நானும், கமலும் செய்ய முடியாததை ஜெயமோகன் சாதித்துள்ளார்: இளையராஜா புகழாரம்

மகாபாரத்தை நாவல் வடிவில் எழுதுவதன் மூலம், திரைத் துறையில் நானும், கமல்ஹாசனும் செய்ய முடியாததை எழுத்துத் துறையில் ஜெயமோகன் சாதித்துக் காட்டி உள்ளார் என்று இசையமைப்பாளர் இசையராஜா புகழாரம் சூட்டினார்.
நானும், கமலும் செய்ய முடியாததை ஜெயமோகன் சாதித்துள்ளார்: இளையராஜா புகழாரம்
Published on
Updated on
2 min read

மகாபாரத்தை நாவல் வடிவில் எழுதுவதன் மூலம், திரைத் துறையில் நானும், கமல்ஹாசனும் செய்ய முடியாததை எழுத்துத் துறையில் ஜெயமோகன் சாதித்துக் காட்டி உள்ளார் என்று இசையமைப்பாளர் இசையராஜா புகழாரம் சூட்டினார்.

எழுத்தாளர் ஜெயமோகன் "வெண்முரசு' எனும் பெயரில் மகாபாரதத்தை நாவல் வடிவில் எழுதி வருகிறார். மொத்தம் 30 ஆயிரம் பக்கங்களில், 30 நாவல்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய நாவல் வரிசையாக "வெண்முரசு' எதிர்காலத்தில் விளங்க வேண்டும் என்ற நோக்கில், கடந்த ஓராண்டில், முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் ஆகிய நாவல்களை ஜெயமோகன் எழுதி முடித்துள்ளார்.

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில், இந்த நாவல்கள் வெளியீட்டு விழா, சென்னை எழும்பூர், அருங்காட்சிய கலையரங்கில் ஞாயிற்றக்கிழமை நடைபெற்றது. நாவல்களை வெளியிட்டு இசையமைப்பாளர் இளையராஜா பேசியது:

ஜெயமோகன் மகாபாரதத்தை நாவல் வடிவில் எழுதி வருகிறார். அவரின் இந்தப் படைப்புக்கு இசையமைக்க நேர்ந்தால், அவர் எழுதும் வேகத்துக்கு என்னால் இசையமைக்க முடியுமா எனத் தெரியவில்லை.

மகாபாரதத்தை தமிழில் நாவல் வடிவில் எழுதுவதன் மூலம், திரைத் துறையில் நானும், கமல்ஹாசனும் செய்ய முடியாததை எழுத்துத் துறையில் ஜெயமோகன் சாதித்துக் காட்டி உள்ளார் என்றார் அவர்.

நடிகர் கமல்ஹாசன்: பைபிளை மிஞ்சும் அளவுக்கு 3,000 ஆண்டுகளுக்கு மேலாக பேசப்படும் உலகின் மிகப்பெரிய இலக்கியப் படைப்பாக உள்ள மகாபாரதத்தை, நாவல் வடிவில் எழுதும் ஜெயமோகனின் முயற்சி மிகவும் தைரியமானது. மகாபாரத்தை நாவல் வடிவில் எழுதும் கடினமான தமது முயற்சியின் மூலம் ஜெயமோகன் பேராசை மிக்கவராகத் தெரிகிறார் என்றார் அவர்.

எழுத்தாளர் ஜெயமோகனின் ஏற்புரை:

மகாபாரதத்தை நாவலாக எழுத வேண்டும் என்பது 25 ஆண்டுகளுக்கு மேலான என் கனவு.

ஐரோப்பிய மரபுகளை எடுத்துரைக்க, கிரேக்க- ஆர்மீனிய மொழிகளில் பரந்துப்பட்ட படைப்புகள் இருப்பதைப்போல், நமது பெருமைமிக்க இதிகாசமான மகாபாரதத்தை பெரிய அளவில் மறு ஆக்கம் செய்ய வேண்டும் என்ற எனது வேட்கையையும் இந்த நாவலை எழுத முக்கியக் காரணம்.

30 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட நாவலை இந்தக் காலத்தில் யார் படிப்பார்கள் என்ற கேள்வி என் முன் வைக்கப்படுகிறது. இதற்கு, 300 பக்கங்களே கொண்ட நாவலாக இருந்தாலும், அந்தப் படைப்பு நன்றாக இóல்லையென்றால் அதனை யாரும் படிக்கமாட்டார்கள் என்பதுதான் என் பதில்.

வெண்முரசு நாவல் வரிசையில் இதுவரை எழுதப்பட்டுள்ள நான்கு நாவல்களை, இணைய தளத்தில் தினமும் சராசரியாக 5,000 பேர் படிக்கின்றனர்.

இந்த நாவல் முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட பின்பு, பீஷ்மர், துரோணர், அர்ச்சுனர், கிருஷ்ணர், திரௌபதி, குந்தி என மகாபாரதத்தின் அனைத்து கதைமாந்தர்கள் பற்றி விரிவாக விவரிக்கும் உலகின் சிறந்த படைப்பாகவும், தமிழில் அதிகம் படிக்கப்படும் படைப்பாகவும் வெண்முரசு விளங்கும் என்றார் அவர்.

முன்னதாக, மூத்த எழுத்தாளர்கள் அசோகமித்திரன், பிரபஞ்சன், நாஞ்சில் நாடன், பி.ஏ.கிருஷ்ணன் ஆகியோர் ஜெயமோகனை வாழ்த்திப் பேசினர்.

பல ஆண்டுகளாக, மகாபாரதம் பிரசங்கம் செய்துவரும் சொற்பொழிவாளர்கள் இரா.வ.கமலக்கண்ணன், கிருஷ்ணமூர்த்தி, ஏ.கே.செல்வதுரை, கூத்துக் கலைஞர்கள் தேவன், ராமலிங்கம் ஆகியோர் கெüரவிக்கப்பட்டனர்.

வெண்முரசு நாவல்களுக்கு ஓவியம் வரைந்துவரும் மணிகண்டன், சண்முகவேல், மகாபாரதத்தை தமிழில் மொழிபெயர்த்து இணையத்தில் வெளியிட்டு வரும் அருள்செல்வர் பேரரசன் ஆகியோரும் கெüரவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com