என் அக்கா மகன் 1998 ஆம் ஆண்டு வீட்டைவிட்டு கோபித்துக்கொண்டு சென்றவர், இதுவரை வீடு திரும்பவில்லை. உள்ளூர் ஜோதிடர்கள் அவன் உயிரோடு இருக்கிறார், ஆனால் செய்யாத குற்றத்துக்கு சிறைச்சாலையில் இருக்கிறார் என்கிறார்கள். அவரின் ஜாதகத்தில் ஏன் இப்படி ஏற்பட்டது? என்ன குறை? அவர் உயிரோடு இருக்கிறாரா? வீட்டுக்குத் திரும்பி வருவாரா? அவரைப் பார்க்கும் பாக்கியம் எங்களுக்குக் கிடைக்குமா? அவர் என்னவாக இருக்கிறார்? - வாசகர்

உங்கள் சகோதரி மகனுக்கு மீன லக்னம், மகம் நட்சத்திரம், சிம்ம ராசி. லக்னம் மற்றும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் அஷ்டம ஸ்தானமான

உங்கள் சகோதரி மகனுக்கு மீன லக்னம், மகம் நட்சத்திரம், சிம்ம ராசி. லக்னம் மற்றும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சுய சாரத்தில் (விசாக நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். சுபக்கிரகங்கள் கேந்திர ராசிகளுக்கு அதிபதிகளாக வந்தால் கேந்திராதிபத்ய தோஷம் உண்டாகும் என்பது பொதுவிதி. அதே நேரம் அந்த கிரகங்களுக்கு லக்ன ஆதிபத்யம் வந்தால் கேந்திராதிபத்ய தோஷம் உண்டாகாது என்றும் உள்ளது. கேந்திராதிபத்ய தோஷம்  இருக்கும் கிரகங்கள் மறைவு பெற்றால் அதாவது 3,6,8,12 ஆம் வீடுகளில் அமர்ந்தால் கேந்திராதிபத்ய தோஷம் இல்லாமல் போய் விடுகிறது. அவருக்கு லக்னாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் சுயசாரத்தில் மறைவு பெற்று அமர்ந்திருப்பது குருபகவான் முழுபலம் பெற்று இருக்கிறார் என்று கூற வேண்டும். பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானாதிபதியான சந்திரபகவான் ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானத்தில் கேதுபகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீட்டை  அடைகிறார். தனம் வாக்கு குடும்பம் மற்றும் பாக்கியாதிபதியான செவ்வாய்பகவான் பாக்கிய ஸ்தானத்தில் கேது பகவானின் சாரத்தில் (கேட்டை நட்சத்திரம்) ஆட்சி பெற்று அமர்ந்து நவாம்சத்தில் உச்சமடைகிறார். தைரிய அஷ்டமாதிபதியான சுக்கிரபகவான் களத்திர, நட்பு ஸ்தானத்தில் சந்திரபகவானின் சாரத்தில் (அஸ்த நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். சுக, களத்திர, நட்பு ஸ்தானாதிபதியான புதபகவான் களத்திர நட்பு ஸ்தானத்திலேயே சூரியபகவானின் சாரத்தில் (உத்திர நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் நீச்சமடைகிறார். ஆறாமதிபதியான சூரியபகவான் ஏழாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (சித்திரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில்தன் ஆட்சி வீட்டை அடைகிறார்.
லாபம் மற்றும் அயன ஸ்தானத்திற்கு அதிபதியான சனிபகவான்அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (சித்திரை நட்சத்திரம் அமர்ந்து வர்கோத்தமம்  (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமர்ந்திருக்கும் நிலை ) பெற்று இருக்கிறார்.  கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகங்களுடன் ஓர் அசுபக்கிரகம் இணைந்திருந்தாலோ அல்லது பார்க்கப்பட்டாலோ கேந்திராதிபத்ய தோஷம் நீங்கிவிடும் என்கிற விதியின் அடிப்படையில் பார்த்தாலும் குருபகவானுக்கும் புதபகவானுக்கும் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கிவிடுகிறது. ஆட்சி பெற்ற புதபகவானுடன் சுக்கிரபகவான் இணைந்திருப்பதால் சுக்கிரபகவானுக்கு நீச்சபங்க ராஜயோகம் உண்டாகிறது. ராகுபகவான் சுயசாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) சுக ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியையும்;  கேதுபகவான் தொழில் ஸ்தானத்தில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்திரம் சிம்மராசியையும் அடைகிறார்கள்.
அவரின் ஜாதகத்தில் என்ன குறை? ஏன் இத்தகைய நிலைமை அவரின் வாழ்க்கையில் ஏற்பட்டது என்று கேட்டுள்ளீர்கள்? ஒரு ஜாதகத்தில் உயிர் ஸ்தானமான லக்னம் பலமாக இருக்க வேண்டும் என்று பலமுறை எழுதியிருக்கிறோம். இந்த லக்னம் தோன்றிய பாகை மிகவும் முக்கியமானது. அவருக்கு லக்னம் மீனம் என்று கூறினோம். லக்னம் உற்பத்தியான பாகையை பார்த்தால் அது 33 ஆவது பாகை முடிந்து 51 ஆவது விநாடியாக அமைகிறது. இரண்டு நிமிடங்களுக்கு முன் பிறந்திருந்தால் கும்ப லக்னமாகி விடுகிறது. இத்தகைய நிலையைத்தான் லக்னம் சந்தி என்று அழைக்கிறோம். " லக்ன சந்தி' என்பது முதல் குறையாகும். "ராசி சந்தி', "நட்சத்திர சந்தி' ஆகியவை மற்ற இரண்டு "சந்தி'களாக வருகின்றன. மற்றபடி அவருக்கு "ராசி சந்தி', " நட்சத்திர சந்தி' கள் ஏற்படவில்லை. 
அவர் வீட்டை விட்டு காணாமல் போன காலத்தில் தைரிய அஷ்டமாதிபதியின் தசை நடந்தது. பொதுவாக, ஆறு, எட்டு, பன்னிரண்டாம் அதிபதிகளின் தசைகளை துயர் தரும் தசைகள் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அவர்களின் தசைகளில் இழப்புகள், பிரச்னைகள் ஏதோ ஓர் உருவத்தில் நம்மை அணுகி துன்பப்படுத்தும். அதேசமயம் அவர்களின் அசுப பலம் குறைந்து சுபபலம் கூடினால் அந்த குறிப்பிட்ட கஷ்ட காலத்திற்குப் பிறகு மீண்டு வந்து விடுவார்கள். அவருக்கு சுக்கிரபகவான் முழுமையான நீச்சபங்க ராஜயோகத்தைப் பெற்றிருக்கிறார். அடுத்ததாக, ஆயுள் பற்றி பார்க்க வேண்டும். முதலில் ஆயுள் காரகரான சனிபகவானின் நிலையை பார்த்தால் அவர் ஆயுள் ஸ்தானத்திலேயே உச்சம் பெற்றிருக்கிறார். லக்னாதிபதி ஆயுள் ஸ்தானத்தில் சுப பலத்துடன் அமர்ந்திருக்கிறார். பாவாத்பாவம் (எட்டுக்கு எட்டு) என்கிற அடிப்படையில் மூன்றாம் வீட்டுக்கதிபதியான சுக்கிரபகவான் நீச்சபங்க ராஜயோகம் பெற்றும் அவரே அஷ்மாதிபதியாகவும் ஆகிறார். இந்த மூன்று காரணங்களின் அடிப்படையில் பார்த்தால் அவருக்கு ஆயுள் தீர்க்கம் என்று கூற வேண்டும்.
இறந்திருக்க மாட்டார் என்றும் கூற வேண்டும். 
ஆறு, எட்டு, பன்னிரண்டாம் வீடுகளில் குறிப்பாக, பன்னிரண்டாம் வீட்டைக் கொண்டு ஒருவருக்கு சிறைவாசம் ஏற்படுமா என்று பார்க்க வேண்டும். இந்த வீடுகள் பெற்றுள்ள சுப அசுப பலன்கள் மிகவும் முக்கியமானது. மேலே விவரித்துக் கூறிய சுபபலன்களின் மூலமாக இந்த மூன்று வீடுகளும் சிறப்பான பலம் பெற்றுள்ளதால் சிறைவாசம் அனுபவிக்க வாய்ப்பில்லை. ஏழாம் வீட்டோன் ஏழில் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் பெற்றிருப்பதால் திருமணம் உண்டு. இந்த ஏழாம் வீட்டின் சுப பலத்தால் பிரச்னைகள் தீர்ந்துவிடும். சந்திரபகவானின் தசையில் தொடக்கத்தில் திருமணமும் நடந்திருக்க வாய்ப்புள்ளது. குருபகவான் லக்னாதிபதியாகி வலுத்திருப்பதாலும் ஞான காரகரான கேதுபகவான் குருபகவானின் இல்லத்தில் இருப்பதாலும் ராகுபகவானை குருபகவான் பார்வை செய்வதாலும் ஆன்மிகம், ஆலய திருப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வாய்ப்புகள் அதிகம். ராகுபகவான் புராதன விஷயங்களுக்குக் காரணமாகிறார், இறைவனின் பாசுரங்களில் தேர்ச்சி பெற்றவராகவும் ஆகியிருக்க வாய்ப்புள்ளது. நவாம்சத்தில் அனைத்து சுப கிரகங்களும் சிறப்பான வலிமை பெற்றுள்ளதால் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப்பிறகு உங்கள் குடும்பத்துடன் தொடர்பு கொள்வார். பிரதி திங்கள்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com