காரில் ஒலிபரப்பப்பட்ட பாகுபலி பாடல்களால் ஓலா நிறுவனத்துக்குச் சிக்கல்! 

ஓலாவினால் எங்கள் நிறுவனத்துக்கு ரூ. 5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே சட்டப்படி நடவடிக்கை...
காரில் ஒலிபரப்பப்பட்ட பாகுபலி பாடல்களால் ஓலா நிறுவனத்துக்குச் சிக்கல்! 

ஒருவர் காரில் ஏறுகிறார். சுகமான பாடல் பயணத்தை அழகாக்குகிறது. பிறகுதான் உணர்கிறார், இந்தப் பாடலுக்கான உரிமம் என்னிடம் அல்லவா உள்ளது? அனுமதி பெறாமல் பாடலை எப்படி ஒலிபரப்புகிறார்கள்? 

உரிமம் தொடர்புடைய சிக்கலில் மாட்டியுள்ளது ஓலா வாடகை கார் நிறுவனம். வழக்குப் போட்டவர், காரில் பயணித்த லஹரி நிறுவனத்தைச் சேர்ந்த லஹரி வேலு.

மும்பையிலிருந்து பெங்களூர் வந்த வேலு, ஓலா பிரைம் பிளே காரில் பயணம் செய்துள்ளார். அப்போது பாகுபலி, கைதி நெ. 150 உள்ளிட்ட லஹரி நிறுவனம் உரிமம் பெற்ற பாடல்கள் ஓலா காரில் ஒலிபரப்பு செய்யப்படுவதைக் கவனித்துள்ளார். (இத்தகைய கார்களில் இலவச வைஃபை கிடைக்கும். இதனால் பயணிகள் ஆன்லைன் மூலமாகப் பாடல்களைக் கேட்டுச் செல்லமுடியும். நம்மிடம் உள்ள Tab மூலமாக ஓலாவின் பாடல்களைக் கேட்கமுடியும்.) உடனே தனது சட்ட நிபுணர் குழுவையும் ஓலா காரில் பயணம் செய்யச் சொல்லி சோதனை செய்துள்ளார். ஓலா கார்களில் உரிமம் பெறப்படாமல் பாடல்கள் ஒலிபரப்பப்படுவதை உறுதி செய்துகொண்டு உடனே பெங்களூர் ஜேபி நகர் காவல்நிலையத்தில் ஓலா நிறுவனத்தின் மீது புகார் அளித்துள்ளார். 

ஓலாவினால் எங்கள் நிறுவனத்துக்கு ரூ. 5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று லஹரி வேலு பேட்டியளித்துள்ளார். 

இதையடுத்து ஜேபி நகரில் உள்ள ஓலா நிறுவனத்துக்குச் சென்று காவல்துறை சோதனை செய்தது. பாடல்கள் சிங்கப்பூரில் உள்ள சர்வரில் இருந்து டவுன்லோட் செய்யப்படுவதை காவல்துறை கண்டுபிடித்தது. கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி, கொல்கத்தா ஆகிய மாநிலங்களில் உரிமம் பெறாமல் பாடல்களை ஒலிரப்பியுள்ளது ஓலா நிறுவனம். புகாரின் பேரில் ஓலா தலைமை நிர்வாகிகளான பவிஸ் அகர்வால், சிடிஓ அன்கித் பதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையினரின் இந்த நடவடிக்கையை அடுத்து பவிஸ் அகர்வால், சிடிஓ அன்கித் பதி ஆகியோர் தலைமறைவாகிவிட்டார்கள். அவர்களைக் காவல்துறை தேடிவருகிறது. இந்த நடவடிக்கைகளையடுத்து ஓலா கார்களில் உரிமம் இல்லாத பாடல்கள் தற்போது ஒலிபரப்பப்படுவதில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com