விஷால் நடவடிக்கை ஆரம்பம்: தயாரிப்பாளர்களுக்குக் கடிதம்!

அன்பான தயாரிப்பாளர்களுக்கு, தாங்கள் தயாரித்த படங்களில் வெளியிடமுடியாத, தொலைக்காட்சி உரிமம் கிடைக்காத..
விஷால் நடவடிக்கை ஆரம்பம்: தயாரிப்பாளர்களுக்குக் கடிதம்!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் சார்பாக கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

அன்பான தயாரிப்பாளர்களுக்கு, தாங்கள் தயாரித்த படங்களில் வெளியிடமுடியாத, தொலைக்காட்சி உரிமம் கிடைக்காத, மானியம் கிடைக்காத படங்களின் விவரங்களை வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்குள் தெரியப்படுத்தவும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தமிழ் சினிமாவில் நீண்ட நாளாக நிலவும் முக்கிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண விஷால் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துவிட்டார் என அறிந்துகொள்ள முடிகிறது. விஷால் அக்கடிதத்தில் கோரியபடி படப்பட்டியல்கள் கிடைத்தபிறகு அதற்குரிய நடவடிக்கை என்னவாக இருக்கும் என்கிற ஆர்வம் எழுந்துள்ளது. மற்ற தயாரிப்பாளர் சங்கத் தலைவர்களிடமிருந்து எந்தளவுக்கு விஷாலின் நடவடிக்கைகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற எதிர்பார்ப்பும் தயாரிப்பாளர்களிடம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டுகளில் நிர்வாகப் பொறுப்பை வகித்த கலைப்புலி எஸ்.தாணு தலைமையிலான நிர்வாகத்தின் பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. கடந்த முறை பதவி வகித்த கலைப்புலி எஸ்.தாணு தலைமையிலான நிர்வாகத்தைக் குறை கூறி வந்த, நடிகர் விஷால் தனது தலைமையில் புதுக் கூட்டணி அமைத்து இத்தேர்தலில் களம் கண்டார். "நம்ம அணி' என்று உருவாக்கப்பட்ட இந்த அணியின் சார்பில் இயக்குநர்கள் மிஷ்கின், பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ்மேனன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதே போல் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் முன்னேற்ற அணியின் சார்பில் ஆர். ராதாகிருஷ்ணன் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் எழுச்சி கூட்டணி சார்பில் கேயார் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என 27 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. சென்னை அண்ணா நகர், கந்தசாமி நாயுடு கல்லூரியில் நடைபெற்ற வாக்குப்பதிவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகைகள் குஷ்பூ, ராதிகா உள்ளிட்டோர் வாக்களித்தனர். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் 1059 வாக்குகள் பதிவாகின. ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் மேற்பார்வையில் நடைபெற்ற இத்தேர்தலில் 478 வாக்குகள் பெற்று விஷால் பெற்றி பெற்றார். ராதாகிருஷ்ணனுக்கு 335 வாக்குகள் கிடைத்தன. கேயார் 224 வாக்குகள் பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com