பிஎஸ்-III விவகாரம்: இருசக்கர வாகனத் துறைக்கு ரூ.600 கோடி இழப்பு

பிஎஸ்-III வாகன விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையால் இருசக்கர வாகனத் தயாரிப்புத் துறைக்கு ரூ.600 கோடி இழப்பு ஏற்பட்டதாக கிரிசில் நிதி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிஎஸ்-III விவகாரம்: இருசக்கர வாகனத் துறைக்கு ரூ.600 கோடி இழப்பு

பிஎஸ்-III வாகன விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையால் இருசக்கர வாகனத் தயாரிப்புத் துறைக்கு ரூ.600 கோடி இழப்பு ஏற்பட்டதாக கிரிசில் நிதி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
புதிய நிதி ஆண்டு முதல் பிஎஸ்-III வாகன விற்பனைக்குத் தடைவிதித்து உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
இந்த தடை அமலுக்கு வருவதற்கு முன்பாக, இருசக்கர வாகன தயாரிப்புத் துறையைப் பொருத்தவரையில், 6,70,000 பிஎஸ்-III வாகனங்கள் விற்பனையாகாமல் விநியோக மையங்களில் தேங்கியிருந்தன. அதன் மதிப்பு ரூ.3,800 கோடியாகும். இது, மாதாந்திர விற்பனையில் பாதியாகும்.
அதிரடியாக விதிக்கப்பட்ட தடையை அடுத்து, அந்த ரக வாகனங்களை உடனடியாக விற்றுத் தீர்க்க வேண்டிய கட்டாயம் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்பட்டது. இதனால், மார்ச் மாத கடைசி மூன்று தினங்களில் மட்டும் 10-30 சதவீத தள்ளுபடி சலுகைகளை வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் வாரி வழங்கின.
இந்த சலுகைகளின் மதிப்பு ரூ.600 கோடியாகும். இதில், 70 சதவீத தொகையை சுமார் ரூ.460-ரூ.480 கோடியை இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்கும். எஞ்சிய இழப்பு விநியோகஸ்தர்களை சார்ந்தது.
இதர நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், பஜாஜ் ஆட்டோ, யமஹா மற்றும் ஐஷர் நிறுவனங்களில் பிஎஸ்-III வாகன விற்பனை தடைக்கான பாதிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. ஏனெனில், அந்த நிறுவனங்கள் 2017 ஜனவரி முதல் பி.எஸ்-ஐய விதிமுறைக்கு ஏற்ப தங்கள் உற்பத்தியை தொடங்கி விட்டன.
அதேபோன்று, ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா மற்றும் டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனங்களும் தங்களின் தயாரிப்புகளில் பெரும்பாலானவற்றை புதிய விதிமுறைக்கு ஏற்ப தயார்படுத்தி விட்டன.
கார் தயாரிப்பு நிறுவனங்களைப் பொருத்தவரையில் தடைக்கு முன்பாக பிஎஸ்-III தொழில்நுட்பத்தில் 16,000 கார்கள் மட்டுமே விற்பனையாகாமல் இருந்தன. இதனால், சலுகைகளால் ஏற்பட்ட இழப்பின் தாக்கம் அந்த நிறுவனங்களுக்கு மிக குறைவாகவே காணப்பட்டது.
ஆனால், உரிமம் உள்ளிட்ட பிரச்னைகளால் ஆட்டோ உள்ளிட்ட மூன்று சக்கர வாகனங்களை முழுமையாக விற்றுத் தீர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன் தாக்கம் பி.எஸ்-ஐய விதிமுறைக்கு ஏற்கெனவே மாறிய பியாஜியோ, டி.வி.எஸ்., மற்றும் பஜாஜ் ஆகிய நிறுவனங்களில் குறைவாகவே இருக்கும்.
வர்த்தக வாகன தயாரிப்பு நிறுவனங்களைப் பொருத்தவரை, விற்பனையாகாமல் தேங்கியிருந்த பி.எஸ்-III ரக வாகனங்களின் எண்ணிக்கை 97,000-ஆகும். இது, 1.7 மாத கால அளவில் அந்த நிறுவனங்கள் விற்பனை செய்ய வேண்டிய அளவாகும். அந்த வாகனங்களின் மதிப்பு ரூ.11,600 கோடி.
தடைக்கு முன்பாக 10 சதவீத சலுகைகளை மட்டுமே வழங்கி வந்த வர்த்தக வாகன தயாரிப்பு நிறுவனங்கள், தடைக்குப் பின்பு 20-40 சதவீத தள்ளுபடி சலுகைகளை வாரி இறைத்தன. அதன் மூலம், 55 சதவீத வாகனங்கள் விற்பனையாகியிருக்கும் என்று வர்த்தக வாகனத் துறை எதிர்பார்த்துள்ளது.
சலுகைகள் மூலம் வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ரூ.2,500 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று அந்த அறிக்கையில் கிரிசில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com