ஏழாவது தேசிய விருது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: வைரமுத்து பேட்டி

முதல் விருது பரவசம்; இரண்டாவது விருது மகிழ்ச்சி; மூன்றாவது விருது சின்ன பரவசம்; நான்காவது விருது ஒரு செய்தி...
ஏழாவது தேசிய விருது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: வைரமுத்து பேட்டி

64-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இயக்குநர் பிரியதர்ஷன் தலைமையிலான தேர்வுக்குழு இவ்விருதுகளைத் தேர்வு செய்துள்ளது. தில்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. விருது அறிவிப்பு வந்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வைரமுத்து கூறியதாவது:

இந்த விருதினால் உண்டாகும் பெருமை தமிழ் மொழிக்குதான். எனக்கு அல்ல. பாட்டு என்பது கூட்டு முயற்சி. நாடு அடையும் மகிழ்ச்சியே பெரிது. இந்தப் பாட்டு தற்கொலைக்கு எதிரான பாட்டு. தன்னம்பிக்கையை வளர்க்கும் பாட்டு. இந்தப் பாட்டின் உருவாக்கத்தில் பங்கேற்ற கலைஞர்களை மறக்கமாட்டேன். கலை என்பது கொண்டாட்டம் மட்டுமா, குத்துப்பாட்டு மட்டுமா. கற்பிப்பது, தன்னம்பிக்கை ஊட்டுவது. அதற்கு இந்தப் பாட்டு பயன்பெறும் என்றால் நான் மகிழ்ச்சியடைவேன்.

இந்தப் பாட்டின் பயன் தேசிய விருது என்கிறபோது புளகாங்கிதம் அடைகிறேன். இயக்குநர்களுக்கு, தயாரிப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் - கலையின் வாயிலாக இந்தச் சமூகத்துக்குக் கற்றுக்கொடுக்கிற மாதிரி ஒரு வாய்ப்பை உருவாக்குங்கள். எம்ஜிஆர், சிவாஜி பாடல்கள் இன்னமும் மக்களுக்குத் தன்னம்பிக்கை அளிக்கின்றன. அந்த எச்சம் இன்னும் உள்ளது. அது தொடர்ச்சியாக இருக்கவேண்டும். கற்றுக்கொடுக்க வேண்டிய பாடல் படத்தில் இருக்கவேண்டும்.

முதல் மரியாதை படத்துக்காக முதல் விருது கிடைத்தபோது பரவசப்பட்டேன். அப்போது தேசிய விருது பற்றி எனக்குத் தெரியாது. கண்களில் ஓரத்தில் கண்ணீர் துளி வந்தது.

ஆக முதல் விருது பரவசம்; இரண்டாவது விருது மகிழ்ச்சி; மூன்றாவது விருது சின்ன பரவசம்; நான்காவது விருது ஒரு செய்தி; ஐந்தாவது விருது ஒரு புகழ்; ஆறாவது விருது பொறுப்பு. இப்போது கிடைத்துள்ள ஏழாவது தேசிய விருது அச்சத்தை உருவாக்கியுள்ளது. இந்த ஏழாவது விருதை நான் எப்படித் தக்கவைத்துக்கொள்ளப் போகிறேன் என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொழில்நுட்பத்தின் வேகத்தால் ஒரு தலைமுறை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறிவருகிறது. இவர்களோடு நானும் பயணப்படவேண்டும் என்கிற அச்சமும் பொறுப்பும் உள்ளது.

தமிழ்நாட்டுக்கு 5 விருதுகளை அளித்த தேர்வுக்குழுவுக்கு நன்றி. ஐந்து விருதுகளும் தகுதி அடைப்படையில் பெறப்பட்டவை. 

தமிழ் சினிமாவில் புதிய தலைமுறை வந்துள்ளது. அவர்களது கருப்பொருள் புதிதாக உள்ளது. இன்னும் பெரிய விருதுகளை தமிழ்க் கவிஞர்கள் பெறுவார்கள்.

நான் ஊடகங்களால் வளர்க்கப்பட்டவன். ஊடகம் இல்லாவிடால் வாழ்க்கை இல்லை, புகழ் இல்லை. ஊடகங்களைப் புறக்கணித்து ஒருவன் முன்னேற முடியாது. நான் தவறான சொற்களைப் பயன்படுத்தினால் என்னைத் திருத்தவேண்டிய கடமை ஊடக நண்பர்களுக்கு உண்டு.  மணி ரத்னம், பாரதிராஜா படங்களுக்கு இரு விருதுகள் கிடைத்துள்ளன. இப்போது இயக்குநர் சீனு ராமசாமி படங்களுக்காகப் பாடல் எழுதியதிலும் இரு விருதுகள் பெற்றுள்ளேன். 

விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என்று சொல்வார்கள். அதனால் தான் யாரும் திரும்பிப் பார்ப்பதில்லை. விவசாயிகள் பற்றி தமிழ் சினிமா படம் தயாரிக்கவேண்டும். அப்படிப் படம் எடுத்தால் அதற்கு நான் இலவசமாகப் பாட்டெழுதித் தருகிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com