சமுத்திரக்கனியின் 'அப்பா' படத்துக்குத் தேசிய விருது கிடைக்காதது ஏன்? பிரியதர்ஷன் விளக்கம்

சமுத்திரக்கனி இயக்கிய அப்பா படம் தனக்குப் பிடித்ததாகவும் ஆனால்... 
சமுத்திரக்கனியின் 'அப்பா' படத்துக்குத் தேசிய விருது கிடைக்காதது ஏன்? பிரியதர்ஷன் விளக்கம்

64-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. இயக்குநர் பிரியதர்ஷன் தலைமையிலான தேசியத் திரைப்படத் தேர்வுக் குழுவினர், தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் தேசிய விருதுகளுக்குத் தேர்வானவையின் பட்டியலை அவர்கள் அப்போது வெளியிட்டனர். அதில், தேசிய அளவில் சிறந்த திரைப்படமாக மராத்தியில் வெளியான 'காசவ்' தேர்வானது. சிறந்த நடிகராக அக்ஷய் குமாரும் ('ருஸ்தம்' - ஹிந்திப் படம்), சிறந்த நடிகையாக சுரபி லட்சுமியும் ('மின்னாமினுங்கு' - மலையாளப்படம்) அறிவிக்கப்பட்டார்கள். தேசிய விருதை அக்ஷய் குமார் பெறுவது இதுவே முதன்முறையாகும். சிறந்த இயக்குநருக்கான விருது மராத்தி இயக்குநர் ராஜேஷ் மாபுஷ்கருக்கு கிடைத்தது. 'வெண்டிலேட்டர்' என்ற திரைப்படத்தை இயக்கியதற்காக அவர் இவ்விருதுக்கு தேர்வானார். பிராந்திய மொழிப்படங்களைப் பொருத்தவரை தமிழில் 'ஜோக்கர்' படத்துக்கு விருது கிடைத்தது.

சமுத்திரக்கனி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் 'அப்பா'. சமுத்திரக்கனி இயக்கி, தயாரித்து, நடித்திருந்தார். விமரிசன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் சமுத்திரக்கனி இயக்கிய அப்பா படம் தனக்குப் பிடித்ததாகவும் ஆனால் அது பிராந்தியத் தேர்வுக்குழுவால்கூட தேர்வு செய்யப்படவில்லை எனவும் இயக்குநர் பிரியதர்ஷன் கூறியுள்ளார். தேசிய விருது குறித்த சர்ச்சைகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார். அதில் அப்பா படம் குறித்து அவர் கூறியதாவது: தேர்வுக்குழுவுக்குத் தலைமை தாங்கும் முன்பு அப்பா, லீலா, Guppy போன்ற படங்கள் எனக்குத் தனிப்பட்ட முறையில் பிடித்தன. ஆனால் இந்தப் படங்கள் பிராந்தியத் தேர்வுக்குழுக்களால் தேர்வு செய்யப்படவில்லை. ஆக விருது வந்த 334 படங்களில் எனக்குப் பிடித்த பல படங்கள் தேசியத் தேர்வுக்குழுக்கள் பார்த்த 86 படங்களுக்குள் இடம்பெறவில்லை. இந்த 86 படங்களில் இருந்து 38 தேர்வுக்குழுவினர்கள் தேசிய விருதுக்கான படங்களையும் கலைஞர்களையும் தேர்வு செய்தார்கள் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com