கவியரசரின் "வாழ்த்துப்பா'!

கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் மக்களின் மனங்களில் அன்றும், இன்றும், என்றும் நிலைத்து நிற்பவை. அக்காலத்தில் கவியரசரை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பும்
கவியரசரின் "வாழ்த்துப்பா'!

கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் மக்களின் மனங்களில் அன்றும், இன்றும், என்றும் நிலைத்து நிற்பவை. அக்காலத்தில் கவியரசரை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பும், அவர் பங்கேற்கும் கூட்டங்களில் கலந்துகொண்டு அவரது சொல் அருவியில் நனைந்து மகிழ்ந்த அனுபவம் எனக்குண்டு.
 ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கவியரசர் கண்ணதாசனின் கவிதைகளும், உரைப்பா வடிவில் அமைந்த கட்டுரைகளும், தரமான திரைப்படப் பாடல்களும் மக்களின் மனங்களில் அன்பையும், பண்பாட்டையும், வாழ்க்கைத் தத்துவங்களையும் பதிவு செய்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.
 கும்பகோணத்தில் நடைபெற்றுவந்த "முத்தமிழ் இளைஞர் மன்ற'த்தின் ஆண்டுவிழா மலருக்குக் கவியரசர் வழங்கிய வாழ்த்துப்பா ஓர் இனிய மலரும் நினைவுகளாகும்.
 1966-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ஆம் நாள் மாலை 5 மணி அளவில் கவியரசு கண்ணதாசனைச் சந்திக்க முத்தமிழ் இளைஞர் மன்றத்தின் செயலாளராகிய நானும், என் நண்பர்களும் சென்றோம். அன்று ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காகக் கவிஞர் கும்பகோணம் வந்து நகராட்சிப் பயணிகள் விடுதியில் தங்கியிருந்தார்.
 நாங்கள் கவிஞரை சந்திக்கப் பயணிகள் விடுதிக்குச் சென்றபோது, கல்லூரி மாணவர்கள் என்று எங்களை அவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டோம். பலரும் கவியரசரைச் சந்திக்கக் காத்திருந்தனர். ஆனால், முதலில் எங்களை அன்புடன் வரவேற்ற கவியரசர், தன்னை சந்திக்க வந்ததன் காரணம் பற்றிக் கேட்டார்.
 ""முத்தமிழ் இளைஞர் மன்றத்தின் ஆண்டு விழா மலருக்குத் தாங்கள் வாழ்த்துப்பா தரவேண்டும்'' என்று கூறினோம். மன்றத்தின் செயல்பாடுகள் குறித்தும், எங்கள் தமிழ் உணர்வு பற்றியும் அறிந்துகொண்ட கவியரசர் மிகவும் மகிழ்ந்து போனார்.
 அந்த நாள்களில் திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுத வேண்டி தயாரிப்பாளர்கள் கவியரசர் இல்லத்திற்குச் சென்று பல நாள்கள், பலமணி நேரங்கள் காத்துக்கொண்டிருப்பார்கள். திரைப் படங்களுக்குப் பாடல் எழுதும்போது கவிஞர் சொல்லச் சொல்ல உதவியாளர்தான் பாடல்களை எழுதுவார்.
 ஆனால், மாணவர்களாகிய எங்களின் வேண்டுகோளை ஏற்று உடனடியாக, எங்களிடம் இருந்த பேனாவை வாங்கி, எங்கள் மன்றக் கடிதத்தாளில் "வாழ்த்துப்பா' ஒன்று எழுதிக் கொடுத்தார். அழகான அந்த வாழ்த்துப்பாவை இரண்டு அல்லது மூன்றே நிமிடங்களில் எழுதிக் கொடுத்தது அதைவிடச் சிறப்பு.
 இந்நிகழ்ச்சி மாணவர்களாகிய எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக அமைந்தது. மாணவர்களிடம் அன்பு காட்டிய கவியரசரின் பண்பாடு போற்றத்தக்கதன்றோ! கவியரசர் வழங்கிய அந்த வாழ்த்துப்பா இதுதான்:
 "இதயத்தைத் தமிழுக் காக்கி
 இளமையை நாட்டுக் காக்கி(ப்)
 புதியதோர் உலகம் காண(ப்)
 புறப்படும் இளைஞர் கூட்டம்
 நதியென விரைந்து சென்று
 நலனெனும் கடலில் சேர
 இதயத்தால் வாழ்த்து கின்றேன்
 இளைஞர்தம் மன்றம் வாழ்க!'
 
 "முனைந்தெழும் முயற்சி கொண்டு
 முத்தமிழ் இளைஞர் மன்றம்
 வனைந்த ஓவியத்தின் வண்ணம்
 வாழ்வினைக் கலை வீடாக்கி
 தினந்தொறும் புதுமை சேர்த்து
 தினந்தொறும் உலகில் சேர்ந்து
 தினந்தொறும் உயர்ந்து வாழ(த்)
 திருவருள் புரிவ தாக!'
 ""நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை'' என்கிற கவியரசரின் தமிழுக்கு என்றுமே மரணமில்லை!
 -குடந்தை இளஞ்சேட்சென்னி
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com