இன அரசியல்-4: குடியம்- ஆதித் தமிழரின் வாழ்விடம் மற்றும் நுண்கற்கால தொழிற்சாலை அமைவிடம்

இன அரசியல்-4: குடியம்- ஆதித் தமிழரின் வாழ்விடம் மற்றும் நுண்கற்கால தொழிற்சாலை அமைவிடம்

பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் வாழ்ந்த பல சிறப்புமிக்க இடங்கள் அழிந்துவருகின்றன. அவ்வாறு அழிந்துவரும் புராதன மனித வாழிடங்களையும், பழங்கால சிற்பங்களையும் ஆராய்ச்சியாளர்களும், தொல்லியல் நிபுணர்களும் ஆய்ந்து அதைப் பாதுகாத்து வருகிறார்கள். இந்தக் குகையானது தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி நீர்த்தேக்கத்துக்கு அருகில் உள்ளது. இதுவொரு தொன்மையான குகைவாழிடம் ஆகும். தலைநகர் சென்னையிலிருந்து 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது முதலில் இங்கிலாந்து தேசத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளரான ராபர்ட் புரூஸ் பூட் என்பவரால் 1860களில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு இந்தியத் தொல்லியல் துறையினரால் இந்தப் பகுதி 1962-64க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் அகழாய்வு செய்யப்பட்டது.

குடியம் : ஆதித் தமிழரின் வாழ்விடம்!
 

குடியம் குகைகள், பழைய கற்கால மனிதர்களின் வாழிடங்களாக இருந்தவையென கருதப்படுகின்றன. ஒற்றையடிப் பாதையுடன், பச்சைப் பசேல் என காட்சியளிக்கும் மரங்கள், அடர்ந்த புதர்கள், மூலிகைச் செடிகள், கற்கால மனிதர்கள் பயன்படுத்திய உருளை கூழாங்கற்கள், ஒரே நேரத்தில் பலர் தங்கும்படியான குகைகள் என பல சிறப்புகளைக் கொண்டது. இந்தக் குகையில் அவர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ராபர்ட் புரூஸ் பூட்

இங்கிலாந்து நாட்டில், 1834ல், பிறந்தவர். நிலவியல் வல்லுனரான இவர், தொல்பொருள் ஆராய்ச்சியாளராகவும் திகழ்ந்தவர். பழைய கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடங்கள், அவர்களது ஆயுதங்களை கண்டறிந்து, இந்திய தொல் பழங்காலத்தின் தந்தை என்று, வரலாற்று அறிஞர்களால் அழைக்கப்படுகிறார். கடந்த 1858, செப்டம்பர் மாதம், தன், 24வது வயதில், மத்திய நிலவியல் ஆய்வுத் துறையில், நில அளவையாளராக (சர்வேயர்) தன் பணியைத் துவக்கினார். 

33 ஆண்டுகள் பணிபுரிந்து, 1891ல், முதுநிலை கண்காணிப்பாளராக ஓய்வு பெற்றார். இவரது ஆய்வு முழுக்க, முழுக்க சென்னை மாகாணத்திற்கு உட்பட்டே நடந்துள்ளது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இவரது முதல் ஆய்வு, சென்னை பல்லாவரம் பகுதியில் துவங்கியது. இங்கு, கற்கால மனிதர்கள், கற்களையே ஆயுதங்களாக பயன்படுத்தினர் என்பதை கண்டறிந்து, உலகிற்கு தெரியப்படுத்தினார். அதன்பின், திருவள்ளூர் மாவட்டம் (அப்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்தது) பூண்டி நீர்தேக்கத்திற்கு அருகே அத்திரம்பாக்கம் ஓடைப்பகுதி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டார்.

இங்கு, ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன், மக்கள் வாழ்ந்தனர் என்பதற்கான வரலாற்று ஆதாரங்களை கண்டறிந்தார். இந்த ஆயுதங்கள், சென்னை கற்கோடாரி மரபு வகையைச் சார்ந்தது. கற்கால மக்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்களையும் சேகரித்தார். இவை அனைத்தும் பூண்டியில், தொல்லியல் துறையின் அகழ் வைப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

நுண்கற்கால தொழிற்சாலை 


 
ராபர்ட் புரூஸ் பூட், தென் இந்தியத் தீபகற்ப பகுதியில் கண்டுபிடித்த, 459 வரலாற்றுக்கு முற்பட்ட காலப் பகுதிகளில், 42 பகுதிகள் பழைய கற்காலத்தையும், 252 பகுதிகள் புதிய கற்காலத்தையும் சார்ந்தவை. திருநெல்வேலி மாவட்டத்தில், தேரி பகுதிகளில் நுண்கற்காலக் கருவிகளை கண்டெடுத்து, அப்பகுதியில் நுண்கற்கால தொழிற்சாலை இருந்தமையை (Post Acheulean Industry)  உறுதிப்படுத்தியுள்ளார். ஆதியிலேயே நுண்கற்கால தொழிற்சாலை அமைத்து ஆயுதம் தயாரித்தவன் ஆதித்தமிழன் என்பது பெருமைக்குரியது. ராபர்ட் புரூஸ் பூட் பழைய கற்கால, புதிய கற்கால கல் ஆயுதங்களை, அதன் உருவமைப்பு மற்றும் தொழில் நுட்ப முறையைக் கொண்டு வகைப்படுத்தும் பணியை மேற்கொண்டார். தென் இந்தியாவில் பழைய கற்காலத்திற்கும், புதிய கற்காலத்திற்கும் இடையேயுள்ள நீண்ட இடைவெளியைக் கண்டறிந்து, அதற்கான காரணத்தை அறியும் பொருட்டு மேற்கொண்ட அவரது ஆய்வு சிறப்பு வாய்ந்தது.

சென்னை, மைசூர், ஐதராபாத், பரோடா பகுதிகளில், இவரால் சேகரிக்கப்பட்ட வரலாற்றுக்கு முற்பட்ட தொல் பொருட்கள், 1904ல், சென்னை அருங்காட்சியத் துறையால் வாங்கப்பெற்று, அதற்கென தனி காட்சியறை, தொல்லியல் பிரிவில் நிறுவப்பட்டது. அறிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர்ந்து, பல தொல்லியல் சிக்கல்களுக்கு தீர்வு கண்டு, "இந்திய தொல் பழங்காலத்தின் தந்தை' என்றழைக்கப் பட்ட ராபர்ட் புரூஸ் பூட், டிச.,29, 1912ல், இயற்கை எய்தினார். இந்திய நாகரிக வரலாற்றை, லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென, முதன் முதலில் உலகுக்கு காட்டிய பெருமை இவரையே சாரும்.

குடியம் குகைகள்’ ஆவணப்படம்

பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன்னர் ஆதி மனிதர்கள் வாழ்ந்த குடியம் குகையின் முக்கியத்துவத்தை வெளிக்கொண்டுவரும் வகையில் இயக்குனர் ரமேஷ் யாந்த்ரா ‘குடியம் குகைகள்’ என்ற தலைப்பில் ஒரு ஆவணப்படத்தை தயாரித்துள்ளார். அந்தப் படம், கடந்த 2015ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. 


References:
Indian Archaeological Review 1962-63
Indian Archaeological Review 1963-64
The Foote collection of Indian prehistoric and protohistoric antiquities by Foote Robert Bruce
Prehistoric And Protohistoric Antiquities Of India  by Foote, Robert Bruce

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com