மகாகவி பாரதியும் இசையும்!

இசை அதிசயமானது, அற்புதமானது, அருமையானது, அமரத்துவமானது. அனைத்து உயிர்களையும் ரசிக்க வைப்பது.
மகாகவி பாரதியும் இசையும்!

இசை அதிசயமானது, அற்புதமானது, அருமையானது, அமரத்துவமானது. அனைத்து உயிர்களையும் ரசிக்க வைப்பது. சங்க நூல்களிலிருந்து அனைத்து இலக்கியங்களும் இசை பற்றி, கருவிகள் பற்றிக் கூறியிருக்கின்றன.
 பண், ராகம், தாளம், ஓசை, சந்தம், லயம், சுருதி எனப் பல்வேறு அங்கங்களை உடையது இசை. கவிதை, பாடல் இவையும் இசையோடு இசைந்தவையே. மனத்தை ஒருநிலைப்படுத்தித் தூய்மையாக்கி இன்பம், சுகம், மகிழ்ச்சியை அள்ளியள்ளித் தருவதும் இசையே.
 கிரேக்க அறிஞர் சாப்பே கூறுவார்: "நல்லிசைக் கவிதை என்பது தெய்வமே; கவிஞனின் சிந்தனையில் நின்று பேசுவது' என்று. "எல்லா உயிரினங்களும் இசைக்கு மயங்கும்; தாவரங்களும் இசையால் வளரும்' என்று கூறியுள்ளனர்.
 சங்க இலக்கியக் காட்சி ஒன்றில், புலியை வென்று மீண்ட தலைவன், புலிப்போரில் ஏற்பட்ட காயங்கள் தந்த வேதனையால் வாடுகின்றான். அது கண்ட தலைவி இசைப் பாடல் பாடி அந்த வேதனை
 யைத் தீர்த்து வைத்தாளாம்.
 "பண் என்னாம் பாடற் கியைபின்றேல்'' - பாடலுக்கு இசை பொருந்தி வரவில்லை எனில், அதனால் பயனில்லை என்பார் திருவள்ளுவர். "பண்ணுக்கே ஓர் பழுதுண்டாயின் மண்ணே'' என்பார் மகாகவி
 பாரதியார்.
 "பொருந்திய மகளிரோடு வதுவையில் பொருந்து வாரும்
 பருந்தொடு நிழல் சென்றன்ன இயலிசைப் பயன் துய்ப்பாரும்''
 என்பார் கவிச்சக்கரவர்த்தி கம்பர். பாடலோடு இசை பருந்தொடு நிழல்போல இருக்க வேண்டுமாம். ""கீதம் இனிய குயிலே'' ; "மங்கையர் அமுத கீதம்'' என்பது மாணிக்கவாசகரின் திருவாசகம்.
 மகாகவி பாரதியார் சிறுகதை, நாவல், கவிதை, ஆய்வு, கட்டுரை, நாட்டுப்பாடலிசை, சந்தம், சிந்து - இப்படி எல்லாத் துறைகளிலும் தடம் பதித்து இனிமை சேர்த்துப் புதுமை செய்தவர். அனைத்து வகை படைப்புகளிலும் இசையின்பம் பற்றி அவர் நிறையவே
 கூறியுள்ளார்.
 "ஆசைதரும் கோடி அதிசயங்கள் வைத்ததிலே
 ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ
 காட்டு நெடுவானம் கடலெலாம் விந்தையெனில்
 பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா''
 ஓசையின் சுகத்திற்கு உவமையே இல்லை என்ற பாரதி, "பாட்டு ஒன்றே யாவினும் ஆச்சரியம்' என்கிறார். பாரதி தமது பாடல்களுக்கு ராகம், தாளம் அமைத்து இசையின்பம் தந்தவரல்லவா!
 "நண்ணும் பாட்டினொடு தாளம் - மிக
 நன்றாய் உளத்தழுந்தல் வேண்டும் - பல
 பண்ணில் கோடிவகை இன்பம் - நான்
 பாடத் திற நடைதல் வேண்டும்'
 கம்பர் சொன்னதைப் போன்று இசையோடு இணைந்த எல்லா அங்கங்களுடன் கூடிப் பாட அன்னையிடம் வேண்டுகிறார்.
 "மண்ணுல கத்துநல் லோசைகள் காற்றெனும்
 வானவன் கொண்டு வந்தான்
 பண்ணி லிசைத்தவ் வொலிக ளனைத்தையும்
 பாடி மகிழ்ந்திடுவோம்''
 உலகெங்கும் ஓசை, ஒலிகள் நிறைந்துள்ளன. அவற்றை இசையாக்கிப் பாடி மகிழ்வோம்
 என்கிறார்.
 "என்றும் கவிதையிலே நிலையாம் இன்பம் அறிந்தேன்''; "பண்ணு சுதி நீயெனக்கு பாட்டினிமை நானுனக்கு''; "இன்னிசைப் பாட்டினிலே யானும் பரவசமாய்'' இசையிலே ஆழ்ந்து போய் அதன் இன்பத்தை எல்லாம் நமக்களித்து சுகம் காண்கிறார்.
 ""கானப்பறவை கலகலெனும் ஓசையிலும்'' தொடர்ந்து பல்வேறு ஓசைகளைக் கூறி ""நெஞ்சைப் பறி கொடுத்தேன்'' என்றவர்,
 "ஏற்ற நீர்ப் பாட்டின் இசையினிலும்;
 நாளெல்லாம் நன்றொலிக்கும்
 பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன்''
 என்கிறார். ஆமாம், இவையெல்லாம் எதற்காக?
 "பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும்'' என்பதற்காக.
 எல்லாம் கூடி அனைத்து இசை வகைகளையும் கற்று நான் பாடத்திறனடைதல் வேண்டும் என்றவர், "எல்லாமே என் பாடல்களால் இவ்வுலக மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும்' என்றே வரம் கேட்கிறார். தமிழ்த் தொண்டர் மகாகவி பாரதி சாகா வரமே பெற்றுவிட்டார்.
 - கொ. மா. கோதண்டம்
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com