அரங்கம்: உதவும் உள்ளம்!

வாங்க வேதநாயகம், நல்லா இருக்கீங்களா? உங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சு... உடம்புக்கு முடியலையோ?
அரங்கம்: உதவும் உள்ளம்!

காட்சி - 1
இடம்:  கோயில் 
மாந்தர்: வேதநாயகம்,  நீலமணி (இருவரும் நண்பர்கள்)

நீலமணி: வாங்க வேதநாயகம், நல்லா இருக்கீங்களா? உங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சு... உடம்புக்கு முடியலையோ?
வேதநாயகம்: அதெல்லாம் ஒன்னுமில்ல நீலமணி.   மனசுதான் சரியில்லை. அதான் கோயிலுக்கு வந்தேன்.  
நீலமணி: என்னாச்சு  உங்க மனதுக்கு?
வேதநாயகம்: இப்பவுள்ள பிள்ளைகளப் பத்தியும் அவங்களோட எதிர்காலத்தைப் பத்தியும் நெனச்சாத்தான் ரொம்ப பயமாவும் கவலையாவும் இருக்கு.  நாம சொல்றத நல்லதையெல்லாம் எங்கே  காது கொடுத்துக் கேட்கறாங்க... அதுதான் ஆண்டவனிடம் முறையிட்டாலாவது பலன் கிடைக்குமான்னு வந்தேன். இந்தக் காலத்துத் தொழில்நுட்பம் அவங்கள என்னபாடு படுத்திக்கிட்டிருக்கு... இது எதுல  கொண்டுபோய் விடப்போகுதோ தெரியல நீலமணி.
நீலமணி: நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மைதான் வேதநாயகம். எல்லா வீட்டிலேயும் இதே நிலைமைதான்.  இதைப் பத்தி மனசுக்குள்ள போட்டு ரொம்ப நாளா நானே குமஞ்சிகிட்டிருந்தேன்,  நீங்க அதை வாய்விட்டுச் சொல்லிட்டீங்க, அவ்வளவுதான்!  பெரியவங்க ஒழுங்கா இருந்தாதானே  பிள்ளைங்க ஒழுங்கா இருப்பாங்க... பெரியவங்களே சதா சர்வ காலமும் செல்போனும் கையுமா  அலைஞ்சா,  சின்னவங்க  என்ன செய்வாங்க?  
வேதநாயகம்: அதுக்காகப் படிக்கிற புள்ளைங்க,   படிப்பையும், கண்ணையும், புத்தியையும் கெடுத்துகிட்டு இப்படி ராப்பகலா செல்போனை வெச்சு நோண்டிகிட்டிருந்தா பார்க்க நல்லாவா இருக்கு? அவங்க ஆரோக்கியம் கெட்டுப் போகுதுல்ல... இதையெல்லாம் சொன்னா நான் பொல்லாதவனா ஆயிடுறேன். முதியோர் இல்லத்துல கொண்டுபோய் தள்ளிடுவாங்க.... காலம் ரொம்பவே கெட்டுப் போச்சு... 
நீலமணி:  மனசு சரியில்லையின்னு சொன்னீங்களே... உங்கப் பேரப்பிள்ளைதானே காரணம்...?
வேதநாயகம்: பேரப்பிள்ளையா? பெத்த பிள்ளையே சரியில்லைங்கறேன். நேரத்துக்குத் தூங்கறதில்லை, நேரத்துக்கு எழுத்திருக்கிறதில்லை, நேரங்கெட்ட நேரத்துக்கு சாப்பாடு.  அவனே அப்படீன்னா... அவன் புள்ள எப்படி இருப்பான்? அப்பாவும் புள்ளையுமா ஆளுக்கொரு  ரூம்ல  செல்போனை வச்சுக்கிட்டு நள்ளிரவு 2, 3  மணி வரை கூத்தடிக்கிறாணுங்க. கேட்டா,  ஃப்ரீ வைபை வீணாவுதாம்.  நம்ம பெத்த பிள்ளையே நாம சொல்ற பேச்சைக் கேட்கலை; பேரப்பிள்ளையைக் குத்தம் சொல்லி என்ன லாபம்? நம்ம காலத்துல, இருந்த அந்த மூனும் இந்தக் காலத்துப் பிள்ளைகளிடம் எங்கே இருக்கு நீலமணி?  சரி நான் கிளம்பறேன்...
நீலமணி:  கவலைப்படாதீங்க... அவங்க இன்னும் அனுபவப் பாடம் படிக்கலை போலிருக்கு, அதைப் படிச்சா எல்லாம் சரியாயிடும்.  காலமும் நேரமும்தான் எல்லாத்துக்கும் பதில் சொல்லும்....

காட்சி -2
இடம்: வேதநாயகத்தின் வீடு
மாந்தர்: வேதநாயகம், பேரன் தினேஷ், 
மகன் சுரேஷ், நீலமணி

(வேதநாயகத்துக்கு உடல் நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டு, நீலமணி,  வேதநாயகத்தைப் பார்க்க வந்து அவர் வீட்டுக் கதவைத் தட்டுகிறார்.  பேரன் தினேஷ் கையில் செல்போனைப் பார்த்தபடியே வந்து கதவைத் திறந்துவிட்டு "வாங்க'  என்றுகூடச் சொல்லாமல் உள்ளே செல்கிறான். படுக்கையிலிருந்து தட்டுத் தடுமாறி எழுந்து வந்து நீலமணியை வரவேற்கிறார் வேதநாயகம்)
நீலமணி: உடம்புக்கு என்னாச்சு?
வேதநாயகம்:  சுகர் கொஞ்சம் ஏறிப்போச்சு...  அதோடு ஜலதோஷம். 
நீலமணி: டாக்டரிடம் போனீங்களா?
வேதநாயகம்: கூட்டிட்டுப் போக யார் இருக்கா இங்கே...? அந்த ரூம்ல ஒருத்தனும் இந்த ரூம்ல ஒருத்தனுமா செல்போனில் மூழ்கிக் கிடக்கறாங்க... மருமகள் அவ அம்மா வீட்டுக்குப் போயிருக்கா.  சுடு தண்ணி வச்சுத்தரச் சொல்லி என் பிள்ளையிடம் கேட்டு இரண்டு மணி நேரமாகுது.  காதில் வாங்கினதா தெரியலை... 
நீலமணி:  வாங்க,... நான் டாக்டரிடம் கூட்டிகிட்டுப் போறேன்...
வேதநாயகம்: வேண்டாம் நீலமணி... மாத்திரை போட்டிருக்கேன், ஓய்வெடுத்தா சரியாயிடும்.
(அப்போது வேதநாயகத்தின் மகன் சுரேஷ், தன் மகன் தினேஷை பலமுறை கூப்பிட்டும் அவன் ஏன் என்றுகூடக் கேட்கவில்லை. செல்போனில் மூழ்கிப் போயிருந்தான். அவன் தன் தந்தையை மெல்லிய குரல் கொடுத்துக் கூப்பிட்டவுடன் வேதநாயகம் தட்டுத்தடுமாறி எழுந்திருந்து தன் மகன் அறை நோக்கி ஓடினார்.)
வேதநாயகம்: என்னப்பா சுரேஷ்... ஏன் கூப்பிட்டே... உடம்புக்கு என்ன செய்யுது? 
சுரேஷ்: ரொம்ப மயக்கமா வருதுப்பா.... (என்று கூறியபடி உடனே மயங்கி விழுந்தான்) 
(வேதநாயகம் பதறிப்போனார். தன் உடல் நிலையைக்கூட பொருட்படுத்தாமல் நீலமணியின் உதவியுடன் உடனே ஆட்டோவை வரவழைத்து,  சுரேஷை  டாக்டரிடம் கூட்டிச் சென்றார்)

காட்சி- 3
இடம்:  மருத்துவமனை (சுரேஷ் படுக்கையில் படுத்திருந்தான்)

மாந்தர்: டாக்டர், வேதநாயகம்,  நீலமணி, சுரேஷ், பேரன் தினேஷ்.
வேதநாயகம்: டாக்டர் என் மகனுக்கு என்னாச்சு?
டாக்டர்: உங்க மகன் உடலளவிலும் மனதளவிலும் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கார். சாப்பாடு, தூக்கம் இரண்டும் நேரா நேரத்துக்கு இல்லைன்னு தெரியுது. அதனால 35   வயசுலயே அவருக்கு டயாப்பட்டீஸ் வந்திருச்சு. அளவு 400க்கும் மேல இருக்கு. இனிமேலாவது கவனமா இருக்கச் சொல்லுங்க...
வேதநாயகம்: அவன் என்னை பார்த்துக்கிற வயசுல நான் அவனைப் பார்த்துக்கணுமா டாக்டர்? மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கு....
(டாக்டர், வேதநாயகத்தின் தோளைத் தட்டிக் கொடுத்துவிட்டுக் கிளம்பினார். இருவரும் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான் சுரேஷ்)
சுரேஷ்: என்னை மன்னிச்சுடுங்கப்பா, நீங்க  சொன்னபோதெல்லாம் நான் கேட்காததால்தான் இப்ப அனுபவிக்கிறேன். இந்த வியாதி என் மகனுக்கும் வந்துடுமா? 
வேதநாயகம்:  நீ அனுபவிக்கிறது மட்டுமில்லாம  உன் மகனுமா இதை அனுபவிக்கணும்? வேணாம்பா... அவன் அனுபவிக்காம இருக்கணும்னா அது உன் கையில்தான் இருக்கு....
சுரேஷ்: என்னப்பா சொல்றீங்க..?
நீலமணி: அதை நான் சொல்றேன் தம்பி.  ஒரு பொருள் நமக்கு அவசியம் தேவைப்படும்போது மட்டும்தான் பயன்படுத்தணும். ஆனால், நீயும் உன் மகனும்  வீட்டில் என்ன நடக்கிறது என்றுகூடத் தெரியாமல்  செல்போனில் சதா சர்வ காலமும் மூழ்க்கிடக்கறீங்க... விளைவு உன் மகன் ஐந்தாவது படிக்கும்போதே கண்ணாடி போட்டுவிட்டான், 35 வயதுக்குள் உனக்கு டயாபட்டீஸ் வந்துடுச்சு. தம்பி, உங்க அப்பா அடிக்கடி என்னிடம் ஒன்னு சொல்வாரு. அது என்ன தெரியுமா?  "நம்ம காலத்துல இருந்த அந்த மூணும் இப்போ இல்லை நீலமணின்னு' சொல்வாரு. அந்த மூனு என்னன்னு உங்க ரெண்டு பேருக்கும் தெரியுமா?  பணிவு, தொண்டு, கீழ்ப்படிதல்தான் அந்த மூன்றும். இதெல்லாம் எங்க காலத்தில் இருந்தது. இப்போது தேடவேண்டியிருக்கு. 
முதலில் உன்னிடம் இருந்தால்தானே உன் மகனிடமும் அது இருக்கும்? உன் தந்தை சொல்வதைப் பணிவுடன் கேட்டு, கீழ்ப்படிந்து அவருக்கு நல்ல முறையில் நீ தொண்டு செய்திருந்தால், அதைப் பார்க்கும் உன் மகனும் அதையே கற்றுக் கொள்வான். ஆனால் நீ...! அதுதான் நீ கூப்பிட்டவுடன் உன் மகன் உதவிக்கு ஓடிவரவில்லை. ஆனால்,   உடல்நிலை சரியில்லாதபோதுகூட , உன் தந்தைதான் நீ கூப்பிட்டவுடன் ஓடிவந்தார். இனிமேலாவது புரிந்து கொண்டால் நல்லது... 
(நீலமணி கூறியதைக் கேட்டு சுரேஷ் தலைகுனிந்தபடி தன் தந்தையின் கைகளைப் பற்றி மன்னிப்புக் கேட்டான்)
தினேஷ்: தாத்தா என்னையும் மன்னிச்சுடுங்க தாத்தா. அப்பா நீங்களும் என்னை மன்னிச்சுடுங்க... இனிமே இந்த மூணையும் நான் மறக்கவே மாட்டேன்''
(தாத்தா பேரனை அணைத்துக் கொண்டார். நீலமணி, வேதநாயகத்தைப் பார்த்துச் சிரித்தார். வேதநாயகம் தன் மனச்சுமை குறைந்ததை உணர்ந்தார்)

-திரை-

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com