டிக்கெட் மீதான ஜிஎஸ்டி வரியை விலக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகுவேன்

டிக்கெட் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை விலக்கா விட்டால்சினிமாவை விட்டு விலகுவதை தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்தார் நடிகர் கமல்ஹாசன்.
டிக்கெட் மீதான ஜிஎஸ்டி வரியை விலக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகுவேன்

டிக்கெட் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை விலக்கா விட்டால்சினிமாவை விட்டு விலகுவதை தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்தார் நடிகர் கமல்ஹாசன்.

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பில், சினிமாவுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சினிமா டிக்கெட் விலை உயரும் நிலை உருவாகியுள்ளது. இந்த வரி விதிப்புக்கு திரைத் துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் தமிழ்த் திரை அமைப்புகளின் கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியது:

சினிமா சூதாட்டம் போன்றது அல்ல. சினிமா என்பது கலை. எனவே ஜிஎஸ்டி வரி விதிப்பு விவகாரத்தில் திரைப்படத்துறையினரின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். சினிமா டிக்கெட்டுக்கு 28 சதவீத வரி விதிக்கும் முடிவை கைவிட அரசு பரிசீலிக்க வேண்டும்.

அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் ஹாலிவுட் படங்களையும், இந்திய படங்களையும் ஒரே அடிப்படையில் வைப்பது சரியாகாது. அதே போல் இந்தியா முழுவதும் பரவியுள்ள ஹிந்தி பேசும் மக்களுக்காக எடுக்கும் ஹிந்தி படங்களுக்கும், நமது தமிழ் படங்களுக்கும் ஒரே வரி என்பது எந்த விதத்தில் நியாயம்?

ஒரு பிராந்திய மொழியின் வீச்சு மற்றும் பலம் என்பது அதன் குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டதுதான். ஆனால் உலகளாவிய ரசிகர்களை கொண்டிருக்கும் ஹாலிவுட் படங்கள் மற்றும் இந்திய அளவில் ரசிக்கப்படும் இந்திய படங்களுக்கும் ஒரே அளவில் வரி என்பது சரியல்ல.

பிராந்திய மொழி பேசும் மக்கள் உலகில் வேறு எந்த பகுதியில் வசித்தாலும், அவர்களது எண்ணிக்கை மிகக் குறைவானதுதான். அவர்களால் திரைப்பட டிக்கெட்டுகளுக்கான விலை அதிகரிப்பை சமாளிக்க இயலாது.

ஆனால் உலக அளவில் விருதுகளை பெற்று பெருமை சேர்ப்பது பிராந்திய மொழி படங்கள்தான். இவ்வாறான சிரமங்களை சிறிய படங்களால் எதிர்கொள்ள முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நீங்கள் அதிகளவில் சம்பளம் பெறும் நடிகர்கள் என்று சிலரைச் சுட்டிக் காட்டலாம். ஆனால் நாங்கள் வருமான வரி தனியாக கட்ட வேண்டியுள்ளது. ஆனால் இந்தியா முழுமைக்கும் எங்களைப் போல் 15 பேர் இருப்பார்களா? அவர்களைத் தவிர மற்றவர்கள் இதனை எவ்வாறு சமாளிப்பது?

சினிமாதான் வாழ்க்கை: என்னைப் பொருத்தவரையில் சினிமாதான் எனக்கு வாழ்க்கை. என் மழலை மாறத் துவங்கியதே இங்குதான். எனவே என் வாழ்க்கை கெடாமல் இருக்க நான் போராடியாக வேண்டும். ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தினால் சினிமாவை விட்டு விலகுவதை தவிர எனக்கு வேறு வழியில்லை. இந்த வரி விதிப்பு விவகாரத்தில் தமிழக அரசு உதவுவதாக சொல்லியிருக்கிறார்கள். உறுதியும் கொடுத்திருக்கிறார்கள். எனவே இந்த விவகாரம் நல்ல விதமாக முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் கமல்ஹாசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com