என் பேரனின் ஜாதகம் சரியாக கணிக்கப்பட்டுள்ளதா? ஒருவர் கும்ப லக்னம் என்றும் வேறொருவர் மீன லக்னம் என்றும் கணித்துக் கொடுத்துள்ளார்கள். அவர் பிறந்த இடம் கிளாஸ்கோ (லண்டன்) 1-2 வயதுகளில் நெற்றியில் தோல் நோய் ஏற்பட்டு மிகுந்த சிரமப்பட்டு காப்பாற்றினோம். இன்றுவரை ஆஸ்துமா வந்து சளித்தொல்லை தருகிறது. எந்தவிதமான மருத்துவம் செய்யலாம்? என்ன படிப்பு படிக்க வைக்கலாம்? இளைய சகோதரி உண்டா? வேலை செய்வாரா அல்லது தொழில் செய்வாரா? வெளிநாட்டில் இருப்பாரா? இங்கு வந்து விடுவாரா? பெற்றோருக்கு ஆதரவாக இருப்பாரா?&

உங்கள் பேரனுக்கு விருச்சிக லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம் மூன்றாம் பாதம். பிறப்பில் சுக்கிர மஹா தசையில் கர்ப்பச் செல்லு

உங்கள் பேரனுக்கு விருச்சிக லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம் மூன்றாம் பாதம். பிறப்பில் சுக்கிர மஹா தசையில் கர்ப்பச் செல்லு போக, இருப்பு 9 வருடங்கள், 6 மாதங்கள், 21 நாள்கள் எனறு வருகிறது. லக்னம் மற்றும் ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் எட்டாம் வீட்டில் ராகுபகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார். தனம், வாக்கு, குடும்பம் மற்றும் பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானாதிபதியான குருபகவான் லக்னத்தில் கேட்டை நட்சத்திரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் நீச்சமடைகிறார். குருபகவான் பூர்வபுண்ணியம், களத்திரம் மற்றும் பாக்கிய ஸ்தானங்களைப் பார்வை செய்கிறார். பாக்கியாதிபதியான சந்திரபகவான் தொழில் ஸ்தானத்தில் சுக்கிரபதவானின் சாரத்தில் (பூரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் கேதுபகவானின்சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் விரய ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் தொழில் ஸ்தானத்தில் கேதுபகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான ரிஷப ராசியை அடைகிறார். அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் பன்னிரண்டாம் வீட்டில் ராகுபகவானின் சாரத்தில் (சுவாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். தொழில் ஸ்தானாதிபதியான சூரியபகவான் லாப ஸ்தானமான பதினோறாம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (அஸ்த நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சுய சாரத்தில் (சதய நட்சத்திரம்) ராகுபகவான் அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார். கேதுபகவான் தொழில் ஸ்தானத்தில் சுய சாரத்தில்( மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார்.
 ஒரு குழந்தை வெளி நாட்டில் பிறந்தால் அந்தக் குழந்தைக்கு அந்த நாட்டின் பிறந்த நேரத்தைக் கொண்டே ஜாதகத்தைக் கணிக்க வேண்டும். அதோடு அந்த நாட்டில் அட்ச ரேகை, தீர்க்க ரேகை போன்றவைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். சில மேற்கத்திய நாடுகளில் ஏன் சில கிழக்கத்திய நாடுகளிலும் கூட இரட்டை நேர முறைகள் வழக்கத்திலுள்ளன. அதாவது, சூரிய ஒளி அதிகமாக கிடைக்கும் ஆறு மாதங்களில் பகல் நேரத்தை அதிகப்படுத்தியும் மற்ற ஆறு மாதங்களில் சாதாரண நேரத்தையும் வைப்பது வழக்கம். இது பொதுவாக, ஏப்ரல் மாதக் கடைசியிலும் அக்டோபர் மாதக் கடைசியிலும் ஒரு சனிக்கிழமை இரவு கடிகார மணியை மாற்றி அமைப்பார்கள். இந்த காலகட்டங்களில் பிறந்த குழந்தைகளுக்கு இதற்கேற்றபடி நேரத்தை நிர்ணயித்து அதாவது க்ரீன் வீச் நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்தைக் குறைத்தோ அல்லது கூட்டியோ நிர்ணயித்து ஜாதகத்தைக் கணிக்க வேண்டும். சிலர் வெளிநாட்டில் ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் நமது நாட்டில் அந்த நேரத்திற்கு ஒப்பான நேரத்தை கணித்து அதற்கேற்ப ஜாதகத்தைக் கணிப்பது தவறாகும். மேலும் இப்படி செய்வது ஜோதிட விதிகளுக்கு முரணாகும் என்று கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
 உங்கள் பேரன் பிறந்த நேரத்தில் பகல் பொழுது அதிகமாக இருப்பதால் நான்கரை மணி வித்தியாசம் இந்தியாவுக்கும் லண்டன் மாநகருக்கும் உள்ளதால் சிலர் இந்திய நேரப்படி கும்ப லக்னம் என்றும் கணித்துள்ளார்கள். இரண்டும் தவறாகும். அவருக்கு விருச்சிக லக்னம் என்று கணிக்கப்பட வேண்டும். அதனால் சுக்கிரபகவானின் தசைகளின் விபரங்களை எழுதி வைத்துக் கொள்ளவும். தற்சமயம் 16.02.2018 வரை சூரியபகவானின் தசையில் சந்திரபகவானின் புக்தி நடக்கிறது.
 பொதுவாக, குழந்தைகளுக்கு எட்டு வயது வரையில் அசுபக் கிரகங்களின் தசை நடந்தாலோ அல்லது சுக ஸ்தானம் பாதிக்கப்பட்டாலோ "பாலரிஷ்ட தோஷம்' உண்டாகி அதனால் சிரமங்கள் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. அவருக்கு ஒன்பதரை வருடங்கள் சுக்கிரபகவானின் தசை நடந்தது. சுக்கிரபகவான் களத்திர, நட்பு, விரய ஸ்தானாதிபதியுமாகி பத்தாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியில் ஆட்சி பெற்று இருப்பதால் பாலாரிஷ்ட தோஷம் ஏற்படாது. அதோடு களத்திர, நட்பு ஸ்தானம், பூர்வபுண்ணிய ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானங்களைப் பார்வை செய்வதும் சிறப்பு. லக்னாதிபதியே ஆறாம் வீட்டுக்கதிபதியாகி எட்டாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் ஆறாமதிபதி எட்டாம் வீட்டில் இருப்பது விபரீத ராஜயோகம் என்று கூறினாலும் லக்னாதிபதி எட்டாம் வீட்டில் மறைவு பெற்றிருக்கிறார் என்கிற ரீதியில் பார்க்கும்போது குறையே என்று கூறவேண்டும். தோல் வியாதி புதபகவானின் காரகத்துவத்தில் வருகிறது. புதபகவான் அஷ்டாமாதிபதியாகி பன்னிரண்டாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று அமர்ந்திருப்பதாலும் பூர்வபுண்ணியாதிபதியின் புக்தி நடந்ததால் (தசா நாதனுக்கும் புக்தி நாதனுக்கும் விரோதம் என்கிற அடிப்படையில் வியாதி உண்டானாலும்) பெரிய பாதிப்பு இல்லாமல் தப்பித்துக் கொண்டார். மேலும்நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதிகளும் புதபகவானின் காரகத்தில் அடங்குகின்றன. புதபகவானும் ஆறாமதிபதியும் ராகுபகவானின் சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் சுபத்தன்மையுடன் இருப்பதால் ஹோமியோபதி மருத்துவச் சிகிச்சையின் மூலம் குணமடைவார். அவருக்கு பொருளாதாரம், வணிகம், மேலாண்மைப் படிப்புகள் ஏற்றவை. இன்னும் இரண்டாண்டுகளுக்குள் சகோதரி பிறக்கவும் வாய்ப்புள்ளது. தொழில் ஸ்தானம் வலுவாக இருப்பதும் சிறப்பு. அதேநேரம் சொந்தத்தொழில் செய்யக்கூடாது. உத்தியோகம் பார்ப்பதே சிறப்பு. வெளிநாட்டில் இருந்து பணிபுரியவே வாய்ப்பு அதிகமாக உள்ளது. பெற்றோருக்கும் குடும்பத்தாருக்கும் இறுதிவரை ஆதரவாக இருப்பார். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com