எனக்கு 63 வயதாகிறது. சந்திர தசை ஆரம்பம். சந்திரன் விருச்சிக ராசியில் நீச்ச நிலையில் உள்ளார். இந்த தசை எப்படி இருக்கும்? சுக்கிர தசையில் செய்து கொண்டிருந்த தொழிலை நிறுத்தும்படி ஆகிவிட்டது. தற்போது ஏழரை சனி நடக்கிறது. மறுபடியும் எப்பொழுது தொழில் தொடங்கலாம்? ஆயுள் ஆரோக்கியம் எவ்வாறு அமையும்? குடும்பாதிபதி சூரியன் எட்டில் மறைந்து ஏழாம் பார்வையாக சொந்த வீட்டைப் பார்க்கிறார். குழந்தைகள், எனக்கும் மனைவிக்கும் ஆதரவாக இருப்பார்களா? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா?- வாசகர், ஈரோடு

உங்களுக்கு கடக லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம் இரண்டாம் பாதம். லக்னாதிபதியான சந்திரபகவான் நீச்சம் பெற்று நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். நீச்சம் பெறும் கிரகம் உச்சம்

உங்களுக்கு கடக லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம் இரண்டாம் பாதம். லக்னாதிபதியான சந்திரபகவான் நீச்சம் பெற்று நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். நீச்சம் பெறும் கிரகம் உச்சம் அடையும் வீட்டிற்கதிபதியான கிரகம் லக்ன கேந்திரத்திலோ சந்திர கேந்திரத்திலோ இருந்தால் நீச்சபங்க ராஜயோகம் உண்டாகும். இந்த விதிக்கு ஏற்ப சந்திரபகவான் உச்சம் பெறும் ரிஷப ராசிக்கு அதிபதியான சுக்கிரபகவான் பத்தாம் வீட்டில் லக்ன கேந்திரத்தில் அமர்ந்திருப்பதால் நீச்சபங்க ராஜயோகம் உண்டாகிறது. பூர்வபுண்ணிய புத்திர மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் பாக்கிய ஸ்தானத்தில் புதபகவானின் சாரத்தில் (ரேவதி நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் இருக்கும் நிலை) அமர்ந்திருக்கிறார். வர்கோத்தமம் என்றால் வர்கம் (பிரிவு) என்றும் உத்தமம் (மேன்மை) என்றும் பொருள். அதனால் "மேன்மையான பிரிவு' என்று பொருள் கொள்ள வேண்டும். ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறு மற்றும் பாக்கிய ஸ்தானமான பத்தாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். குடும்பாதிபதியான சூரியபகவான் அஷ்டம, ஸ்தானமான எட்டாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (பூரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். தைரிய (மூன்று) விரயாதிபதியான புதபகவான் பாக்கிய ஸ்தானத்தில் நீச்சம் பெற்று நவாம்சத்தில் கன்னி ராசியில் ஆட்சி உச்சம் மூலத்திரிகோணம் அடைகிறார். சுக லாபாதிபதியான சுக்கிரபகவான் தொழில் ஸ்தானத்தில் கேதுபகவானின் சாரத்தில் (அசுவினி நட்சத்திரம்) நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான ரிஷப ராசியை அடைகிறார். களத்திர நட்பு மற்றும் அஷ்டம ஸ்தானாதிபதியான சனிபகவான் சுகஸ்தானத்தில் பூர்வபுண்ணியாதிபதியின் சாரத்தில் (சித்திரை நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார். லக்னத்தில் கேதுபகவானும் ஏழாம் வீட்டில் ராகுபகவானும் அமர்ந்து நவாம்சத்தில் முறையே தனுசு மற்றும் மிதுன ராசிகளை அடைகிறார்கள்.
தற்சமயம் நடக்கும் சந்திரமகா தசை எப்படி இருக்கும் என்று கேட்டுள்ளீர்கள். ஒரு தசை எந்த வகையில் வேலை செய்யும் என்று அறிவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. சிலர் தனக்கு யோக தசை நடக்கும் போது நல்ல பலன்கள் நடக்கவில்லை என்றும் லக்னத்திற்கு அசுபர் என்கிற கிரகத்தின் தசையில் நல்லன நடந்தது என்றும் எழுதுகிறார்கள். லக்னத்திற்கு அசுபரின் தசை நன்றாக வேலை செய்தாலும் யோகாதிபதியான சுபரின் தசை ஏன் வேலை செய்யவில்லை என்றும் கேட்கிறார்கள். உங்கள் மூலமாக அனைவருக்கும் சிறிது விளக்கமாக இந்த விஷயங்களில் உள்ள நுணுக்கங்களை விளக்குகிறோம்.
உங்களுக்கு சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து லக்னாதிபதியான சந்திரபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. கிரகங்கள் தாங்கள் பெற்றுள்ள லக்ன ஆதிபத்யம், சந்திர ஆதிபத்யம், அமர்ந்திருக்கும் வீடு, அந்த வீட்டுக்கதிபதி பெற்றுள்ள சுப அசுப நிலை, அந்த கிரகத்துடன் இணைந்திருக்கும் கிரகங்கள், மற்றும் அந்த வீட்டைப்பார்க்கும் கிரகங்கள், அவர்களின் சுப அசுப நிலைகள், அந்த கிரகம் நவாம்சத்தில் பெற்றிருக்கும் நிலை, அந்த கிரகத்தின் அவஸ்தைகள் (கிரகங்களுக்கும் நம்மைப்போல் விழிப்பு, தூக்கம், குளித்தல், சாப்பிடும் காலம், தாம்பூலம் தரித்தல் (வெற்றிலைப் போடுதல்), புத்தகம் வாசித்தல், மகிழ்ச்சியுடன் இருத்தல் போன்ற நிலைகள் உள்ளன) சோடசாம்சம் என்கிற பதினாறு அம்சங்களில் பெற்றுள்ள பலம் (இவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பலன்களுக்குக் காரணமாகின்றன. இதில் நவாம்சம், தசாம்சம், சஷ்டியாம்சம் ஆகியவைகள் குறிப்பாக, கவனிக்கப்பட வேண்டியன) ஷட்பலம் என்கிற ஆறுவகை நிலைகளில் பெற்றுள்ள ரூப பரல்கள் (ஸ்தான பலம், திக்பலம், காலபலம், சேஷ்டபலம், நைசர்கிகபலம், திருக்பலம்) அஷ்டவர்க்கத்தில் அந்த கிரகம் பெற்றுள்ள பரல்கள் இப்படி ஒரு கிரகத்தின் பலத்தை அறிந்து பலன் கூறவேண்டும். இப்படி ஆராய்ந்து பலத்தை அறிய முற்படுங்கால், மேலோட்டமாக அசுபக் கிரகம் நன்மை செய்தது என்றும் சுபக்கிரகம் ஏன் நன்மை செய்யவில்லை என்றும் புரிந்து கொள்ள முடியும்.
குறை என்று சீர்தூக்கி பார்த்து புரிந்து கொண்டபின் அந்தக் கிரகத்திற்கு பலம் சேர்க்கும் முறையில் தக்க பரிகாரங்களை அந்த தசை தொடங்குவதற்கு சில காலம் முன்பாகவே செய்ய ஆரம்பித்து தொடர்ந்து செய்து வருங்கால் குறைகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும். மேலும் கேந்திரத்திற்கு அதிபதியாக வரும் கிரகத்தை விட (விஷ்ணு ஸ்தானங்கள்) திரிகோண ராசிகளுக்கு (லட்சுமி ஸ்தானங்கள்) அதிபதிகளாக வரும் கிரகங்கள் அதிக நன்மை செய்யும். அதோடு திரிகோண ராசிகளில் அமரும் கிரகங்கள் அதிக சுப பலம் பெறுவார்கள் என்றும் கூற வேண்டும். மேலும் ஒரு வீட்டின் அதிபதி அந்த வீட்டைப் பார்த்தாலும் தன் உச்ச வீட்டைப் பார்த்தாலும் பலம் அதிகம்.
உங்களுக்கு சந்திரபகவான் லக்னாதிபதியாகிறார். லக்னாதிபதி எவருக்கும் நன்மை செய்ய கடமைப்பட்டவராவார். அவர் நீச்சபங்க ராஜயோகம் பெற்று தன் உச்ச ராசியை பார்வை செய்கிறார். விருச்சிக ராசிக்கு அதிபதியான செவ்வாய்பகவான் பாக்கிய ஸ்தானமான குருபகவானின் வீட்டில் வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். அதனால் லக்னாதிபதி முழுபலத்துடன் ஒரு திரிகோண ராசியில் அமர்ந்திருக்கிறார் என்று கூற வேண்டும். இந்த சந்திர மகாதசை உங்களை படிப்படியாக நல்ல நிலைக்கு இட்டுச் செல்லும். ஏழரை சனி மூன்றாவது சுற்றும் இன்னும் மூன்றாண்டுகள் கழித்து முடிந்துவிடும். தனாதிபதியான சூரியபகவான் அஷ்டம ஸ்தானத்தில் பாக்கியாதிபதியான குருபகவானின் சாரத்தில் அமர்ந்து தன ஸ்தானத்தையும் தன் ஆட்சி வீட்டையும் பார்வை செய்கிறார். ஆயுள் ஸ்தானாதிபதியான சனிபகவான் சுக ஸ்தானத்தில் வர்கோத்தமத்தில் உச்சம் பெற்று பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான சச மஹாயோகத்தைக் கொடுக்கிறார். இதனால் தீர்க்காயுள் உண்டு. மேலும் சனிபகவான் வலுத்திருப்பதால் வாழ்க்கைத்தரம் உயர்வாக இருக்கும். ஆயுள் ஸ்தானாதிபதி மற்றும் ஆயுள்காரகரை குருபகவான் பார்வை செய்வதும் நலம் தரும் யோகமாகும். காலபுருஷ தத்துவப்படி இது தர்மகர்மாதிபதி யோகமாகும். அதனால் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குப்பிறகு அதாவது குருபகவானின் புக்தி நடக்கத் தொடங்கியவுடன் மறுபடியும் தொழில் தொடங்கலாம்.
பாக்கியாதிபதியே தொழில் ஸ்தானாதிபதியாகவும் ஆவதால் ஆரோக்கிய ஸ்தானத்தில் எந்த பெரிய பாதிப்பும் ஏற்படாது. அயன ஸ்தானாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் நீச்சம் பெற்று அமர்ந்திருந்தாலும் நவாம்சத்தில் உச்சம் பெறுவதால் இறுதிக்காலம் அமைதியாகக் கழியும். புத்திர ஸ்தானாதிபதியும் வலுவாக உள்ளதால் குழந்தைகளால் உங்களுக்கும் உங்களால் குழந்தைகளுக்கும் பரஸ்பரம் இணக்கமான சூழ்நிலை உண்டாகும். பிரதி திங்கள்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு வரவும். அபிராமி அந்தாதியையும் தொடர்ந்து படித்து வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com