என்னுடைய ஜாதகத்தில் ஜோதிடத்தை முழு நேர தொழிலாகச் செய்யும் பாக்கியம் உள்ளதா? ஜோதிடத்துறையில் புகழ் பெறும் அமைப்பு உள்ளதா? தற்சமயம் நடைபெறும் குருதசை ராகு புக்தியில் புதிதாக தொழில் துவங்கலாமா? அல்லது எப்போது துவங்கலாம்? -கதிரேசன், ஈரோடு

உங்களுக்கு தனுசு லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். லக்னத்திற்கும் சுக ஸ்தானத்திற்கும் அதிபதியான குருபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் நீச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார்.

புதிய தொழில் தொடங்கலாம்
உங்களுக்கு தனுசு லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். லக்னத்திற்கும் சுக ஸ்தானத்திற்கும் அதிபதியான குருபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் நீச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார். தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் உச்சம் பெற்றிருப்பதால் குருபகவானுக்கு முழுமையான நீச்சபங்க ராஜயோகம் கிடைக்கிறது. அதோடு குருபகவானுடன் சந்திரபகவான் இணைந்திருப்பதால் குருசந்திர யோகம், சந்திரமங்கள யோகம், குருமங்கள யோகம், போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளன.
 தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானத்தில் பலமாக அமர்ந்திருக்கிறார். ஆறாமதிபதி மற்றும் லாபாதிபதியான சுக்கிரபகவான் சுக ஸ்தானத்தில் பாக்கியாதிபதியான சூரியபகவானுடன் இணைந்து உச்சம் பெற்றிருக்கிறார். தற்சமயம் சனிபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்குப்பிறகு உங்கள் வாழ்க்கையில் படிப்படியான வளர்ச்சி உண்டாகும்.
 பொதுவாக, கேந்திரத்திற்கு புதபகவானும் கேதுபகவானும் வலுத்திருக்க வேண்டும். உங்களுக்கு புதபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கு அதிபதியாகி மூன்றாம் வீட்டில் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். அதோடு சனிபகவானும் புதபகவானைப் பார்வை செய்கிறார். கேதுபகவான் நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் ராகுபகவானின் சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் குருபகவானின் வீடான மீன ராசியை அடைகிறார். இதனால் ஜோதிடத்தை முழு நேரமாக எடுத்துக்கொள்ளலாம். அதில் புகழ் பெறவும் முடியும்.
 2020 ஆம் ஆண்டு தொடங்கியவுடன் புதிய தொழில் தொடங்கலாம். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com