என் மகனுக்கு வலது கண்ணில் ரெடினா பாதிப்பால் 1999- இல் அறுவை சிகிச்சை நடந்தது. மறுபடியும் அதே கண்ணில் பிரச்னை வந்தபோது 2012 -இல் அறுவை சிகிச்சை இடது கண்ணில் நடந்தது. அதில் தற்போது 75 சதவீதம் பார்வை உள்ளது. 6 மாதம் கழித்து வலது கண்ணில் அறுவை சிகிச்சை நடந்து தற்சமயம் 25 சதவீதம் தான் பார்வை உள்ளது. அவர் நல்ல வேலையில் இருப்பதால் வெளிநாடு வாய்ப்பு கிடைத்தால் அங்கு சென்று தக்க சிகிச்சை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதா? நானும் அவருடன் உதவிக்குச் செல்ல முடியுமா? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்? - வாசகி, சென்னை

உங்கள் மகனுக்கு மீன லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான சந்திரபகவான் சுயசாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) உச்சம் பெற்று வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசிய

உங்கள் மகனுக்கு மீன லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான சந்திரபகவான் சுயசாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) உச்சம் பெற்று வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் இருக்கும் நிலை) அதிபலம் பெற்று அமர்ந்திருக்கிறார். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி சிறப்பான பலம் பெற்றிருப்பது அவர் வாழ்க்கையில் அனைத்து நன்மைகளையும் பெறுவார் என்று உறுதியாகக் கூறமுடியும். லக்னத்திற்கும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் பத்தாம் வீட்டில் (மூலத்திரிகோண ராசியில்) கேதுபகவானின் சாரத்தில் (மூலம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். தனபாக்கியாதிபதியான செவ்வாய்பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சனிபகவானின் சாரத்தில் (அனுஷ நட்சத்திரம்) ஆட்சி பெற்று நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் ஆறாம் வீடான ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டில் சுய சாரத்தில் (பூரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைந்து விபரீத ராஜயோகம் பெற்று அமர்ந்திருக்கிறார். 
விபரீத ராஜ யோகம் என்பது மறைவு ஸ்தானங்களான 3,6,8,12 - ஆம் வீட்டுக்கதிபதிகள் இந்த மறைவு ஸ்தானங்களில் அமர்ந்திருப்பதாகும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த விபரீத ராஜயோகம் பெற்றவர்களுக்கு திடீரென்று அதிர்ஷ்ட வாய்ப்புகள் பொருள் வரவு ஆகியவை உண்டாகும் என்று கூறவேண்டும். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் ஆறாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியில் (கன்னி ராசி புதபகவானுக்கு ஆட்சி, உச்ச மூலத்திரிகோண வீடாகும்) அமர்ந்திருக்கிறார். புதபகவான் சுபக்கிரகமாக ஆவதால் கேந்திராதிபத்ய தோஷத்தைப் பெறுகிறார். அவர் மறைவு பெற்றிருப்பதாலும் அசுபக்கிரகத்துடன் இணைந்து இருப்பதாலும் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெறுகிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும். அதனால் அவரின் காரகத்துவங்கள் எந்தவித பாதிப்படையாமல் முழுமையாக வேலை செய்யும் என்றும் புரிந்து கொள்ள வேண்டும். 
லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் ராகுபகவானின் சாரத்தில் (சுவாதி நட்சத்திரம்) உச்சம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். பன்னிரண்டாம் அதிபதி எட்டாம் வீட்டில் இருப்பதும் விபரீத ராஜயோகத்தைக் கொடுக்கும். ராகுபகவான் மூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்தில் சூரியபகவானின் சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். கேதுபகவான் பாக்கிய ஸ்தானத்தில் சனிபகவானின் சாரத்தில் (அனுஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். 
பொதுவாக, ராகு- கேது பகவான்கள் 3,6,11 ஆம் வீடுகளில் இருப்பது சிறப்பாகும். ராகு- கேது பகவான்கள் அமர்ந்திருக்கும் இல்லங்களின் அதிபதிகள் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் அந்த சர்ப்ப கிரகங்களின் தசை அல்லது புக்தி நன்றாக வேலை செய்யும். அதோடு, ராகு- கேது பகவான்களுடன் ஆட்சி, உச்சம் பெற்ற கிரகங்கள் இணைந்திருந்தால் அது அஷ்டமஹா நாக யோகத்தைக் கொடுக்கும். அவருக்கு ராகுபகவான் உச்சம் பெற்ற சந்திரபகவானுடனும் கேதுபகவான் ஆட்சி பெற்ற பாக்கியாதிபதியான செவ்வாய்பகவானுடனும் இணைந்து இருப்பது சிறப்பு. இதனால் சர்ப்ப கிரகங்கள் இருவருக்கும் அஷ்டமஹா நாகயோகம் உண்டாகிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். 
"சர்வேந்திரியானாம் நேத்ரம் ப்ரதானம்' என்பார்கள். அதாவது, நமது உடலில் உள்ள அங்கங்களில் நேத்ரம் (கண்) முக்கியமானது மற்றும் முதலிடம் வகிக்கக் கூடியது என்பது பொருள். கண்ணுக்கு காரகராக முதலில் சூரியபகவானையும் அடுத்தபடியாக, சுக்கிரபகவானையும் ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. அவருக்கு லக்னாதிபதியை விட ஆறாமதிபதி சற்று கூடுதல் பலம் பெற்றிருக்கிறார். அதோடு ஆறாம் வீடும் சற்று கூடுதல் பலம் பெறுகிறது. பொதுவாக, எந்த ஒரு கிரகமும் சுயசாரத்தில் இருந்தால் அந்த கிரகம் அதிகமாக வலுவடைகிறது என்று பலமுறை கூறியுள்ளோம். ராகுபகவான் மூன்றாம் வீட்டில் பலம் பெற்றிருந்தாலும் அவர் சூரியபகவானின் சாரத்தில் உள்ளார். சூரியபகவான் ஆறாம் வீட்டுக்கதிபதியாகிறார். அவர் லக்னத்திற்கு விரோதியானாலும் லக்னாதிபதிக்கு நண்பராகிறார். மேலும் ஆறாம் வீட்டை குருபகவான் ஒன்பதாம் பார்வையாகப் பார்வை செய்கிறார். 
ராகுபகவானின் தசை சுயபுக்தியில் அவருக்கு முதலில் வலது கண்ணில் குறைபாடு ஏற்பட்டு அறுவை சிகிச்சை நடந்தது. பின்பு அந்த கண்ணில் மறுபடியும் குறைபாடு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யும் காலத்தில் தவறாக நன்றாக இருந்த இடது கண்ணில் அறுவை சிகிச்சை செய்து விட்டார்கள். அது ஆறியவுடன் மறுபடியும் பாதிக்கப்பட்ட வலது கண்ணில் அறுவை சிகிச்சை நடந்து தற்சமயம் வலது கண்ணில் கால்பங்கு பார்வையும் தவறாக அறுவை சிகிச்சை செய்த இடது கண்ணில் முக்கால்பங்கு பார்வையும் உள்ளதாக கூறியுள்ளீர்கள். தற்சமயம், இந்த ஆண்டு இறுதிவரை குருபகவானின் தசையில் சுயபுக்தி நடக்கிறது. அடுத்த ஆண்டு தொடங்கியுவுடன் அவருக்கு வெளிநாடு செல்ல எடுக்கும் முயற்சிகள் பயனளிக்கும். வெளிநாட்டைக் குறிக்கும் ஒன்பதாம் வீடும் பன்னிரண்டாம் வீடும் பலம் பெற்றுள்ளன. அதோடு, சனிபகவான் உச்சம் பெற்று சர ராசியிலும் ஒன்பதாம் வீடு நீர் ராசியாகவும் ஆவதால் உறுதியாக வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் தேடிவரும். அங்கு சென்று கண்ணிற்கு வைத்தியம் செய்து கொள்ளலாம். தாய்க்காரகரான சந்திரபகவான் உச்சம் பெற்றிருந்தாலும் பாக்கியாதிபதியால் பார்க்கப்படுவதாலும் நீங்களும் வெளிநாடு சென்று அவருடன் வசிக்கும் யோகமும் உள்ளது. பிரதி வெள்ளிக்கிழமைகளில் மஹாலட்சுமியையும் சுக்கிரபகவானையும் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானையும் சூரியபகவானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com