மே 30 முதல் வேலை நிறுத்தம்: நடிகர் விஷால் எச்சரிக்கை!

திருட்டு விசிடியை ஒழிக்கக்கோரி மத்திய, மாநில அரசுகளிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால்...
மே 30 முதல் வேலை நிறுத்தம்: நடிகர் விஷால் எச்சரிக்கை!

திருட்டு விசிடியை ஒழிக்கக்கோரி மத்திய, மாநில அரசுகளிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தமிழ்த் திரையுலகில் மே 30-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் நடைபெறும் என நடிகர் விஷால் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தென்னிந்திய திரைப்படத் துறையினர் சந்திக்கும் சவால்கள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி, தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வரும் நிலையில், தென்னிந்திய திரைப்படங்களுக்கு குறைந்த அளவிலேயே வரி விதிக்கப்பட வேண்டும் என மத்திய நகர்ப்புற மேம்பாடு மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடுவிடம் கோரிக்கை வைத்தார் தயாரிப்பு சங்கத் தலைவர் விஷால். அத்துடன் திருட்டு விசிடியை ஒழிப்பது தொடர்பாக பல்வேறு விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இணையதளங்களில் புதிய திரைப்படங்கள் வெளியாவதை தடுக்கும் வகையில், ISP (Internet Service Provider) தொடர்பான விஷயங்களில் மத்திய அரசின் உதவி தேவைப்படுவது பற்றியும் தெரிவித்தார். 

இவ்வாறு தமிழ் திரையுலகம் சார்பில் பல்வேறு கோரிக்களை அமைச்சரிடம் தரப்பட்டன. மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு அப்போது பேசியது: நீண்ட நாட்களாக திருட்டு விசிடி பிரச்னையால் திரைத்துறை பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும். நாடு முழுவதும் ஒரே மாதிரியான சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு இருப்பது நல்லதுதான். ஆனால், திரைத்துறையை யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. எனது கவனத்துக்கு எடுத்து வந்துள்ளீர்கள். சில வரிவிதிப்புகள் மாநில மொழி திரைப்படத் துறைகளைப் பாதிக்கும் என சொல்லியிருக்கிறீர்கள். அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஜிஎஸ்டியில் இருக்கும் கட்டணம் எதுவும் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டதல்ல. ஜிஎஸ்டி குழுவால் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த குழுவில் மத்திய நிதியமைச்சரோடு அனைத்து மாநில நிதியமைச்சர்களும் இருக்கிறார்கள். அவர்கள் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வருவார்கள் என்றார்.

இந்நிலையில் விஷால் இன்று கூறியதாவது: திருட்டு விசிடியை ஒழிக்கக்கோரி மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்தோம். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மே 30-ம் தேதி முதல் தமிழ்த் திரையுலகில் வேலை நிறுத்தம் நடைபெறும். திருட்டு விசிடியில் படம் பார்ப்பது குற்றம் என மக்களுக்குப் புரியவில்லை. அவர்கள் இதை உணர திருட்டு விசிடிக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விஷால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com