தென்னை மரம்!

நான் தான்  தென்னை  மரம் பேசுகிறேன்.  என்னுடைய தாவரவியல் பெயர் கோக்கஸ் நியூசிஃபெரா ஃபைகஸ்.
தென்னை மரம்!


நான் தான்  தென்னை  மரம் பேசுகிறேன்.  என்னுடைய தாவரவியல் பெயர் கோக்கஸ் நியூசிஃபெரா ஃபைகஸ்.  நான் எரிக்கேசியோ குடும்பத்தை சேர்ந்தவன்.  நான் செழுமை, வளமை, வெற்றி ஆகியவற்றின் அடையாளம். சங்க நூல்கள் என்னை "தெங்கு' என்றும் கூறும்.  எனக்கு  "தாழை' என்ற பெயரும் உண்டு.  நான் வேரில் நீர் வாங்கி உச்சியில் உங்களுக்கு இளநீர் தருகிறேன்.  என்னிடமிருந்து கிடைக்கும் அனைத்து பொருள்களும் நீங்கள் அன்றாடம் பயன்படுத்துபவைகளாகவே உள்ளன. 
என்னுடைய பட்டைகள், காய், ஓடு, நார், தண்டு என அனைத்து உறுப்புகளும் உங்களுக்குப் பயன்படும்.  என் பயன் கருதி தென்னிந்திய மக்கள் என்னை அதிக அளவில் வளர்க்கிறார்கள்.  லட்சத்தீவுகள், அந்தமான் தீவுகள், ஓடிஸாவிலும் என்னை அதிக அளவில் நீங்கள் காணலாம்.  நான் 15 - 30 மீட்டர் உயரமாக வளரும் தன்மையன்.  என்னை ஒரு முறை நீங்கள் வளர்த்தால் நான் உங்களுக்கு வம்சம் வம்சமாக பலன் தருவேன்.  அதனாலேயே, என்னை  "தென்னம்பிள்ளை' என்றும் அழைக்கிறார்கள்.  
குழந்தைகளே, என் பயன் கருதியே மகாகவி பாரதியாரும்,  "காணி நிலம் வேண்டும் பராசக்தி, அங்கு கேணி அருகினிலே தென்னை மரம் கீற்றும் இளநீரும் பத்து பன்னிரன்டு தென்னையும் பக்கத்திலே வேணும்' என பாடியிருக்கிறார்.   சிவபெருமானின் அடையாளமாக தேங்காய் கருதப்படுகிறது. இதில் மூன்று கண்கள் இருப்பதால் முக்கண்ணனின் அம்சமாகவே தேங்காய் போற்றப்படுகிறது.  நான் இறைவனுக்குப் படைக்கும் பிரதான நிவேதனப் பொருளாகவும் இன்றளவும் இருக்கிறேன்.  மகாலட்சுமியின் சின்னமாகவும் நானிருக்கிறேன். 
    நான் கொடுக்கும் தேங்காய் இல்லாத உணவுப் பொருள்களே இல்லை என்று சொல்லலாம்.  என் எண்ணெய் உணவுப் பொருளாகவும், எரிபொருளாகவும், குழம்புக்கு சுவையூட்டவும் உதவுகின்றன.  என் தேங்காயும், அதன் தண்ணீரும் உங்களின்  ஜீரண மண்டலத்தை சுத்தமாக்குவதோடு, வயிறு  இறக்கம், நாவறட்சி, மயக்கம், படபடப்பு, இதயத் துடிப்பு  அதிகரிப்பு ஆகியவற்றை குணப்படுத்த உதவுகிறது.  என் வேரை கசாயமிட்டு பருகினால், படை, சொறி போன்ற தோல் நோய்கள் குணமாகும்.  
நான் கொடுக்கும் இளநீர் உங்களின் உடல்சூட்டை தணிக்கும். அதில் பொட்டாசியம், மெக்னிசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ்,  தாமிர, கந்தக இரும்புச் சத்து வைட்டமின்கள் உள்ளன. கொழுப்பு சத்து துளியும் இல்லை.  சிறுநீரக, குடல் தொற்று நோய்கள், வயிற்றுப் போக்கு ஆகியவற்றுக்கு இளநீர் அருமருந்து. குழந்தைகளே, கண்ணதாசன் ஐயாவும், பிள்ளையைப் பெத்தா கண்ணீரு, தென்னையை வெச்சா இளநீரு என பாடியிருக்கிறார். ஹஸ்த நட்சத்திரம் 2-ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு விருட்சமாக ஜோதிடத்தில் தென்னை மரம் குறிப்பிடப்பட்டுள்ளது. 
குழந்தைகளே, நான் நாகப்பட்டினம் மாவட்டம், திருத்தெங்கூர் அருள்மிகு வெள்ளிமலைநாதர், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, காவிரி ஆற்றுக்கு வடக்கு கரையிலுள்ள வடகுரங்காடுதுறை அருள்மிகு தயாநிதீஸ்வரர் ஆகிய திருக்கோவில்களில்  தலவிருட்சமாக உள்ளேன். மரங்கள் நிழல் தரும், சாலைகளில் மலர் தூவும், இலைகளை உதிர்க்கும், பறவைகளுக்கு இடம் தந்து வசந்தம் படைக்கும். மீண்டும் சந்திப்போம் குழந்தைகளே !
(வளருவேன்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com