பொறியியல் படிப்பு... தேவை... புதிய பார்வை!

உற்பத்தி சார்ந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கும் கல்வி முறையாக இல்லாமல் வேலை தேடி அலையும் வகையில் சில பொறியியல் பாடத்திட்டங்கள் இருப்பதால்,  அப்படிப்பட்ட  பொறியியல் கல்வி மேல் இருந்து
பொறியியல் படிப்பு... தேவை... புதிய பார்வை!

உற்பத்தி சார்ந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கும் கல்வி முறையாக இல்லாமல் வேலை தேடி அலையும் வகையில் சில பொறியியல் பாடத்திட்டங்கள் இருப்பதால்,  அப்படிப்பட்ட  பொறியியல் கல்வி மேல் இருந்து வந்த மோகம் படிப்படியாக குறைந்து வருகிறது.     

பொறியியலில் மாற்று கல்வி முறைகளை புகுத்தா விட்டால் இன்னும் சில ஆண்டுகளில் பொறியியல் பாடப்பிரிவுகள் என்பது வீணான கல்வி முறையாகக் கூட மாறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  

அன்று ஊருக்கு ஒருவரோ, இருவரோ மட்டுமே பொறியியல் படித்து வந்தனர். அன்றைய காலத்தில் தேவைக்கேற்ற பொறியியல் பட்டதாரிகள் இல்லாத நிலையில் படித்த பெரும்பாலானோருக்கு நல்ல ஊதியத்தில் உடனடியாக வேலை கிடைத்து வந்தது. 

ஆனால், இன்றோ நிலை வேறு. சிறிய கிராமத்தில் கூட பொறியியல் படித்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்காக உயர்ந்து விட்டது. தடுக்கி விழுந்தால் பொறியியல் பட்டதாரியின் வீட்டு முன்தான் விழ முடியும் என்ற வகையில் தெருக்கள்தோறும் பொறியியல் பட்டதாரிகள் நிறைந்து வழிகின்றனர். நிகழாண்டில் கூட தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் சுமார் 1 லட்சம் பொறியியல் இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தமிழகம் முழுவதும் சுமார் 509 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள 1,72,581 இடங்களுக்கான கலந்தாய்வு அண்ணா பல்கலை கழகம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டில் சுமார் 74,601 மாணவர்கள் மட்டுமே பொறியியல் படிப்புகளைத் தேர்வு செய்துள்ளனர்.

இதையடுத்து நிகழாண்டில் 97,980 இடங்கள் காலியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இத்தகைய போக்கினால் பல கோடி ரூபாய் முதலீட்டில் பொறியியல் கல்லூரிகள் தொடங்கியவர்கள் கல்லூரிகளை நடத்த முடியாமல் தவித்து வரும் நிலையும் உருவாகி வருகிறது. 

முன்பெல்லாம் பொறியியல் பட்டம் பெற்றால் மட்டுமே சாஃப்ட்வேர் நிறுவனங்களில் வேலை பெற முடியும் என்ற நிலை இருந்து வந்தது. மேலும், பெரிய நிறுவனங்களிலும் அத்தகைய பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போதோ அந்நிலை இல்லை. கலை அறிவியல் கல்லூரிகளில் கணினி சார்ந்த பட்டப் படிப்பு   முடித்தவர்களையும் பல நிறுவனங்கள் விரும்பி வேலைக்கு அமர்த்தி வருகின்றன.   

இதன் காரணமாக பொறியியல் படித்தவர்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொறியியல் படிப்புக்கு தொடர்ந்து மவுசு குறைந்து வருகிறது. 

பொதுவாக மற்ற கலை, அறிவியல் கல்லூரிகளில் இருப்பது போல் வெறும் ஏட்டளவு விஷயங்களே பொறியியலிலும் இருப்பதால் அதனால் பலன் எதுவும் இல்லை. பொறியியல் பிரிவு மாணவர்களுக்கு தியரியை விட செயல்முறைக்கு கூடுதல் கவனம் செலுத்தி பாடத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.  நேரடிப் பயிற்சிகளும் அளிக்கப்பட வேண்டும். அப்படி செய்தால் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் எளிதாக வேலை பெறவோ அல்லது புதிய நிறுவனங்களை உருவாக்கவோ முடியும். 

பொதுவாகவே புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி, அதன் மூலம் புதிய கண்டுபிடிப்புக்களை கண்டுபிடித்து சந்தைப்படுத்தும் தொழில்நுட்பங்களைப் பொறியியல் பாடத்திட்டத்தில் சேர்த்தால் மட்டுமே பொறியியல் படிப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். மேலும், பொறியியல் படித்தவர்கள் சுயதொழில்கள் தொடங்குவதற்கு ஏற்ற வகையில் போதிய அடிப்படையான விஷயங்களை பாடத்திட்டத்தில் கொண்டு வந்தால் மட்டுமே பொறியியல் பட்டதாரிகள் சுயமாக தொழில் தொடங்கவும், பல நூறு பேருக்கு வேலை வாய்ப்பும் வழங்க முடியும். வேலை வாய்ப்புக்களையும், புதிய தொழில்நுட்பங்களையும் உருவாக்கும் கல்வி முறையை உள்ளடக்கியதாக பொறியியல் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டால் மட்டுமே எதிர்காலத்தில் பொறியியல் பட்டம் கெளரவக்குறியீடாக மாறும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com