அரங்கம்: அன்பு

இப்போ கண்ணைத் திறக்கட்டுமா?
அரங்கம்: அன்பு

காட்சி : 1,    
நேரம் : காலை 7. 50,   இடம் : அனிஷாவின் வீடு,   மாந்தர் :  அனிஷா, செண்பகவல்லி.

(அனிஷா கண்களை மூடியபடி கண்ணாடியின் முன் அமர்ந்திருக்கிறாள். செண்பகவல்லி அவளுடைய கூந்தலைப் பிண்ணுகிறார்.)
அனிஷா : இப்போ கண்ணைத் திறக்கட்டுமா?
செண்பகவல்லி : ஒரு நிமிஷம் இரு..
அனிஷா :  மறுபடியும் ஒரு நிமிஷமா.. ?, ம்மா .. மித்ரா வீட்டுக்குப் போயிட்டு ஸ்கூலுக்கும் போகணும் .. மறந்துராதீங்க ..
செண்பகவல்லி : ஸ்úஸா.. கொஞ்ச நேரம் சும்மாயிருடி.. எனக்கும் இப்படி பண்ணுறது புதுசுதானே .. உன் முடியில நிறைய சிக்கு விழுகுது..
அனிஷா : ம்ம்ம்.. அம்மா..  குலு மணாலி போறதப் பத்தி அப்பாகிட்ட பேசுனீங்களா ?
செண்பகவல்லி : எங்க இன்னும் கேட்கலியே நினைச்சேன்... தினம் காலையில இத ஒன்னு சொல்லிர்றே .. மொதல்ல நீ போர்ட் எக்ஸாம ஒழுங்கா எழுதி முடி.. மத்ததெல்லாம் லீவுல பார்த்துக்கலாம்..
அனிஷா : நானும் எத்தனையோ வருஷமா கேட்டுட்டிருக்கேன்.. இந்த வருஷமாவது போனா நல்லாயிருக்கும்..
செண்பகவல்லி : ம்ம்... ஓ.கே.. இப்போ கண்ணைத் திறக்கலாம் ..
(அனிஷா கண்களைத் திறக்கிறாள்.)
அனிஷா :  ( வியப்பாக) வாவ்.. யூ ஆர் கிரேட்-ம்மா .. அப்படியே மித்ரா ஹேர்ஸ்டைல் மாதிரியே இருக்கு .. ஒயிட் ரோஸ் மட்டும் வெச்சுட்டா அவளேதான்..
செண்பகவல்லி : ஃப்ரிட்ஜ்ல ஒயிட் ரோஸ் இருக்கும் பாரு .. எடுத்து வெச்சுக்கோ ..
அனிஷா : ம்மா..  ஃபுல் ப்ளானோடதான் இருக்கீங்க ..
செண்பகவல்லி : சரி..  சரி..  போய் சீக்கிரம் ரெடியாயிட்டு வா .. புறப்படலாம்...
(அனிஷா எழுந்து நடக்கிறாள். செண்பகவல்லி கண்ணாடியைப் பார்க்கிறார்.) 

காட்சி : 2,
நேரம் : காலை 8. 20, இடம் : மித்ராவின் வீடு,   
மாந்தர் :  அனிஷா,  செண்பகவல்லி,  லஷ்மி,  மித்ரா,  தாரணி.

லக்ஷ்மி : வாங்க மேடம் .. வா அனிஷா..  ஹேய்.. புது ஹேர்ஸ்டைல் சூப்பர்.. அப்படியே மித்ரா மாதிரி இருக்க.. 
அனிஷா : தேங்க்ஸ் ஆண்ட்டி..  பர்த்டே பேபி  ரெடியா ?
லக்ஷ்மி : ம்ம்ம்.. காலையில சீக்கிரமாவே எழுந்து அலங்காரம் எல்லாம் பண்ணிட்டா..  இப்போ,  கொஞ்ச நேரத்துல வந்துருவா..  தாரணி வீட்டுக்குப் போயிருக்கா..  அவளையும் கூட்டிட்டு வர.. 
செண்பகவல்லி : தாரணி ?  யார் அது?
லக்ஷ்மி : பக்கத்துத் தெருவுக்குப் புதுசா குடிவந்திருக்காங்க..  ஒரு மாசம் இருக்கும்..
அனிஷா : ஆமா,  ம்மா..  எங்கிட்ட ஒரு தடவை சொல்லியிருக்கா.. 
(அவர்கள் உள்ளே சென்று அமர்கிறார்கள்.  மித்ரா வருகிறாள். )
மித்ரா : ஹேய்,  அனி..  வந்துட்டீங்களா ?
அனிஷா : ஹேப்பி பர்த்டே மித்ரா.. 
(அனிஷா ஒரு பரிசை நீட்டுகிறாள். மித்ரா அதைப் பெற்றுக்கொள்கிறாள். செண்பகவல்லி மித்ராவின் தலையை வருடுகிறார். )
மித்ரா : தேங்க்ஸ்டி..  வாவ்..  நீயும் இந்த மாதிரி பின்னல் போட்டுட்டியா..  சூப்பர்..  தினமும் இப்படியே வா..  ரெண்டு பேரும் ஒரே ஹேர்ஸ்டைல்ல ஸ்கூல் போலாம்.. 
(அனைவரும் சோஃபாவில் அமர்கிறார்கள்.  லஷ்மி  கையில் கேக்குடன் வருகிறார்.  மித்ரா வாசலை நோக்கி நிற்கிறாள். )
லக்ஷ்மி : அங்க என்னடி பார்த்துட்டிருக்க.. டைம் ஆகுது.. வா சாப்பிடலாம்.
மித்ரா : ஒரு நிமிஷம்மா....  தாரணி வர்றா.
(தாரணி கசங்கிய சீருடையில் வருகிறாள்.  சிறிய பரிசைக் கொடுக்கிறாள். அனைவரும்  டைனிங் டேபிளில் அமர்ந்து மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டு சாப்பிடுகிறார்கள். அனிஷா தாரணியைப்  பார்க்கிறாள்.)

காட்சி : 3, 
மாந்தர் : அனிஷா,  மித்ரா,  தாரணி.

(மித்ரா புத்தகபப் பையுடன்  வெளியே புறப்படுகிறாள். மித்ராவும் தாரணியும் பாடம் படிக்கிறார்கள்.  தாரணி சாலையில் நடந்து செல்கிறாள்.   மிதிவண்டியில் செல்லும் அனிஷா அவளைப் பார்க்கிறாள். )

காட்சி : 4, 
நேரம் : மாலை 6. 15,   இடம் : கடற்கரை, 
மாந்தர் :  அனிஷா,  செண்பகவல்லி, ராமநாதன் .

(ராமநாதன்  தொலைவில் நின்று அலையோடு விளையாடுகிறார்.  அனிஷாவும் செண்பகவல்லியும் கரையில் அமர்ந்திருக்கிறார்கள்.  இருவரது முகங்களிலும் களைப்பு தெரிகிறது.   கடல்நீர் அவர்களது பாதங்களைத் தொட்டுச் செல்கிறது. )

செண்பகவல்லி : கொஞ்ச நாளா நீ லீவுல மித்ரா வீட்டுக்குப் போறதில்லயே,  ஏன்?
அனிஷா :  வர வர அவ எல்லா சண்டேயும்   தாரணி வீட்டுக்கே போயிட்டிருக்கா ம்மா..  அவளுக்கு மேத்ஸ் நல்லா வருதாம்..  க்ளியரா சொல்லித் தராளாம்.. என்னையும் கூப்புடறா..
செண்பகவல்லி : நல்லதுதானே..  போ.. படி.. எக்ஸாம் நெருங்குதில்ல..  உனக்கு ரொம்ப உபயோகமா இருக்கும் ..
அனிஷா : இல்லம்மா..  நான் அங்க போகல.. எனக்கு அவளப் பார்க்கவே பிடிக்க மாட்டேங்குது. . அவ  ஒழுங்கா டிரஸ் பண்ணிக்கிறதேயில்ல..  டி.வி ஷோ,  கேம்ஸ்,  சினிமா எதைப் பத்தியும் அவளுக்கு ஒன்னும் தெரியறதில்ல..  ஒரே போர்...ம்ஹூம்..
செண்பகவல்லி : என்னடி காரணம்,  இதெல்லாம்! அவங்க இப்பத்தான் ஏதோ சொந்தமா கடை வெச்சிருக்காங்க..  பணம் சேர்ந்ததும் ஒழுங்கா மேக் அப் பண்ணிக்கப் போறா..  கொஞ்சம் ஃப்ரீ ஆனதும் மத்த விஷயங்களைத் தெரிஞ்சுக்குவா..  இந்தச் சின்ன விஷயத்துக்குப் போயி.. 
அனிஷா : விடுங்கம்மா..  உங்களுக்குப் புரியாது!
(வானத்தில் மேகங்கள் திரள்கின்றன.)

காட்சி : 5,
நேரம் : மாலை 7. 35, 
இடம் : ஆட்டோவின் உள்ளே, 
மாந்தர் :  அனிஷா,  செண்பகவல்லி, ராமநாதன் , ஓட்டுநர்.

(ஆட்டோ விரைகிறது. குளிர் காற்று வீசுகிறது. ராமநாதன் ஓட்டுநர் அருகில் அமர்ந்திருக்கிறார்.)
அனிஷா : ப்பா..  வீட்டுக்குப் போய் சமைச்சு சாப்பிடற வரைக்கெல்லாம் என்னால பசி தாங்க முடியாது.. எங்கேயாவது வெளியவே சாப்டுட்டுப் போலாம்..
செண்பகவல்லி : ஆமாங்க.. அவ சொல்றதும் சரிதான்.. 
ராமநாதன்  : ம்ம்ம்.. ஓ.கே. ஆனா,  இங்க எங்க நல்ல ஹோட்டல் இருக்குனு தெரியலியே..  டவுனுக்குள்ளேயே சாப்ட்டுப் பழகிட்டோம்.. மறுபடியும் திரும்பிப் போகணுமா ?
ஓட்டுநர் : சார்.. வழியிலதான் அலமேலம்மா கடை இருக்கு..  ரொம்ப நல்லா சமைக்கிறாங்க... வேணும்னா அங்க நிறுத்தட்டுமா?
(ராமநாதன் அனிஷாவைப் பார்க்கிறார். )
அனிஷா :  எதா இருந்தாலும் ஓ.கே.!
(ராமநாதன் செண்பகவல்லியைப் பார்க்கிறார்.)
செண்பகவல்லி :   ம்ம்ம்.. நானும் கேள்விப்பட்டிருக்கேன் .. போலாம்.
ராமநாதன்  : சரிங்க..  அப்ப அங்கேயே  நிறுத்துங்க !

காட்சி : 6,
நேரம் : இரவு 8 மணி,
இடம் : அலமேலுவின் உணவகம்.,   
மாந்தர் :  அனிஷா,  செண்பகவல்லி, ராமநாதன், தாரணி.

(மூவரும் உள்ளே நுழைகிறார்கள். உணவகம் ஆளரவமற்று இருக்கிறது.)
ராமநாதன்: என்னங்க..  யாராவது இருக்கீங்களா ?
(சமையல் அறையில் பாத்திரம் அலம்பும் சத்தம் கேட்கிறது.)
தாரணி :  ( குரல்) சார்,  ஒரு நிமிஷம்.. இதோ வந்துட்டேன்.. 
(தாரணி கைகளைத் துடைத்தபடி வருகிறாள்.)
தாரணி :  வாங்க சார்.. அம்மா வெளிய போயிருக்காங்க.. இப்போ வந்துருவாங்க. .. (அடையாளம் கண்டு)   ஹேய் அனிஷா.. 
அனிஷா :  ( சோர்வாக)  ஹாய்..
செண்பகவல்லி : தாரணி,  நீ எப்படி..  ஓ, இது உங்க கடைதானா.. ?
தாரணி : ஆமா,  மேடம்.. இந்த வாரம்தான்  இங்க ஷிஃப்ட் ஆனோம்.. என்ன சாப்பிடறீங்க ..? 
ராமநாதன்  : உங்க கடையில இன்னிக்கு என்ன ஸ்பெஷல் ?
தாரணி : அப்படி எதுவும் இல்லங்க,  சார். ஆனா,  ரோஸ்ட் நல்லாயிருக்கும் ...
ராமநாதன்  : சரி , அப்போ எல்லாருக்கும் அதே கொண்டு வா.. 
தாரணி : ஓ.கே. சார்.. பத்து நிமிஷத்துல சுடச்சுட சாப்பிடலாம்.. 
(தாரணி  வேகமாக உள்ளே செல்கிறாள்.)

காட்சி : 7,
நேரம் : இரவு  8.40, 
இடம் : அலமேலுவின் உணவகம்.,
மாந்தர் :  அனிஷா,  செண்பகவல்லி, ராமநாதன், தாரணி.

ராமநாதன்  :  ( சுவர்க் கடிகாரத்தைப் பார்த்து) மணி இப்போத்தான் எட்டே ஆகுதா.. ?
தாரணி : இல்லங்க , சார் . அந்த கடிகாரத்துக்கு செல் மாத்தணும்..
அலமேலு :  ( குரல்) தாரணி.. 
(அலமேலு துணிப்பை நிறைய பொருள்களுடன் நுழைகிறார்.
தாரணி அவரிடம் செல்கிறாள்.)
அலமேலு :  இந்தா இதையெல்லாம் கொண்டு போய் உள்ள வை.. (பையைக் கொடுக்கிறார்) வந்தவங்க ஆர்ட்டர் பண்ணிட்டாங்களா ?
ராமநாதன்  : சாப்பிட்டே முடிச்சுட்டோம்..  சூப்பர் காம்பினேஷன்..
தாரணி : அனிஷாவோட  ஃபேமிலி -ம்மா ..
(பெற்றுக்கொண்டு உள்ளே செல்கிறாள்.)
அலமேலு : ஓ..நல்லாயிருக்கீங்களா?  கொஞ்சம் கடைக்குப் போகவேண்டியிருந்தது..  அதான்..  பரவாயில்லங்க,  இன்னிக்கு நீங்க மட்டும்தான் தாரணியோட சமையலைச் சாப்டிருக்கீங்க.. 
செண்பகவல்லி : அப்ப அவதான் இங்க சமையலா ?
அலமேலு :  இல்லம்மா..  நான்தான்..  ஆனா,   அவ மத்த எல்லா வேலையும் செய்யறா..  இந்தப் பொண்ணுக்கு இதுக்கே நேரம் சரியாயிருக்கு.. சினிமாவா,..... விளையாட்டா ,  ஒண்ணும் இல்ல .. சீக்கிரமா சம்பளத்துக்கு ஒருத்தர போட்டுட்டு இவள விட்டுரணும்.. பாவம்.. 
தாரணி :  ( சட்டென்று வெளியே வந்து) ம்மா..  அதெல்லாம் எதுக்கு இவங்ககிட்ட சொல்லிட்டிருக்கே.. எல்லாம் நேரம் வரும்போது பாத்துக்கலாம்..  சாரி மேடம்...., எங்கம்மா எப்பவுமே இப்படித்தான்.. ம்ம்ம்..  நேத்து நான் உங்கள கோயில்ல பார்த்தேன்.. 
(அவர்கள் தொடர்ந்து பேசுகிறார்கள். அனிஷா தாரணியை மெய்மறந்து பார்க்கிறாள்.)

காட்சி : 8,   
நேரம் : இரவு 10. 50,   இடம் : அனிஷாவின் வீடு,
மாந்தர் :  அனிஷா,  செண்பகவல்லி.

(மழை பெய்யும் சத்தம் கேட்கிறது.)
(செண்பகவல்லி தண்ணீர் பாட்டிலை கீழே வைக்கிறார்.) அனிஷா விழித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறார். ) 
செண்பகவல்லி :  என்னடி..  இன்னும் தூங்காம முழிச்சிட்டிருக்கே,  ஒடம்பு கிடம்பு சரியில்லியா ?
அனிஷா : இல்லம்மா.. தூக்கம் வரலை அவ்ளோதான்..
செண்பகவல்லி :  ம்ம்ம்.. காலைல சொல்லலாம்னு இருந்தேன்.. இருந்தாலும் இப்பவே சொல்றேன்..  உனக்கு ஒரு ஹேப்பி நியூஸ்...
(அனிஷா அவரைப் பார்க்கிறார்.)
 செண்பகவல்லி :  இந்த வருஷ லீவுக்கு நாம குலு மணாலி போறோம்.. ப்ளான் ரெடி பண்ணியாச்சு..
அனிஷா :  (சுவாரஸ்யமின்றி) ஓ...
செண்பகவல்லி :  என்னடி.. ?  சந்தோஷமா இல்லியா ?
அனிஷா : ம்மா..  நான் ஒண்ணு சொல்லட்டுமா?
செண்பகவல்லி :  என்ன,  சொல்லு.. 
அனிஷா : ஏப்ரல் பதிமூணாம் தேதி தாரணிக்கு பர்த்டே வருதும்மா..  அப்போ அவளுக்கு ஒரு கிஃப்ட் கொடுக்கலாமா ?
செண்பகவல்லி :  ( வியப்புடன்) என்ன கிஃப்ட்?
அனிஷா : அவ தினம் ஸ்கூலுக்கு நடந்து போறாம்மா .. வேலையெல்லாம் முடிச்சுட்டுப் போறது கஷ்ட்டம்தானே-ம்மா ..
செண்பகவல்லி :  அதனால?  
அனிஷா : ஒரு புது சைக்கிள் வாங்கிக்கொடுத்திர்லாம்... அவ டெய்லியும் ரொம்ப தூரம் நடந்துபோறா..  நான் நிறைய வாட்டி பார்த்திருக்கேன்..
(செண்பகவல்லி அமைதியாக இருக்கிறார். )
அனிஷா : என்னம்மா யோசிக்கிறீங்க.?
செண்பகவல்லி :  பணம்?
அனிஷா : மணாலி ட்ரிப்ப கேன்ஸல் பண்ணிர்லாம். . அடுத்த வருஷம் போய்க்கலாம்.. 
(செண்பகவல்லி வாயடைத்துப் போகிறார்.  அவளை பெருமிதத்துடன் அணைத்துக்கொள்கிறார்.  )

(திரை)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com