மெர்சல், விவேகம் தொலைக்காட்சி உரிமையைப் பெற்ற தொலைக்காட்சிகள்!

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் பெரும்பாலான பெரிய படங்களின் உரிமை சன் டிவி வசமே உள்ளன...
மெர்சல், விவேகம் தொலைக்காட்சி உரிமையைப் பெற்ற தொலைக்காட்சிகள்!

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் - விவேகம்.இப்படத்தில் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நடித்துள்ளார். இது அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம். இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இசை - அனிருத். விவேகம் படம் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. இதையடுத்து, ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது அதிகாரபூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.

தெறி படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி கூட்டணி மீண்டும் இணையும் மெர்சல் படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளார்கள். மேலும் சத்யராஜ், எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு, கோவை சரளா, சத்யன், யோகி பாபு எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் பங்கேற்றுள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100-வது படம் இது. ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு. ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகிவரும் படம், தீபாவளியன்று வெளிவருகிறது.

இந்நிலையில் ஆகஸ்ட் 24 அன்று வெளியாகும் விவேகம் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி பெற்றுள்ளது. சமீபகாலமாக சன் டிவி பெற்றுள்ள பெரிய படங்களில் இதுவும் ஒன்று.

சிவகார்த்திகேயன், பொன்ராம் இயக்கத்தில் நடித்து வரும் படத்தையும் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தின் தொலைக்காட்சி உரிமையையும் சன் டிவி பெற்றுள்ளது. மேலும் சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் தொலைக்காட்சி உரிமையும் சன் டிவி வசம் சென்றுள்ளது. இந்நிலையில் அஜித்தின் விவேகம் படத்தையும் பெற்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது சன் டிவி. இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் பெரும்பாலான பெரிய படங்களின் உரிமை சன் டிவி வசமே உள்ளன.

அடுத்ததாக விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தை ஜீ டிவி பெற்றுள்ளது. இந்தப் படத்தைப் பெற பலத்த போட்டி நிலவிய நிலையில் ஜீ டிவி யாரும் எதிர்பாராத வகையில் வாய்ப்பைப் பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com