என் சகோதரருக்கு 40 வயதாகிறது. இன்னும் திருமணமாகவில்லை. எப்பொழுது நடக்கும்? எப்படி பொருத்தம் பார்க்க வேண்டும்? குழந்தை பாக்கியம் உண்டா? ஏழாம் வீடும் எட்டாம் வீடும் காலியாக இருக்க வேண்டுமா? அவருக்கு யோக ஜாதகமா அல்லது தோஷ ஜாதகமா? காலசர்ப்ப யோகம் உள்ளதா? எங்களுக்கு பெற்றோர் உள்ளதால் ஆயில்யம், மூலம் நட்சத்திரப் பெண்களைத் தவிர்க்க வேண்டுமா? திருமண வாழ்க்கைக்கு நவாம்சத்தைப் பார்க்க வேண்டும் என்கிறார்கள். அவருக்கு நவாம்சம் எவ்வாறு உள்ளது? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகி, திருவள்ளூர்

உங்கள் சகோதருக்கு கடக லக்னம், பூச நட்சத்திரம், கடக ராசி. லக்னாதிபதியான சந்திரபகவான் லக்னத்தில் ஆட்சி பெற்று நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார்.

உங்கள் சகோதருக்கு கடக லக்னம், பூச நட்சத்திரம், கடக ராசி. லக்னாதிபதியான சந்திரபகவான் லக்னத்தில் ஆட்சி பெற்று நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார்.
 ஐந்தாம் வீடான பூர்வபுண்ணிய ஸ்தானத்திற்கும் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் பதினொன்றாம் வீடான லாப ஸ்தானத்தில் சுயசாரத்தில் (மிருகசீரிஷம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார்.
 ஆறாம் வீடான ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானத்திற்கும் ஒன்பதாம் வீடான பாக்கிய ஸ்தானத்திற்கும் அதிபதியான குருபகவான் பன்னிரண்டாம் வீடான அயன ஸ்தானத்தில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (மிருகசீரிஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார்.
 தனம் வாக்கு குடும்ப ஸ்தானாதிபதியான சூரியபகவான் லக்னத்தில் புதபகவானின் சாரத்தில் (ஆயில்ய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார்.
 மூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்திற்கும் அயன ஸ்தானத்திற்கும் அதிபதியான புதபகவான் குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். நான்காம் வீடான சுக ஸ்தானத்திற்கும் லாப ஸ்தானத்திற்கும் அதிபதியான சுக்கிரபகவான் அயன ஸ்தானத்தில் ராகுபகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார்.
 ஏழாம் வீடான களத்திர, நட்பு ஸ்தானத்திற்கும் எட்டாம் வீடான அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கும் அதிபதியான சனிபகவான் லக்னத்தில் புதபகவானின் சாரத்தில் (ஆயில்ய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார்.
 ராகுபகவான் மூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்தில் சந்திரபகவானின் சாரத்தில் (அஸ்த நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார்.
 கேதுபகவான் பாக்கிய ஸ்தானத்தில் புதபகவானின் சாரத்தில் (ரேவதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார்.
 நவ (ஒன்பது) அம்சம் (பாகம்) அதாவது ஒரு ராசியை முப்பது பாகையை ஒன்பதாக பிரித்துப் பார்த்து அமைக்கப்படுவதே நவாம்ச கட்டமாகும். சர ராசிகளுக்கு (மேஷம், கடகம், துலாம், மகரம்) முதல் ராசியிலிருந்தும் ஸ்திர ராசிகளுக்கு (ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்) ஒன்பதாம் ராசியிலிருந்தும் உபய ராசிகளுக்கு (மிதுனம், கன்னி, தனுசு, மீனம்) ஐந்தாம் ராசிகளிலிருந்தும் கணக்கிட வேண்டும்.
 உதாரணமாக அவருக்கு லக்னம் ஆயில்யம் 2 இல் உள்ளது. ஆயில்யம் இரண்டு என்பது 7 ஆவது அம்சமாகும். அதனால் கடக ராசியாக ஆவதால் அதை முதல் ராசியாகக் கொண்டு ஏழு ராசிகளை எண்ணிக் கொண்டு வந்தால் நவாம்ச லக்னம் மகரமாக வருகிறது.
 ஒருவர் அம்சமாக இருக்கிறார் அல்லது ஒரு விஷயம் அம்சமாக நடந்து முடிந்தது என்பதை நவாம்சத்தைக் கொண்டு கூறினார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
 பல அம்சங்கள் இருந்தாலும் நவாம்சத்தை திருமண வாழ்க்கையை பற்றி குறிப்பாக தெரிந்து கொள்வதற்கு என்று குறிப்பிட்டுள்ளார்கள். அவருக்கு சனிபகவான் ஏழாமதிபதியாகி லக்னத்தில் அமர்ந்து களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். இது நவாம்ச லக்னமாகும்.
 அதாவது நவாம்ச லக்னத்திற்கு ஏழாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். களத்திர ஸ்தானாதிபதியான சனிபகவானுக்கு ராசியிலும் நவாம்சத்திலும் சம்பந்தம் ஏற்படுகிறது. எந்த பாவாதிபதியும் அந்த பாவத்தைப் பார்வை செய்வது சிறப்பாகும். அதனால் அவருக்குத் திருமணம் உண்டு என்று உறுதியாகக் கூறலாம்.
 ஐந்தாமிடம் மந்திர ஸ்தானம் ஆவதால் மந்திர சித்தியும் ஏற்படும். புத்திர ஸ்தானமாவதால் சத்சந்தானம் (குழந்தை) கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகளைக் கொடுக்கும் வீடாகும். பெரியோர்களின் நல்லாசிகளைப் பெற முடியும். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி லாப ஸ்தானத்தில் சுயசாரத்தில் அமர்ந்து புத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்வதால் சந்ததி விருத்தி அடையும். அந்தஸ்தும் மதிப்பும் உயரும். அதேநேரம் சர லக்னங்களுக்குப் பதினொன்றாமிடம் பாதக ஸ்தானமும் ஆகிறது.
 பத்தாமதிபதி பதினொன்றாம் வீட்டில் இருப்பது சிறு குறை என்றாலும் லாப ஸ்தானத்தில் இருப்பதால் நலமே புரிவார். கடக லக்னத்திற்கு செவ்வாய்பகவான் ஒரு திரிகோண ஸ்தானத்திற்கும் ஒரு கேந்திர ஸ்தானத்திற்கும் அதிபதியாவதால் ராஜயோக காரகர் என்று அழைக்கப் படுகிறார். அதனால் புத்திர பாக்கியம் உறுதியாக உண்டு என்று கூற முடிகிறது.
 லக்னத்தில் லக்னாதிபதி ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதை சாமர யோகம் என்பார்கள். அதுவும் இந்த யோகம் சந்திரபகவானுக்கு உண்டாவதால் வளர்பிறை சந்திரனைப் போல் நாளுக்கு நாள் வளர்ச்சி ஏற்படும். சமுதாயத்தில் புகழும் உன்னத ஸ்தானமும் கிடைக்கும். தனம் வாக்கு குடும்பாதிபதியான சூரியபகவான் லக்னத்தில் இருப்பதும் சிறப்பு.
 களத்திர ஸ்தானாதிபதியும் சூரியபகவானும் பரஸ்பரம் விரோதம் பெற்ற கிரகங்களாக ஆவதால் இதற்கேற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம். முன்னால் ராகுபகவானும் பின்னால் கேதுபகவானும் இருப்பதால் அனுலோம காலசர்ப்ப யோகமாகும். இதனால் அவரின் வாழ்க்கையில் முப்பதிரண்டு வயதிற்கு மேல் படிப்படியான வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் என்று கூற வேண்டும்.
 களத்திரகாரகரான சுக்கிரபகவான் அயன ஸ்தானத்தில் குருபகவானுடன் இணைந்திருப்பது குறை. குருபகவான் ஆறாம் வீட்டிற்கும் அதிபதியாகி விபரீத ராஜயோகம் பெற்று இருப்பதாலும் சுக்கிரபகவான் நவாம்சத்தில் பூர்வபுண்ணிய தொழில் ஸ்தானாதிபதியாகி உச்சம் பெறுவதால் இந்த இணைவால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
 தற்சமயம் கேது மஹா தசை முடியும் தறுவாயில் உள்ளதால் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். மற்றபடி மூலம், ஆயில்யம் நட்சத்திரங்கள் உள்ள பெண்ணை ஒதுக்க வேண்டாம்.
 ஏழாம் வீடும் எட்டாம் வீடும் காலியாக தான் இருக்க வேண்டியது அவசியமில்லை. பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com