பழம்பெரும் இந்தி நடிகர் திலீப் குமார் மருத்துவமனையில் அனுமதி

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப்குமார் உடல்நலக்குறைவு காரணமாக புதன்கிழமை
பழம்பெரும் இந்தி நடிகர் திலீப் குமார் மருத்துவமனையில் அனுமதி

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப்குமார் உடல்நலக்குறைவு காரணமாக புதன்கிழமை மதியம் மும்பையிலுள்ள லீலாவதி மருத்துவமனை அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில வருடங்களாகவே உடல் நலப் பிரச்னைகளால் லீலாவதி மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார் அவர், கடந்த 2016-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் காய்ச்சலாலும், வலது கால் வீக்கத்தாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் குணம் பெற்று வீடு திரும்பினார்.

94 வயதான தீலீப்குமார் முதுமை காரணமாக கடந்த சில வருடங்களாகவே உடல் நலம் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று திடீரென அவரது உடல்நிலை சீர் குலையவே உடனடியாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திலீப்குமாரின்  மனைவி சாய்ரா பானுவும் உடன் வந்திருந்தார். கடந்த இரண்டு நாட்களாகவே அவருக்கு காய்ச்சல் இருந்ததாக அவர்களது குடும்ப நண்பர் உதய தாரா நாயர் நிருபர்களிடம் கூறினார். 

திலீப்குமாருக்கு சிறுநீரகப் பிரச்னை மற்றும் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

'உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட திலீப்குமார் அவர்களை புதன்கிழமை மதியம் 12 மணிக்கு அழைத்து வந்தார்கள். தற்போது அவருக்குப் பரிசோதனைகள் செய்து வருகிறோம். அவரது உடல்நிலைக் குறித்த சரியான தகவல்கள் நாளைதான் தெரிய வரும். அதற்குப் பிறகு அடுத்து என்ன சிகிச்சை என்பதை தீர்மானிப்போம்’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

1944-களில் இந்தி திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழ்ந்தவர் நடிகர் திலீப் குமார். சாய்ரா பானுவை 1966-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது 94 வயதான திலீப்குமார் மும்பை மேற்கு பந்த்ரா பகுதியில் சாய்ராபானுவுடன் வசித்து வந்தார். 

பாலிவுட்டின் சோக நடிகர் என்று அறியப்படும் திலீப் குமார் தேவதாஸ், மொகல் இ ஆசாம், கங்கா ஜமுனா, நயா தவுர், மதுமதி, கர்மா போன்ற படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகராக திகழ்ந்த திலீப்குமார் சில திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். அவரது திரையுலக சாதனைகளுக்காக தாதாசாஹிப் பால்கே, பத்ம விருது, போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார். 1998-ல் குய்லா எனும் திரைப்படத்தில் நடித்த பின் வேறெந்த படங்களிலும் அவர் நடிக்கவில்லை.

தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் அவர் பூரண நலம் பெற அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com