ஜெயலலிதா மறைவு: திரையுலகம் கண்ணீர் அஞ்சலி!

விஜய், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, மனோபாலா, கெளதமி உள்ளிட்ட பலரும்...
ஜெயலலிதா மறைவு: திரையுலகம் கண்ணீர் அஞ்சலி!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை (டிச.5) இரவு 11.30 மணிக்கு மறைந்தார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் கடந்த 75 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.4) மாலை 5 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை இரவு வரை அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. தில்லியிலிருந்து எய்ம்ஸ் மருத்துவர்களும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை குறித்து ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டார் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் அறிவித்துள்ளது. கலைத்தாயின் மகளுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது என்று அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. 

ஜெயலலிதாவின் மறைவையொட்டி தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சிகளின் படப்பிடிப்புகள் அனைத்தும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. 

தமிழ்த் திரையுலகில் விஜய், சத்யராஜ், கார்த்தி, செந்தில், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, மனோபாலா, கெளதமி, கோவை சரளா, குட்டி பத்மினி உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.

சமூகவலைத்தளத்தில் திரையுலகினர் தெரிவித்த இரங்கல் பதிவுகள்:

ரஜினி: தமிழ்நாடு மட்டுமல்ல, இந்திய நாடே தன்னுடைய வீரப்புதல்வியை இழந்து தவிக்கிறது. மரியாதைக்குரிய நம் முதல்வரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

அமிதாப் பச்சன்: இந்தியத் திரையுலகின் நூற்றாண்டு விழாவை எல்லா மொழிகளுக்கும் கொண்டாடிய முதல்வர் ஜெயலலிதா மட்டுமே. மிகவும் மதிப்பு வாய்ந்தவர்.

ஷாருக் கான்: ஜெயலலிதா அவர்களின் மரணம் வருத்தத்தை அளிக்கிறது. அவர் ஆன்மா சாந்தியடையட்டும். 

த்ரிஷா: எனக்கு மிகவும் பிடித்தமானவர். அவர் படித்த பள்ளியில் நானும் படித்தேன் என்பது எனக்குப் பெருமிதமானது. 

சிவகார்த்திகேயன்: மிகவும் வருத்தமாக இருக்கிறேன். நிகரில்லாப் பெண்மணி. இரும்பு மனிதர். 

சுஹாசினி: உடைந்துபோயிருக்கிறேன். இதயம் நொறுங்கியுள்ளது. வருத்தத்தைக் கண்ணீரால் விளக்கமுடியாது. மிகவும் வருத்தமாக உள்ளேன்.

விக்ரம் பிரபு: மிகவும் சக்திமிக்க தலைவர். அம்மாவாக வாழ்ந்தவர்.  அவரை நாம் இழந்துவிட்டோம். 

இயக்குநர் வெற்றிமாறன்: மிகவும் வருத்தமாக உள்ளது. அவர் ஆன்மா சாந்தியடையட்டும். 

ஆர்ஜே பாலாஜி: என் அம்மா அழுகிறார். என் குடும்பத்தில் ஒருவரை இழந்ததுபோல உள்ளது. பலரும் அப்படித்தான் எண்ணுகிறோம். இன்னொரு அம்மா கிடையாது. அவரை இழந்து வாடுகிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com