எனக்கு தற்சமயம் ராகு தசையில் கேது புக்தி நடைபெறுகின்றது. ராகு தசை மாரக தசை என்று படித்திருக்கிறேன். ராகு தசையில் எந்த புக்தியில் எனக்கு மாரகம்  சம்பவிக்கும்? குடும்ப ஜோதிடம் என்ற நூலில் கன்யா லக்ன நபர்களுக்கு 77 ஆம் வயதில் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளது. இன்னொரு நூலில் சுபர் பார்வை இருந்தால் மற்றும் 2,5,8,11 ஆம் அதிபதிகள் வலுத்திருந்தால் தீர்க்காயுள் என எழுதப்பட்டுள்ளது. எனவே, எந்த தசையில் எந்த புக்தியில் மரணம் சம்பவிக்கும் என தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.- பழனி, திருவண்ணாமலை

உங்களுக்கு கன்னி லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம் 4 ஆம் பாதம். பிறப்பில் புதமகா தசையில் இருப்பு 1 வருடம், 6மாதங்கள், 11 நாள்கள் என்று வருகிறது.

உங்களுக்கு கன்னி லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம் 4 ஆம் பாதம். பிறப்பில் புதமகா தசையில் இருப்பு 1 வருடம், 6மாதங்கள், 11 நாள்கள் என்று வருகிறது. லக்னம் மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான புதபகவான் ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டில் வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) அமர்ந்து இருக்கிறார். இதிலிருந்து லக்னாதிபதி பலம் பெற்று இருக்கிறார் என்று கூறவேண்டும். அதோடு அவர் சுபக்கிரகமாகி கேந்திர ராசிகளுக்கும் அதிபதியாகி மறைவு பெற்றிருப்பதால் கேந்திராதிபத்ய தோஷமும் நீங்கி விடுகிறது. 
பூர்வபுண்ணியம் மற்றும் ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான இரண்டாவது திரிகோணாதிபதியான சனிபகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான துலாம் ராசியில் உச்சம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் தன் மூலத்திரிகோண ராசியான கும்ப ராசியை அடைகிறார். அதனால் பூர்வபுண்ய ஸ்தானாதிபதி ராசியிலும் நவாம்சத்திலும் சிறப்பான சுப பலத்துடன் இருக்கிறார் என்று கூற முடிகிறது. தனம், வாக்கு, குடும்பம் மற்றும் பாக்கியாதிபதியான சுக்கிரபகவான் களத்திர, நட்பு ஸ்தானத்தில் உச்சம் பெற்று நவாம்சத்தில் கும்ப ராசியில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 தைரிய (மூன்று) அஷ்டமாதிபதியான செவ்வாய்பகவான் தைரிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். சுக (நான்கு) களத்திர, நட்பு ஸ்தானாதிபதியான குருபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாமிடத்தில் அமர்ந்து நவாம்சத்தில் தன் நட்பு வீடான சிம்ம ராசியை அடைகிறார். லாபாதிபதியான சந்திரபகவான் தைரிய ஸ்தானத்தில் நீச்சம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். மேலும் சந்திரபகவான் விருச்சிக ராசியில் ஆட்சி பெற்றுள்ள செவ்வாய்பகவானுடன் இணைந்து இருப்பதால் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். 
அயன (பன்னிரண்டு) ஸ்தானாதிபதியான சூரியபகவான் களத்திர, நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் நீச்சம் அடைகிறார். களத்திர ஸ்தானத்தில் சுக்கிரபகவான் உச்சம் பெற்று இருப்பதால் மாளவிகா யோகம், சந்திர கேந்திரத்தில் செவ்வாய்பகவான் ஆட்சி பெற்று இருப்பதால் ருசக யோகம் ஆகிய இரண்டு பஞ்சமஹா புருஷ யோகங்கள் உண்டாகின்றன. சந்திர மங்கள யோகமும், கஜகேசரி யோகம், குருமங்கள யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகின்றன. தற்சமயம் நான்காம் வீடான கேந்திர ராசியில் அமர்ந்து தசையை நடத்துகிறார். அசுபக் கிரகங்களுக்கு கேந்திர ராசியில் பலம் அதிகம் என்பதை அனைவரும் அறிந்ததே. 
ஆயுள் நிர்ணயம் பற்றி பல கிரந்தங்களில் பலவிதமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆயுள் ஸ்தானம் என்று எட்டாம் வீட்டையும் ஆயுள் காரகராக சனிபகவானையும் கூறியுள்ளார்கள் "பாவாத் பாவம்' என்கிற அடிப்படையில் எட்டாம் வீட்டுக்கு எட்டாம் வீடான மூன்றாம் வீட்டையும் பார்க்க வேண்டும். மேலும் மரணத்திற்கு ஏழாம் வீடும் பன்னிரண்டாம் வீடும் அந்த வீட்டுக்கதிபதிகளும் காரணமாகிறார்கள். அதோடு ஆயுள் முடியும் காலத்திற்கும் ஏழாம் வீட்டோனின் தசை புக்திக்கும் தொடர்பு உண்டு என்றும் பல இடங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. 
உங்களுக்கு ஏழாம் வீட்டில் உச்சம் பெற்ற சுக்கிரபகவான் அமர்ந்து லக்னத்தைப் பார்வை செய்கிறார். பொதுவாக, சுபக்கிரகங்கள் லக்னமான உயர் ஸ்தானத்தைப் பார்வை செய்வதால் ஆயுள் பாவம் புஷ்டியாகும். ஆயுள் காரகரான சனிபகவான் உச்சம் ஆயுள் ஸ்தானாதிபதியான செவ்வாய் பகவான் ஆயுள் ஸ்தானத்திற்கு எட்டாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்து இருக்கிறார். ஆயுளைப் பற்றி ஜெயமினி சூத்திரத்தில் கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது. 
லக்னாதிபதி மற்றும் எட்டாமதிபதி இருவரும் சர ராசியில் இருந்தால் பூர்ணாயுள்; லக்னாதிபதி சர ராசி, எட்டாமதிபதி உபய ராசியில் இருந்தால் மத்திமாயுள்; லக்னாதிபதி சர ராசி, எட்டாமதிபதி ஸ்திர ராசியில் இருந்தால் மத்திமாயுள்; லக்னாதிபதி ஸ்திர ராசியிலும் எட்டாமதிபதி ஸ்திர ராசியில் இருந்தால் ஆயுள் குறைவு; லக்னாதிபதி லக்னத்திலோ அல்லது லக்னத்தைப் பார்த்தாலோ பூர்ணாயுள்; லக்னாதிபதி ஸ்திர ராசியிலும் எட்டாமதிபதி உபய ராசியிலும் இருந்தால் தீர்க்காயுள்; லக்னாதிபதி உபய ராசி, எட்டாமதிபதி ஸ்திர ராசியிலும் இருந்தால் பூர்ணாயுள் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜாதக பாரிஜாதம் என்கிற நூலில் லக்னாதிபதியும் எட்டாமதிபதியும் கேந்திரம் அல்லது திரிகோண ராசியில் இருந்தாலும் சுபக்கிரகத்தால் பார்க்கப்படினும் தீர்க்காயுள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் எட்டாமதிபதி உச்சம், எட்டாமதிபதி சுபக்கிரகச் சேர்க்கை, எட்டாமதிபதி அதன் சொந்த வீட்டில் இருந்தாலும் கேந்திரம் அல்லது திரிகோணத்தில் இருப்பினும் நீண்ட ஆயுள் என்றும் கூறப்பட்டுள்ளது. இவர்களை அசுபக் கிரகங்கள் பார்வைசெய்வது பலம் குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது.
உங்களுக்குக்கு ஆயுள் காரகர் உச்சம், செவ்வாய்பகவான் ஆட்சி, அதனால் தீர்க்காயுள் என்றும் கூறவேண்டும். ஏழாம் தசையாக ராகுபகவானின் தசை நடந்தாலும் அது துயர் தரும் தசையல்ல என்றும் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் குருபகவான் முழுச்சுபராகி லக்னத்தைப் பார்வை செய்வதால் உங்களுக்கு தீர்க்காயுள் என்று கூறலாம். 
84 ஆண்டுகளுக்கு மேல் ஆயுள் உண்டு என்றும் கூறலாம். அதேசமயம் ஆயுள் பற்றிய பலரின் ஆராய்ச்சிகள் சரியாக வரவில்லை என்றும் கூறிக்கொள்கிறோம். அதனால் இதைப்பற்றி பெரிதாக நினைத்து எவரும் கவலைப்பட வேண்டாம் என்றும் கூறிக்கொள்ள விரும்புகிறோம். ஆயுள் பரமேஸ்வரனின் கையில் உள்ளது. அதை மனிதர்களால் அறிந்து கொள்ள முடியாது. மேலும் அதைப்பற்றிய முயற்சிகளும் வீணானது மற்றும் தேவையற்றது என்றும் உங்கள் மூலம் அனைவருக்கும் கூறிக்கொள்கிறோம். 
பல ஜோதிடர்களும் தங்கள் ஆயுளைப் பற்றி பகிரங்கமாக வெளியிட்ட காலங்களும் சரியாக வரவில்லை. ஏன் அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குப்பிறகு பல ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார்கள் என்றும் பார்த்தோம். உங்கள் அமைதியான இறுதிக்காலத்திற்காக பிரதி தினமும் சிவபெருமானை வழிபட்டு வரவும். முடிந்தவரை "நமசிவாய' என்கிற ஐந்தெழுத்தை ஜபித்து வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com