பறந்தன. ஆனால் விளக்குமாற்றால் தட்டியதும் குதிரைபோன வேகத்தில் இருவரும் கீழே விழுந்துவிட்டனர். முதல் நபர் வழியின்றி திகைத்து நின்று தோற்றுப் போனார். இரண்டாம் நபரோ.. பளிச்சென்று செருப்பால் தன் தலையில் மூன்றுமுறை அடித்துக் கொண்டார். அவ்வளவுதான் குதிரையை விட வேகமாக ஓடத் தொடங்கினார். முன்னால் போய் குதிரை மீது ஏறிக்கொண்டார். கதை என்ன சொல்லுகிறது? என்ன தான் சொல்லிக் கொடுத்தாலும், பிரச்னை வருகிறபோது, சொந்த புத்தி என்ற ஒன்று இருப்பவர்கள் தான் ஜெயிக்கமுடிகிறது! 
நம்மிடம் கல்லா அறிவும் உண்டு. கற்றல் அறிவும் உண்டு. இதையும் தாண்டி சொந்த அறிவும் உண்டு என்பதை உணர வேண்டாமா? 
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com