புதிய முதல்வருக்கு வாழ்த்து சொல்லாத தமிழ்த் திரையுலகம்! தொடருமா எதிர்ப்புநிலை?

இப்படியே எத்தனை நாள் அரசுடன் மல்லுக்கட்டமுடியும்? உன்னை எனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டே இங்கு ரீலை ஓட்டிவிடமுடியுமா?
புதிய முதல்வருக்கு வாழ்த்து சொல்லாத தமிழ்த் திரையுலகம்! தொடருமா எதிர்ப்புநிலை?

மாநிலத்துக்கு ஒரு புது முதல்வர் கிடைத்திருக்கிறார். அதுவும் அனைத்து எம்எல்ஏகளாலும் முன்மொழியப்பட்டு ஆளுநரால் அழைக்கப்பட்டு சட்டமன்றத்திலும் அடிதடிகளுக்கு மத்தியில் பெரும்பான்மையை நிரூபித்து... இதுபோல அத்தனை தடைகளையும் தாண்டி, ஆட்சி அமைப்பதற்கான அத்தனை சடங்குகளையும் பூர்த்தி செய்து ஒருவர் இன்று முதலமைச்சர் ஆகியிருக்கிறார்.

பொதுவாக ஒரு புது முதலமைச்சர் வந்தால் என்ன நடக்கும்? ஒவ்வொரு துறையிலும் உள்ள பிரபலங்கள் முந்திக்கொண்டு வாழ்த்துவார்கள். முக்கியமாக திரைத்துறையினர் பூத்தூவி வாழ்த்துவார்கள். திரைத்துறையின் ஒவ்வொரு சங்கமும் தனித்தனி வாழ்த்துக்கடிதம் அனுப்பும். எங்குப் பார்த்தாலும் ஒரே போற்றியாக இருக்கும். 

ஆனால் இப்போது என்ன நடக்கிறது? திடீரென அரசியல் நிகழ்வுகளுக்குத் திரைத்துறை கருத்து தெரிவிப்பதும் ஆளும் அரசுக்கு எதிரான நிலை எடுப்பதும் என நம்பமுடியாத காட்சிகள் நடைபெற்று வருகின்றன. 

இதுவரை தமிழ்த் திரையுலகில் எந்தவொரு பிரபலமும் முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. முக்கியமாக ரஜினி, கமலின் வாழ்த்து புதிய முதல்வருக்குக் கிடைக்கவில்லை என்பது வரலாற்றுத் திருப்பமாக உள்ளது. கொங்குப் பகுதியிலிருந்து எத்தனை எத்தனை நடிகர்கள், கலைஞர்கள் கோடம்பாக்கத்துக்கு வந்திருக்கிறார்கள். ஒருவர் வாழ்த்து தெரிவிக்கவேண்டுமே?! சரி வாழ்த்துதான் வேண்டாம். எதிர்ப்பாவது தெரிவிக்காமல் இருந்தால் கெளரவமாக இருக்கும் அல்லவா! அட, ஸ்பிரிங் மாட்டிக்கொண்டு சண்டை போடுவதுபோல என்னமாக எம்பிக் குதிக்கிறார்கள். அதுவும் கமல்! அவருடைய ஒவ்வொரு ட்வீட்டும் குழப்பவும் செய்கிறது, விவாதத்தையும் கிளப்புகிறது. சனிக்கிழமையன்று காபி குடித்த கையோடு ட்விட்டரே கதி என்று இருந்திருப்பார் போல. வரிசையாக அரசுக்கு எதிரான ட்வீட்கள்! 

மட்டுமல்லாமல், மற்ற நடிகர்களுக்கும் டேக் பண்ணி, தமிழ்நாட்டுல நடக்கிறதைப் பார்த்து சும்மா இருக்கவேண்டாம், குரல் கொடு என்றுவேறு உசுப்பேற்றியுள்ளார். கமல் சொன்னால் தட்டமுடியுமா என்ன? அவர்களும் கமலுடன் கைகோத்து ட்விட்டரையே டீக்கடை பெஞ்ச் ஆக்கிவிட்டார்கள். சூர்யா, அரவிந்த் சாமி, மாதவன், சித்தார்த் என்று அரசுக்கு எதிரான கண்டனப்பட்டியல் நீளுகிறது (ஆர்ஜே பாலாஜி, ஹிப்ஹாப் தமிழாவிடமிருந்து வீடியோ எதுவும் வந்ததா எனத் தெரியாது). 

நம் உணவில் இன்னும் உப்பு போட்டுச் சாப்பிடவேண்டும் என்கிறார் சித்தார்த். இப்போது மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பது நாம் தான் நண்பர்களே... என்கிறார் சூர்யா. எப்போது? எடப்பாடி பழனிசாமி வாக்கெடுப்பில் வென்றபிறகு. எங்கே நேற்றுவந்த டப்ஸ்மேஷ் மிருணாளினியும் போகிறபோக்கில் நாலு வார்த்தை நறுக்கென்று கேட்டுவிடுவாரோ என்றுகூட பயமாக உள்ளது. அந்தளவுக்கு எதிர்ப்பரசியல் தமிழ் சினிமாவில் பலமாக உள்ளது.

கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிக்காலங்களில் நடிகர்நடிகைகள் எப்படி நடந்துகொண்டார்கள் என்பது நமக்கு மனப்பாடம். அதையெல்லாம் பார்த்துப் பார்த்துப் பழகிய கண்களுக்கு இதெல்லாம் நம்பமுடியாத காட்சிகளாக உள்ளன. எது எப்படியோ, ஆளும் அரசுக்கு எதிராக முதல்முறையாகக் குரல் கொடுத்துள்ளது தமிழ்த் திரையுலகம். திரை விமரிசகர் சுதீஷ் காமத் சொல்லியது போல - 'சித்தார்த் தனியாக இல்லை, அரவிந்த் சாமி தனியாக இல்லை, கமலும் தனியாக இல்லை. அவர்கள் அதுபோல எண்ணுவதற்கு நாம் இடம்கொடுக்கக் கூடாது. அவர்களின் நிலைக்கு ஆதரவளித்து அவர்கள் பின்னால் நிற்கவேண்டும்’ என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. கலைஞர்கள் தனது சுதந்தரத்தைத் திரைக்கு வெளியேயும் அனுபவிக்கவேண்டும். சக மனிதனுக்கு உள்ள எல்லா உரிமை, கருத்து சுதந்தரத்தை அவர்களும் அனுபவிக்கவேண்டும்.

ஆனால் இதற்குப் பின்விளைவுகள் இல்லாமல் போகுமா?

இப்படியே எத்தனை நாள் அரசுடன் மல்லுக்கட்டமுடியும்? உன்னை எனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டே இங்கு ரீலை ஓட்டிவிடமுடியுமா? நடிகர் சங்க கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழாவுக்கே ஜெயலலிதாவை அழைப்பதாக இருந்தார்கள். இப்போது என்ன செய்வார்கள்? சிஎம்டிஏ-வில் இன்னமும் நடிகர் சங்க வரைபடம் மற்றும் அதன் கோப்புகள் உள்ளன. தலைமைச் செயலகம் பக்கமே செல்லாமல் சங்கக் கட்டடத்தைக் கட்டி முடித்துவிடுவார்களா? (இதில் கமல் நடிகர் சங்க ஆலோசகர் வேறு) அரசு விருதுகளில் ஆரம்பித்து பல சந்தர்ப்பங்களில் அரசின் தயவும் அனுசரணையும் வேண்டுமே? அப்போது என்ன செய்வார்கள்?

இதே திரையுலகினர், வரிச்சலுகைக்காக எப்படியெல்லாம் நடந்துகொள்கிறார்கள் என்று பார்த்துவருகிறோம். அந்தச் சலுகை தொடரவேண்டாமா? இதே எதிர்ப்புநிலை தொடர்ந்தால் வரிச்சலுகை நீடிக்கும் வாய்ப்பு உண்டா? 

அரசுக்கு, புதிய முதல்வருக்கு எதிரான வேறு எந்த எதிர்ப்புகளைவிடவும் தமிழ்த் திரையுலகினரின் இந்தப் போக்கு தமிழக மக்களை மிகவும் ஆச்சர்யப்படுத்துகிறது! ஆளும் அரசை எதிர்த்து தமிழ்த் திரையுலகம் இயங்குவது சாத்தியமா? இந்தப் புதிய எதிர்ப்புகளின் முடிவுதான் என்ன? என்றாவது ஒருநாள் திடீரென முதல்வருக்கான ஆதரவு நிலை எடுக்கப்படுமா? இல்லை, நடிகர்களின் இந்தச் சீற்றம் இந்த ஆட்சியின் முடிவு வரை தொடருமா? நாலரை வருடமும் இந்த அரசு தொடர்கிற பட்சத்தில் என்னென்ன காட்சிகளை நாம் காணப்போகிறோம்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com