போராட்டம் வாபஸ்: நாளை முதல் திரையரங்குகள் இயங்கும்!

அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் திரையரங்குகளின் வேலை நிறுத்தம் வாபஸ்...
போராட்டம் வாபஸ்: நாளை முதல் திரையரங்குகள் இயங்கும்!

கேளிக்கை வரியை எதிர்த்து நான்கு நாள்களாக தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் திரையரங்குகளின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் 30 சதவீத கேளிக்கை வரியை எதிர்த்து தமிழகம் முழுவதும் 1,200 திரையரங்குகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் திருத்தணி முதல் கன்னியாகுமரி வரையில் மொத்தம் 1200 திரையரங்குகள் உள்ளன. இவற்றில் நாள்தோறும் காலை, பிற்பகல், மாலை, இரவு என 4 காட்சிகள் திரையிடப்படுகின்றன. வார இறுதி நாள்களில் மட்டுமே 5 காட்சிகள் திரையிடப்படும். கடந்த 3-ம் தேதி முதல் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு காலவரையற்ற போராட்டம் நடைபெறுகிறது.

திரையரங்குகள் வேலை நிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் திரைத்துறையைச் சேர்ந்த சுமார் 10 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாகத் தெரிகிறது. ஏற்கெனவே வெளியான படங்களைத் திரையிடுவதிலும், வெளியாகவுள்ள படங்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் நடைபெற்ற இன்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. எனவே நாளை முதல் திரையரங்குகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தப் பிரச்னை தொடர்பாக நான்கு அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. எல்லோரும் எங்கள் சிரமங்களைப் புரிந்துகொண்டார்கள். கேளிக்கை வரி தொடர்பாக அரசுடன் பேச குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திரைத்துறை சார்பில் அந்தக் குழுவில் 8 பேர் இருப்பார்கள். முன்பு இருந்த டிக்கெட் கட்டணமே தொடரும். அதற்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் (ரூ. 120 + ஜிஎஸ்டி 28% வரி). இந்தக் குழுவின் முடிவு எங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று நம்புகிறோம். இதனால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. நாளை முதல் திரையரங்குகள் வழக்கம்போல் இயங்கும் என அவர் பேட்டியளித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com