மேலாளர் கைது: நடிகை காஜல் அகர்வால் விளக்கம்!

போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக பிரபல நடிகை காஜல் அகர்வாலின் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்...
மேலாளர் கைது: நடிகை காஜல் அகர்வால் விளக்கம்!

போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக பிரபல நடிகை காஜல் அகர்வாலின் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து நடிகை காஜல் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார்.

தெலங்கானா தலைநகர் ஹைதராபாதில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விலை உயர்ந்த போதைப் பொருள்களை மர்மநபர்கள் சிலர் விற்பனை செய்து வருவதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், ஹைதராபாத் முழுவதும் அந்தத் துறையின் எஸ்ஐடி குழுவினர் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, ஹைதராபாதில் உள்ள ஒரு கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள்களை விற்பனை செய்த இருவரை எஸ்ஐடி அதிகாரிகள் கடந்த மாதம் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வெளிநாடுகளிலிருந்து இந்தப் போதைப்பொருள்கள் கடத்தப்பட்டு வருவதும், இதற்குப் பின்னணியில் தெலுங்கு திரையுலகினர் சிலர் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவர்கள் அளித்த தகவலின்பேரில் அமெரிக்காவைச் சேர்ந்த டாண்டு அனீஷ் உள்ளிட்ட 15 பேரை எஸ்ஐடி அதிகாரிகள் கடந்த 2-ஆம் தேதி கைது செய்தனர்.  இந்நிலையில், இந்த போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த சுமார் 12 பேருக்கு எஸ்ஐடி சார்பில் அண்மையில் அழைப்பாணை அனுப்பப்பட்டது. அதனை ஏற்று, தெலுங்கு திரைப்பட இயக்குநர் பூரி ஜகந்நாத், ஒளிப்பதிவாளர் ஷியாம் கே. நாயுடு, நடிகர்கள் சுப்பா ராஜு, தருண் ஆகியோர் எஸ்ஐடி அதிகாரிகள் முன்பு கடந்த வாரம் தனித்தனியே ஆஜராகினர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தெலுங்கு நடிகர் நவ்தீபுக்கு எஸ்ஐடி அதிகாரிகள் அழைப்பாணை அனுப்பியிருந்தனர். அதன்பேரில், ஹைதராபாதில் உள்ள மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அலுவலகத்தில் நடிகர் நவ்தீப் திங்கள்கிழமை ஆஜரானார். அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக அவரிடம் சுமார் 3 மணிநேரம் எஸ்ஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிரபல நடிகை காஜல் அகர்வாலின் மேலாளர் ஜோசப் என்கிற ரோணி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வீட்டில் இருந்து போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக நடிகை காஜல் அகர்வால் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:

போதைப் பொருள் விவகாரத்தில் என்னுடைய மேலாளர் கைது செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. மேலாளர் கைதானதற்கும் தனக்கும் எவ்விதத் தொடர்புமில்லை. திரைப்படப் பணிகள் தவிர்த்த அவருடைய நடவடிக்கைகளை நான் அறியவில்லை. சமூகத்துக்குக் கேடு விளைவிக்கும் எந்தச் செயலிலும் நான் ஈடுபடமாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com