மணி ரத்னத்தின் 'திருடா திருடா’ படத்தைத் தோல்வியடைய வைத்த 'ராசாத்தி’ பாடல்!

இதுவரைக்கும் இந்த விஷயத்தை எங்கும் சொன்னதில்லை என்று வைரமுத்து...
மணி ரத்னத்தின் 'திருடா திருடா’ படத்தைத் தோல்வியடைய வைத்த 'ராசாத்தி’ பாடல்!

மணி ரத்னம் இயக்கத்தில் 1992-ல் வெளியான ரோஜா படம் இன்றைய பாகுபலி போல இந்திய அளவில் ஹிட் ஆனது. அதற்குப் பிறகு மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான மணி ரத்னம் படம், திருடா திருடா. பிரசாந்த், ஆனந்த், ஹீரா நடித்தார்கள். ஆனால் இந்தப் படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. பாடல்கள் மட்டும் சூப்பர் டூப்பர் ஹிட். இன்றைக்கும் ரஹ்மானின் சிறந்த படங்களில் ஒன்றாக உள்ளது.

இந்தப் படத்தின் தோல்விக்குக் காரணம், வைரமுத்துவின் கவித்துவமான வரிகள் கொண்ட ராசாத்தி என் உசுரு என்னுதுல்ல பாடல் என்பது மணி ரத்னத்தின் கருத்து. இதைச் சொன்னவர் வைரமுத்து.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் வைரமுத்து, மணி ரத்னம், ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டார்கள். அப்போது வைரமுத்து கூறியதாவது: 

இதுவரைக்கும் இந்த விஷயத்தை எங்கும் சொன்னதில்லை. இப்போது சொல்வதற்குக் காரணம், அருகில் இதன் சாட்சியாக மணி ரத்னம் உள்ளார். 

திருடா திருடா படத்தில் இடம்பெற்ற ராசாத்தி பாடலின் ஒலிப்பதிவு அப்போது நடந்துகொண்டிருந்தது. கிழக்குச் சீமையிலே படத்துக்காக ஒலிப்பதிவுக் கூடத்துக்கு வந்த பாரதிராஜா, இப்பாடலைக் கேட்டு என்னைக் கடிந்துகொண்டார். என்ன கவிஞர் நீங்க, எனக்கு எழுதவேண்டிய பாடலையெல்லாம் மணி ரத்னத்துக்கு எழுதிவிட்டீர்கள். என்ன மாதிரியான பாட்டு இது என்று அதைப் புகழ்ந்தார்.

ஆனால், படம் வெளிவந்தபிறகு மணி ரத்னம் என்னிடம் சொன்னார்: திருடா திருடா படத்தைத் தோல்வியடையச் செய்ததிலும் படத்தின் பின்னடவைக்கும் இந்தப் பாட்டுக்குப் பெரிய பங்கு உள்ளது.

ஏன் என்று ஆச்சர்யத்துடன் கேட்டதற்கு அவர் சொன்ன பதில்:

நான் ஒரு பொழுதுபோக்குப் படம் எடுத்துள்ளேன். மென்மையாக. சந்தோஷமாக படம் பார்த்துவிட்டுச் செல்லும்படி. ஆனால் நீங்கள் இந்தப் பாட்டில் ஒரு காதல் காவியமே படைத்துவிட்டீர்கள். காரை வீட்டுத் திண்ணையில கறிக்கு மஞ்சள் அரைக்கையில, மஞ்சளை அரைக்கும்முன்னே மனசை அரைச்சவளே... என்கிற வரிகளையெல்லாம் கேட்டுவிட்டு மணி ரத்னம் மகா காதல் காவியம் எடுத்துவிட்டார் என்று ரசிகன் உள்ளே வந்திருக்கிறான். அங்குப் பார்த்தால் படம் பொழுதுபோக்காக உள்ளது. இந்தப் படத்துக்கும் பாட்டுக்கும் உறவு இல்லையே என்று அவன் ஏமாந்துபோய்விட்டான் என்றார் வைரமுத்து.

பாத்திரம் அறிந்து பிச்சையெடு என்பதுபோல படம் அறிந்து பாட்டெழுது என்கிற பாடத்தை நான் கற்றுக்கொண்டேன் இந்தப் படத்தில் என்றார்.

அவர் பேசிமுடித்தபிறகு மணி ரத்னம் இதற்கான காரணத்தை மேலும் விளக்கினார்: பாடலை முதல்முதலாகக் கேட்கும்போதே தெரியும், இது படத்தை விட்டு தாண்டியுள்ளது என்று. ஆனால் நான் அவரிடம் பாடலின் சூழல் சொன்னபோது, அவரை ஊக்கப்படுத்துவதற்காக கொஞ்சம் ஜாஸ்தியாகச் சொல்லிவிட்டேன். தேவதாஸ் போல ஒரு பாடல் வேண்டும் என்று கேட்டேன். அவரும் அதில் முழுவதுமாக இறங்கிவிட்டார். பாடலைக் கேட்டபிறகு இதைப் படத்தில் பயன்படுத்தக்கூடாது என்று புரிந்தது. ஆனால் இந்த மாதிரியான பாடலை விட்டுக்கொடுக்கவும் மனம் வரவில்லை. படத்தில் வைத்துவிட்டேன். சிலசமயம் இதுபோல நடந்துவிடும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com