என் கணவருக்கு லக்னாதிபதி புதன் வக்கிரம். இது குறையா? கன்னி லக்னமாகி குருபகவான் உச்சம், நன்மை செய்வாரா? மேலும் சூரியன், சுக்கிரன் குருசாரம், இது நலமா? செவ்வாய் ஒன்பதில் இருப்பது குறை என்று நினைக்கிறேன். சனி, செவ்வாய் பார்வையால் பலம் குறையுமா? ராகு தசையில் கழுத்து வலி, முதுகு வலி உண்டாகிவிட்டது. இது தீருமா? எங்கள் மகளின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும். பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா? - வாசகி, சென்னை

உங்கள் கணவருக்கு கன்னி லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். லாப ஸ்தானாதிபதியான சந்திரபகவான் எட்டாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து

உங்கள் கணவருக்கு கன்னி லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். லாப ஸ்தானாதிபதியான சந்திரபகவான் எட்டாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். லக்னத்திற்கும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் சுய சாரத்தில் (ஆயில்ய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார். பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் பன்னிரண்டாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். தனம் வாக்கு குடும்பம் ஆகிய இரண்டாம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (புனர்பூச நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியில் நீச்சமடைகிறார். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் லாப ஸ்தானத்தில் புதபகவானின் சாரத்தில் (ஆயில்ய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியில் நீச்சமடைகிறார். அயன ஸ்தானாதிபதியான சூரியபகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (புனர்பூச நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் லாப ஸ்தானமான கடக ராசியிலேயே வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் இருக்கும் நிலை) அமர்ந்திருக்கிறார். ராகுபகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூரம் நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். கேதுபகவான் ஆறாம் வீட்டில் ராகுபகவானின் சாரத்தில் (சதய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் வர்கோத்தமம் பெறுகிறார்.
 அவருக்கு லக்னாதிபதி லாப ஸ்தானத்தில் சுய சாரத்தில் வக்கிரம் பெற்று அமர்ந்திருக்கிறார். வக்கிரம் பெற்றுள்ள கிரகங்கள் வலுக்குறைந்தனவா? என்று உங்களைப் போல் பலரும் கேட்கிறார்கள். அதற்கு பதில் " இல்லை' என்றே கூற வேண்டும். பொதுவாக, கிரகங்கள் சஞ்சரிக்கும் இடத்திலிருந்து சூரியபகவான் சஞ்சரிக்கும் நிலையை கொண்டு அதாவது ஈர்ப்பு விசைக்கு ஏற்ப நேர்கதியிலோ அல்லது வக்கிரகதியிலோ சஞ்சரிப்பார்கள் வக்கிர கதியில் சஞ்சரிக்கும் கிரங்கள் பலம் மிக்கவைகளாகவே கருதப்படுகின்றது. பலருக்கும் வக்கிர கிரகத்தின் தசையில் சிறப்பான கூடுதல் நன்மைகள் உண்டாவதைக் காண்கிறோம். அவருக்கு புதபகவான் வக்கிரம் பெற்று லாப ஸ்தானத்திலிருந்து தொழில் ஸ்தானத்தை நோக்கி சஞ்சரிக்கிறார். தொழில் ஸ்தானத்தில் பாக்கியாதிபதி அமர்ந்திருப்பதால் தர்மகர்மாதிபதி யோகத்தின் சாயல் உண்டாகிறது என்றும் கூற வேண்டும். புதபகவான் பொது அறிவு, கல்வி அறிவு, யூகம், புத்திசாலித்தனம், சிரிப்பு வரும் வகையில் பேசுதல், மென்மையான பேச்சு, பெருந்தன்மை, எழுத்துத்திறன், நடுநிலைமை, தர்க்கம் செய்வதில் ஆற்றல், வியாபாரம் ஆகியவற்றிற்குக் காரகராகிறார். பொதுவாக, புதபகவான் வலுத்து சூரியபகவானுடன் இணைந்திருப்பதை நிபுணத்துவ யோகம் என்பார்கள். இதை புதஆதித்ய யோகம் என்று பொதுவாகக் கூறுவார்கள். சூரிய, குருபகவான்கள் இணைந்து இருப்பதால் சிவராஜ யோகமும் உண்டாகிறது.
 களத்திர நட்பு ஸ்தானாதிபதியான குருபகவான் உச்சம் பெற்று தைரிய ஸ்தானத்தைப் பார்வை செய்வதால் தன்னம்பிக்கை கூடும். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்வதால் உங்கள் மகனும் நல்ல நிலையை எட்டி விடுவார். களத்திர நட்பு ஸ்தானத்தைப் பார்வை செய்வதால் மணவாழ்க்கை சிறக்கும். இவைகளுக்குக் காரணம் குருபார்க்க கோடி நன்மை என்பதே ஆகும். தைரிய அஷ்டமாதிபதியான செவ்வாய்பகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் நீச்சம் பெறுகிறார். பொதுவாக, அஷ்டமாதிபதி பலம் குறைந்து இருப்பது சிறப்பு. அதாவது கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்கிற ஜோதிடவழக்கின்படி இது நலமாகும். அவர் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் பாதிப்பு என்று எதுவும் இல்லை. செவ்வாய்பகவான் நான்காம் பார்வையாக சனிபகவானைப் பார்ப்பதும் சனிபகவான் பத்தாம் பார்வையாக செவ்வாய்பகவானைப் பார்ப்பதும் குறையா என்றால் "ஆம்' என்றே பதில் கூற வேண்டும்.
 சனி, செவ்வாய் பகவான்களின் பார்வை அல்லது சேர்க்கை வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் சிறு தாக்கத்தையாவது உண்டு பண்ணி விடுகிறது. இதை மறுப்பதற்கில்லை. மற்றபடி சனிபகவான் லக்ன சுபராக சுபத் தன்மையுடன் இருப்பதால் குறைகள் பெருமளவுக்குக் குறையும். லக்னாதிபதியைவிட அஷ்டாமதிபதி பலம் குறைந்திருந்தாலும் சனிபகவான் பலம் பெற்றிருப்பதாலும் தீர்க்காயுள் உண்டு. பொதுவாகவே, சனி, ராகு பகவான்கள் ஆத்ம நண்பர்களாக ஆகிறார்கள். அவர்கள் இருவரும் லக்ன சுபர்களாகி இணைந்து இருப்பது சிறப்பு. "சனிவத் ராகு' என்பது ஜோதிட வழக்கு. அதாவது சனிபகவானைப் போல் ராகுபகவான் பலன் கொடுப்பார் என்பது இதன்பொருள். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை ராகுபகவானின் தசையில் கேதுபகவானின் புக்தி நடக்கும். இந்த காலகட்டத்திற்குப்பிறகு நடக்கும் மூன்றாண்டுகள் சுக்கிரபகவானின் புக்தியாகும். சுக்கிரபகவான் தொழில் ஸ்தானத்தில் ராகுபகவானுக்கு லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு.
 பொதுவாக, குருபகவானின் நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்கள் முறையே, மிதுனம், கடகம், துலாம், விருச்சிகம், கும்பம், மீனம் என்ற ஆறு ராசிகளில் பரவியுள்ளது. இந்த நட்சத்திரங்களில் செல்லும் கிரகங்கள் தங்களின் அசுப பலன்களைக் குறைத்தும் சுப பலன்களைக் கூட்டியும் கொடுப்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அவருக்கு சூரிய, சுக்கிரபகவான்கள் குருபகவானின் நட்சத்திரங்களில் சஞ்சரிப்பது நன்மைகளைக் கூட்டும் அமைப்பாகும். இதனால் ராகுபகவானின் தசையில் சுக்கிரபகவானின் புக்தியை "பொற்காலம்' என்று கூறலாம். மேலும் ராகுபகவான் வர்கோத்தமத்தில் உள்ளதால் அதனால் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப்பிறகு முதுகு வலி பிரச்னை மறைந்துவிடும். உயர் பதவிகள் தேடிவரும். வெளிநாடு சென்று வரும் பாக்கியமும் உண்டாகும். எதிர்காலம் வளமாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com