கவி பாடலாம் வாங்க - 43

ஆசிரிய விருத்தம் ஆறுசீர் முதல் எத்தனை சீராலும் அளவொத்த நான்கு அடிகளால் வருமென்பதைத் தொடக்கத்திலேயே பார்த்தோம்.
கவி பாடலாம் வாங்க - 43

10. ஆசிரிய விருத்தம் (1)
 ஆசிரிய விருத்தம் ஆறுசீர் முதல் எத்தனை சீராலும் அளவொத்த நான்கு அடிகளால் வருமென்பதைத் தொடக்கத்திலேயே பார்த்தோம். பிற்காலக் காப்பியங்களில் பெரும்பாலானவை ஆசிரிய விருத்தத்திலே அமைந்திருக்கின்றன. பழங்காலத்தில் தொல்காப்பியத்தின்படி கொச்சகம் என்று அடக்கிக் கொள்வதற்கு உரியனவாக உள்ள சில பாடல்கள் யாப்பருங்கலக் காரிகையின்படி ஆசிரிய விருத்தத்தில் அடங்குவனவாக இருக்கும். சிலப்பதிகாரத்தில் வரும் ஆற்று வரி, கொச்சகம் என்று பெயர் பெறும். ஆயினும் அது அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தின்பாற்படுவதைக் காணலாம்.
 "மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ வாடை யதுபோர்த்துக்
 கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி
 கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்த வெல்லாம் நின்கணவன்
 திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி'
 இந்த ஆற்றுவரிப் பாட்டு அரையடிக்கு இரண்டு மாவும், ஒரு காயுமாக வந்த அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாக இருப்பதைக் காண்க. இவ்வாறு வந்த ஆசிரிய விருத்தம் நாளடைவில் பலவகைச் சந்தங்களை உடையதாய்ப் பெருகிப் பரந்து வளர்ந்துவிட்டது. ஆறு, ஏழு, எட்டுச் சீர்களால் வரும் ஆசிரிய விருத்தங்களே சிறப்புடையன என்று கூறுவர்.
 "காவிரிக் கரையில் மோகைக் கடிநகர்ப் புறத்தே ஓர்சார்
 பூவிரித் திலகும் சோலை பொதுளிய காந்தக் குன்றம்
 நாவிரித் தமைந்த பாவில் வல்லவர்நவின்ற சீர்கொண்
 டோவியத் தகுதி பெற்றே உயர்ந்தது காண்பி ரன்றே'
 இது அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
 "வண்ணக் கடம்ப மலர்த்தாரான் வள்ளி யணையும் திருமார்பன்
 சுண்ணநீறு சுடர்முகங்கள் துலங்கு மோரா றுடையவள்ளல்
 உண்ணத் தெவிட்டாப் பேரமுத மொத்த பாவால் அருணகிரி
 திண்ணத்துடனே பாடஅருள் தேவன் என்றும் துணையாவான்'
 இதுவும் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
 "கஞ்சமலர் நான்முகனைத் தலைக்குட்டிச் சிறையிருத்தும் கந்த சாமி
 நெஞ்சமலர் அன்புடையோர்க் கெந்நாளும் துணையாகும் நேயன் தூயன்
 வஞ்சமலர் தருமனத்துச் சூரபன்மன் குலமுழுதும் மடித்த வேலன்
 தஞ்சமென அடிவணங்கிப் புகலடைந்தோர் தம்மடியே சார்து மன்றே'
 இதுவும் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
 "அம்மையே யப்பா ஒப்பிலா மணியே
 அன்பினில் விளைந்த ஆரமுதே
 பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
 புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
 செம்மையே யாய சிவபதம் அளித்த
 செல்வமே சிவபெருமானே
 இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
 எங்கெழுந் தருளுவ தினியே'
 இது எழுசீர்க் கழிநெலடி ஆசிரிய விருத்தம்.
 "சீதங்கொள் கடம்பலங்கல் மார்பி னானைத்
 திருமாலின் மருமகனைப் புலவர் பாடும்
 கீதங்கொள் பெருமானைச் சோதி வைவேல்
 கெழுமுதிருக் கரத்தானைச் சிறகடித்து
 நாதங்கொள் தனிச்சேவல் கொடியாக் கொண்ட
 நாயகனைத் தாயனைய அருளி னானைப்
 பாதங்கொள் பற்றென்னப் பற்றி னார்க்குப்
 பயனாய கடவுளினைப் பரவு வோமே'
 இது எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
 (தொடர்ந்து பாடுவோம்...)
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com