சங்கடமான சூழலை ஏற்படுத்தக் கூடாது: ராஜிநாமா செய்த பொன்வண்ணனுக்கு நடிகர் சங்கம் அறிவுரை!

இம்மாதிரி சங்கடங்கள் உருவாகும் சூழலை தான் உட்பட சங்கத்தில் எவரும் உண்டாக்க கூடாது என்றும் தெரிவித்தார்...
சங்கடமான சூழலை ஏற்படுத்தக் கூடாது: ராஜிநாமா செய்த பொன்வண்ணனுக்கு நடிகர் சங்கம் அறிவுரை!

துணைத்தலைவர் பொன்வண்ணனின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே அவர் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவேண்டும் என்று நடிகர் சங்கம் சார்பில் பொன்வண்ணனுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சங்கப் பொறுப்பில் இருந்து விலகுவதாக நடிகர் பொன் வண்ணன் அறிவித்துள்ளார். சங்கத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருந்து கொண்டு, அரசியலில் நடிகர் விஷால் மேற்கொள்ளும் தன்னிச்சையான போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்து வரும் பொன்வண்ணன் தனது ராஜிநாமா கடிதத்தை சங்கத்தின் தலைவர் நாசருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுப்பியுள்ளார். நாசர் தலைமையிலான அணி கடந்த முறை நடந்த சங்கத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றியைப் பெற்று நடிகர் சங்க நிர்வாகத்தைக் கைப்பற்றியது. 

நாசர் தலைவராகவும், பொதுச் செயலளாராக விஷாலும், துணைத் தலைவர்களாக கருணாஸ் மற்றும் பொன்வண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பொருளாளராக கார்த்தி தேர்வு செய்யப்பட்டார். 

இந்த நிலையில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக நிற்பதற்கு முயற்சி செய்ததுடன், அரசியல் கட்சி தொடங்குவது குறித்து வெளிப்படையான கருத்துக்களை விஷால் தெரிவித்து வருகிறார். இதற்கு நடிகர் சங்க நிர்வாகத்துக்குள் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக சங்கத்தின் துணைத் தலைவர் பதவியிலிருந்து பொன்வண்ணன் விலகியுள்ளார். 

இது குறித்து சங்கத்தின் தலைவர் நாசருக்கு பொன்வண்ணன் எழுதியுள்ள ராஜிநாமா கடிதத்தில், 'நடிகர் சங்க நிர்வாகம் என்பது அரசியல் கட்சி சாராத ஒன்று. அதை முன் வைத்துதான் இந்த நிர்வாகத்துக்கு வந்தேன். ஆனால், அதை சங்கத்தின் பொதுச் செயலாளராக உள்ள விஷால் காப்பாற்றமால் போனது அதிர்ச்சி அளிக்கிறது. ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிட முயற்சித்த செயல் முரண்பாடான ஒன்று. பதவி காலத்தை முடிக்காமல் பதவி விலகுவதில் வருத்தம் இருந்தாலும், இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்' என்று அந்தக் கடிதத்தில் பொன்வண்ணன் தெரிவித்துள்ளார். 

பொன்வண்ணன் கடந்த 4-ஆம் தேதியே தனது ராஜிநாமா கடிதத்தை நாசருக்கு அனுப்பி வைத்துவிட்டதாகவும் ஆனால், அதை சங்க நிர்வாகம் ஏற்காமல் அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்ததாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் நடிகர் சங்கம் சார்பில் இந்த விவகாரம் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது:

இன்று 11.12.2017 நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: 

உபதலைவர் பொன்வண்ணன் கொடுத்த ராஜினாமா கடிதம் பற்றி இந்தச் சிறப்புச் செயற்குழுவில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

அவருடைய உணர்வுகளை மதிக்கும் வகையில் கருத்துக்களைப் பதிவு செய்து ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதில்லை என்று தீர்மானித்து அவருடைய பணி மேலும் தொடரும் வகையில் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள அவகாசமும் கொடுக்கிறது.

பொதுச்செயலாளர் விஷால் தம்முடைய நிலைப்பாட்டை விளக்கியும் சங்கத்தின் சட்டவிதிகளுக்கு புறம்பாக எதையும் தான் செய்யவில்லையென்றும் இம்மாதிரி சங்கடங்கள் உருவாகும் சூழலை தான் உட்பட சங்கத்தில் எவரும் உண்டாக்க கூடாது என்றும் தெரிவித்தார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com