சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 

செளராஷ்டிரா எனும் சமூகத்தினர் 11- ஆம் நூற்றாண்டில்  தெற்கு குஜராத்தில் இருந்து  சோம்நாத் கோயில் வீழ்ச்சிக்குப் பிறகு இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு குறிப்பாக தென்னிந்தியாவுக்கு இடம் பெயர்ந்தனர்.
சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 

செளராஷ்டிரா எனும் சமூகத்தினர் 11- ஆம் நூற்றாண்டில்  தெற்கு குஜராத்தில் இருந்து சோம்நாத் கோயில் வீழ்ச்சிக்குப் பிறகு இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு குறிப்பாக தென்னிந்தியாவுக்கு இடம் பெயர்ந்தனர்.  இதே போன்று, இவர்கள் 13-ஆம் நூற்றாண்டில்  மகாராஷ்டிரா மாநிலத்தில்  உள்ள தேவகிரியில் (இன்றைய தெளலாபாத்) வாழ்ந்து வந்ததாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன.  விஜயநகர சாம்ராஜ்ஜியம் 14 -ஆம் நூற்றாண்டில் விரிவு பெற்ற பின் செளராஷ்டிரா சமூகத்தினர் தென் இந்தியாவிற்கு வர அது வழி வகுத்தது. இவர்கள் மன்னர்களுக்கும், அரச குடும்பத்தினருக்கும் பட்டாடைகள் நெய்து தருவதில் சிறந்து விளங்கினார்கள். விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் 16-ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்கள் இவர்களை தஞ்சை நகரில் வரவேற்று அடைக்கலம் தந்தனர். பின்னர் 17-ஆம் நூற்றாண்டில் மதுரை திருமலை நாயக்கர் மஹால் அருகில் இவர்கள் வசிக்க நாயக்க மன்னர்கள் உதவினார்கள். 

செளராஷ்டிரா இனத்தினர் கி.பி. 500 -1000 -ஆவது காலகட்டங்களில் மண்ட்ஸர் மற்றும் தசபுரா  மாகாணங்களில்  (தற்போதைய குஜராத் - மகாராஷ்டிரா எல்லையில்) நூற்பு மற்றும் நெசவுத் தொழில் செய்து வந்தனர்.  இவர்கள் தசபுராவில்  சூரியக் கடவுளுக்கு ஒரு கோயில் கட்டி சூரியனைக் கடவுளாக வணங்கி வந்தனர். சமஸ்கிருத மொழியில் சூரியனை "செளரா' என்று அழைப்பார்கள். இவர்கள் சூரியனைக் கடவுளாகக் கருதி வழிபட்டதால், செளராஷ்டிரர் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் வசித்த அந்த இடம் தற்போது குஜராத்தில் செளராஷ்டிரம் என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் அரபிக் கடலோரத்தில் கிடைக்கும் பருத்தி, அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளில்  கிடைக்கும் பருத்திக்கு இணையாக இருந்தது.  இன்றும் ஆமதாபாத் அருகில் உள்ள தக்காண பீடபூமியில் கிடைக்கும் பருத்தியிலிருந்து மிகவும் மெல்லிய பட்டுநூல்கள் உருவாக்கப்படுகின்றன.  இதனை மன்னர்கள் மற்றும் அரச குடும்பத்தினருக்கும் தேவையான உடைகளையும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் தயாரித்து வந்தனர். எனவே இவர்கள் "பட்டுநூல்காரர்' என்று மக்களால் அழைக்கப்பட்டனர்.  

இச்சமூகத்தினர் மதுரைக்கு  வந்து ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் சமுதாயம் வளர்ச்சி பெற கல்வி ஒன்றுதான் மிக  இன்றியமையாதது எனக்கருதி 1886-ஆம் ஆண்டு காந்தாளு கே.சுந்தரராஜ பாகவதர், நடனகோபால் நாயகி ஆழ்வார், கே.எம்.எஸ். லட்சுமண ஐயர், பி.எஸ்.ஏ. கிருஷ்ண ஐயர் மற்றும் கே.வி.ராமாச்சாரி ஆகியோர் செளராஷ்டிர சமூகத்தின் முதல் பட்டதாரிகள். என்.எம்.ஆர். சுப்புராமன் இச்சமூகத்தில் முதல் பாராளுமன்றஉறுப்பினர். இவர்கள் போன்ற  பலரின் கூட்டு முயற்சியால் இன்று மதுரையில் எண்ணற்ற கல்விநிறுவனங்கள் உருவாக்கப்பட்டு இயங்கி வருகின்றன.

அவற்றில் முதன்மையாக 1886-ஆம் ஆண்டு  தொடக்கப்பள்ளி தோற்றுவிக்கப்பட்டது. 1900-ஆம் ஆண்டு  அது லோயர் செகண்டரி ஸ்கூல் ஆனது. 1904 -ஆம் ஆண்டு  இதே பள்ளி முதன் முறையாக அரசு அங்கீகாரம் பெற்றது. பள்ளி ஆரம்பித்த நாளில் இருந்து பெண் குழந்தைகள் படிப்பதற்கு அவர்களது வீட்டிற்கு மாட்டுவண்டி அனுப்பி பள்ளிக்கு அழைத்து வந்தார்கள். இது இப்பள்ளியின் சிறப்பம்சமாகும்.  இதே போன்று எண்ணற்ற ஏழை மாணவர்கள் படிப்பதனால் அவர்களுக்கு இலவசமாக  மதிய உணவு வழங்கி வந்தனர்.  1906-ஆம் ஆண்டு செளராஷ்டிரா சபா கவுன்சில்  குழு ஒன்றை அமைத்தனர். 1910-ஆம் ஆண்டு  இப்பள்ளியின் மொத்த மாணவர் எண்ணிக்கை 610 ஆக உயர்ந்தது. 1911-ஆம் ஆண்டு மெட்ராஸ்  பாங்க் - இங்கிலீஷ் கிளப் பில்டிங் இடம் பள்ளிக்காக  நகராட்சி அனுமதியுடன் வாங்கப்பட்டது.  1917 ஆம் ஆண்டு கல் கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. 1929-  இல் கல் கட்டடத்துக்கு பள்ளி இடமாற்றம் செய்யப்பட்டது. இந்த கட்டடம் இந்திய, ஆங்கிலேய, மொகலாய கட்டடக் கலையைப் பின்பற்றி கட்டப்பட்டது. 1942-ஆம் ஆண்டு சோமலிங்கபுரம் என்ற இடம் வாங்கப்பட்டது. 1948-ஆம் ஆண்டு செளராஷ்டிரா பெண்கள் பள்ளி தொடங்கப்பட்டது. அதனுடைய நிர்வாகம் செளராஷ்டிரா பெண்கள் வித்யா சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 1956-ஆம் ஆண்டு இந்தப் பள்ளி பொன்விழா கட்டடத்தை கல்வித்தந்தை கருமுத்து தியாகராசர் செட்டியார் திறந்து வைத்தார். இந்த ஆண்டில் பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 2400 ஆகும்.  1957-ஆம் ஆண்டு HARVEY READING ROOM கே.எம்.எஸ். லட்சுமண ஐயரால் திறந்து வைக்கப்பட்டது.  அதே ஆண்டு  SECRETARIAL PRACTICE AND TEXTILE TECHNOLOGY என்ற புதிய துறையை உருவாக்கினர்.  பள்ளி மல்டி டிசிப்ளினரி (பல ஒழுக்கநிலை பள்ளி) பள்ளியாக மாற்றப்பட்டது. இதனை என்.எம்.ஆர்.சுப்புராமன் 1958 -ஆம் ஆண்டு இதற்கென தனி கட்டடத்தை  டி.வி. கிருஷ்ண ஐயர் நினைவாகத் திறந்து வைத்தார்.  1959 -ஆம் ஆண்டு மதுரை செளராஷ்டிரா சபை பதிவு செய்யப்பட்டது.  1966- ஆம் ஆண்டு சி.ஆர். ராமாச்சாரி ஹாலை அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் சேஷன் திறந்து வைத்தார். 

1979-ஆம் ஆண்டு செளராஷ்டிரா மழலையர் பள்ளி திறந்து வைக்கப்பட்டது. 1986 -ஆம் ஆண்டு இப்பள்ளியில் படிக்கக் கூடிய மாணவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரமானது. செளராஷ்டிô ஆரம்பப் பள்ளியின்  நூற்றாண்டு விழா 1994 - இல் கொண்டாடப்பட்டது. 2003 -ஆம் ஆண்டு  பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி  இலவசமாக வழங்கப்பட்டது. 

தற்போது இப்பள்ளியின் குழுவானது 5 கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கிறது. இந்தப் பள்ளி இன்றும் செளராஷ்டிரா சமூகத்தினரைத் தாண்டி மற்ற சமூகத்தினருக்கும் சம வாய்ப்பளிக்கிறது. சாதி, மத, வேறுபாடு இன்றி  ஏழை-பணக்காரர் வித்தியாசமின்றி எல்லாருக்கும் கல்வியால் சம வாய்ப்பளித்து - தங்கள் சமூகத்தினருடன் மற்ற சமூகத்தினரையும் அரவணைத்துக் கொள்கிறது.  குறிப்பாக, என்.எம்.ஆர். சுப்புராமன்  காந்திய வழியில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். இவரை "மதுரை காந்தி' என்று எல்லாரும் அழைத்தனர். இவர் இந்த பள்ளியில் படித்தவர்.  உயர் கல்வியை ரவீந்திரநாத் தாகூரால்  சாந்திநிகேதனில் தொடங்கப்பட்ட "விஸ்வபாரதி கல்லூரி' யில் முடித்து பட்டம் பெற்றார்.  இவர், 1937 மற்றும் 1946 -ஆம் ஆண்டுகளில் சென்னை மாகாண சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  1962 -ஆம் ஆண்டு மதுரை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். இவர் செளராஷ்டிரா பள்ளிகளின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்களில் சிலர் குறிப்பிடத் தக்கவர்களாக விளங்குகின்றனர். 

இப்பள்ளியில் தொடர்ந்து 100 ஆண்டுகளாக மாணவர்களுக்கு  இலவச மதிய உணவு வழங்கப்பட்டு வருவது சிறப்புக்குரியது. 

இப்பள்ளியில்  நாட்டு நலக் கல்வி, தேசிய சாரணர் இயக்கம், செஞ்சிலுவைச் சங்கம் போன்றவை இயங்கி வருகின்றன. இவை தவிர, எண்ணற்ற போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பள்ளியில் விளையாட்டுக்கென்று கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து, கூடைப்பந்து, கபடி, கோகோ போன்ற விளையாட்டுகளுக்கான மைதானங்கள் அமைந்துள்ளன. விளையாட்டுப் போட்டிகளின் மூலம் வெற்றி தோல்விகளைச் சரிசமமாகப் பார்க்கும் பார்வை மாணவர்களுக்கு ஏற்படுகிறது. 

இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட இப்பள்ளியின் வளர்ச்சி உதவுகிறது.  இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் உலகெங்கிலும் பலதுறைகளில் மிகச் சிறப்புடன் பணியாற்றி வருகின்றனர். 115 ஆண்டுகளாக இப்பள்ளி எந்த ஒரு தடையுமின்றி குறிப்பாக, ஏழை, எளிய மாணவர்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும் என்ற நோக்கத்துடன் இயங்கி வருவதால் இப்பள்ளி மிக உயர்ந்த நிலையை அடைந்துள்ளது. இக்கட்டுரையின் ஆசிரியர் இப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 10 -ஆம் வகுப்பு வரை பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

(தொடரும்)

கட்டுரையாசிரியர்: சமூக கல்வி ஆர்வலர் www.indiacollegefinder.org

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com