நடிகர் சங்கத்தின் உண்ணாவிரதப் போராட்டம் அவசியமா?

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, தென்னிந்திய நடிகர் சங்கம் நாளை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள உள்ளது.
நடிகர் சங்கத்தின் உண்ணாவிரதப் போராட்டம் அவசியமா?

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, தென்னிந்திய நடிகர் சங்கம் நாளை (ஜன.20) உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள உள்ளது. இதுகுறித்து பல்வேறு விமரிசனங்கள் எழுந்துள்ளன. 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, திரைத் தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த அமைப்பான ஃபெப்ஸி இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறது. ஜல்லிக்கட்டை நடத்த அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும், பீட்டா அமைப்பைத் தடை செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அடையாள வேலைநிறுத்தம் நடைபெற்றுவருகிறது. இதனால், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் தொடர்பான எந்தப் பணிகளும் இன்று நடைபெறாது என ஃபெப்ஸி தெரிவித்துள்ளது. நாளை தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் காலை, பகல் என இரு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேசமயம், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, தென்னிந்திய நடிகர் சங்கம் நாளை (ஜன.20) உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள உள்ளது.

இதுகுறித்து அந்தச் சங்கம் சென்னையில் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி அடையாளம் இருக்கிறது. அதை கட்டிக் காப்பாற்ற வேண்டியது மத்திய அரசின் கடமை. கடந்த 5,000 ஆண்டுகளாக தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றாக ஏறுதழுவுதல் இருந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக ஏறுதழுவுதல் நடக்காமல் தமிழர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளனர். பொறுத்தது போதும் என்று இன்று இதற்கு நிரந்தர தீர்வுக்காண தமிழர்கள் பொங்கி எழுந்துள்ளனர். குறிப்பாக மண்ணின் மைந்தர்கள், மாணவர்கள், இளைஞர்கள் தங்களது இன உணர்வை வெளிப்படுத்த தமிழகமெங்கும் களமிறங்கி போராடி வருகிறார்கள். 1965-இல் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு தமிழகம் கண்டுள்ள மிகப்பெரிய மாணவர்கள் போராட்டமாக ஜல்லிக்கட்டு மாறி உள்ளது. மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தரும் வகையில், தென்னிந்திய நடிகர் சங்கம் வெள்ளிக்கிழமை (ஜன.20) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை, நடிகர் சங்க வளாகத்தில் மெளன அறவழி போராட்டம் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிற தருணத்தில் நடிகர் சங்கத்தின் இந்த அறிவிப்பு பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஏற்கெனவே சமூகவலைத்தளப் பதிவுகள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளிக்கும் பாடல்கள் என பலவிதங்களிலும் திரையுலகப் பிரபலங்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். மேலும் பல நடிகர்கள் மெரினாவில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு நேரில் சென்றும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள். 

இந்நிலையில் நாளை நடைபெறுகிற திரையுலகினரின் உண்ணாவிரதப் போராட்டத்தால் மாணவர்களின் போராட்டம் பாதிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது. நாளை ஊடகங்களின் கவனம் முழுக்க நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தின்மீதுதான் இருக்கும். இதனால் மாணவர்களின் தொடர் போராட்டம் வெளியே தெரிவதில் பாதிப்பு ஏற்படும் என்று பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள். நடிகர் சிம்புவும் விஷாலின் எதிரணியில் உள்ள நடிகர்கள் சிலரும் நடிகர் சங்கத்தின் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று தகவல் வந்துள்ளது. 

நடிகர் சங்கம் இந்தப் போராட்டத்தைத் தவிர்த்து மாணவர்களின் போராட்டத்துக்குப் பின்னால் இருந்து ஆதரவளித்திருக்கவேண்டும் என்பதே பலருடைய கருத்தாக உள்ளது. 

நடிகர்களின் உண்ணாவிரதப் போராட்டம், மாணவர்களின் எழுச்சிப் போராட்டத்தை எந்தளவுக்குப் பாதிக்கும் என்பது நாளை தெரியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com