பெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: காலா, மெர்சல் படப்பிடிப்புகள் ரத்து!

பெப்சி அமைப்பைச் சேர்ந்த 25,000 தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் காலா, மெர்சல் உள்ளிட்ட...
பெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: காலா, மெர்சல் படப்பிடிப்புகள் ரத்து!

ஒப்பந்தப்படி ஊதியம் வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் (பெப்சி) தொழிலாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பெப்சி அமைப்பு என்பது திரைப்பட உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் அமைப்பாகும். இதில், சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். இந்நிலையில் பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

தொழிலாளர்களுக்கு ஊதியத்தை தர மறுப்பது நியாயமாகாது. சம்பளப் பிரச்னை தீர்க்கப்படாததால்தான் படப்பிடிப்பு தளங்களில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. பெப்சி ஊழியர்களை மட்டுமே பணியில் அமர்த்த வேண்டும்: பெப்சி அமைப்புக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்குமான பிரச்னை பேசித் தீர்க்கக் கூடியதே, அதற்கான சூழல்களை நாம்தான் உருவாக்க வேண்டும். சம்பளம் குறித்து பேசும் அதேவேளையில் பெப்சி ஊழியர்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் தயாரிப்பாளர் சங்கம் ஏற்க வேண்டும். தயாரிப்பாளர்கள் பெப்சி தொழிலாளர்களுடன் வேலை செய்யமாட்டோம் என்று எடுத்துள்ள முடிவையும் திரும்பப் பெற வேண்டும்.
 இதற்கிடையே ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சம்பளத்தை எக்காரணம் கொண்டும் குறைக்கக் கூடாது. இந்தப் பிரச்னையைப் பேசி முடித்து இரு அமைப்பினரும் கையெழுத்திடவும் வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இதையடுத்து பெப்சி அமைப்பைச் சேர்ந்த 25,000 தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் ரஜினி நடிக்கும் காலா, விஜய் நடிக்கும் மெர்சல் உள்ளிட்ட 35 படங்களின் படப்பிடிப்புகள் ரத்தாகியுள்ளன.

இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர் சங்கத் துணை தலைவரும் நடிகருமான பிரகாஷ்ராஜ் கூறியதாவது:

ஃபெப்சி தொழிலாளர்களுடன் தயாரிப்பாளர்கள் வேலை பார்க்க மாட்டோம் என்ற சொன்னதாக சொல்லப்பட்டு வருகிறது. நாங்கள் அப்படி எதுவும் சொல்லவில்லை. தொழிலாளர்கள் எங்களின் எதிரிகள் அல்ல. அவர்களின் வயிற்றில் அடிப்பது எங்களின் வேலை இல்லை. பெப்சி தொழிலாளர்களுடன் மட்டும்தான் வேலை பார்ப்போம் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். தொழிலாளர்கள் தங்களின் சம்பளம் பற்றி பேசும் அதே நேரத்தில், நாங்கள் எங்களின் உரிமை குறித்துப் பேசவும் தகுதியுள்ளது.

சம்பளத்தைக் குறைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. இதில் சில பொது நிபந்தனைகள் இருக்கின்றன. அதைத்தான் நாங்கள் ஏற்கவில்லை. ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தினர் எங்களுக்கு ஆதரவு அளித்து படப்பிடிப்பு கலந்து கொள்கின்றனர். அவர்களுக்கு எங்கள் நன்றி. அதே போல் பல்வேறு துறை சார்ந்த கலைர்களுக்கு எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளனர். தொழிலாளர்கள் தங்களின் உரிமையை கேட்பது போல், நாங்கள் எங்களின் உரிமையைக் கேட்கிறோம். அந்த வலியை உணர்ந்து கொள்ளுங்கள் என்றார்.  

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் விஷால் கூறியதாவது: எங்கள் படப்பிடிப்புக்கு எந்த விதத் தடங்கலும் ஏற்படுத்த வேண்டாம் என பெப்சி அமைப்பின் உறுப்பினர்களை கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு நிகழும் பட்சத்தில் சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். பெப்சி அமைப்பினருடன் சேர்ந்து பணியாற்ற எங்களுக்கு விருப்பம்தான். அதற்கான சூழல்களை பெப்சி அமைப்புதான் உருவாக்கித் தரவேண்டும் என்றார்.

இந்நிலையில், தொழிலாளர் நலத்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் முதலமைச்சரைச் சந்திக்கவும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் திட்டமிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com