கே.பாலசந்தருக்கு சிலை: வாழ்வின் கடமைகளுள் ஒன்றாகக் கருதுகிறேன்

இயக்குநர் கே.பாலசந்தருக்கு சிலை அமைத்துத் திறப்பதை என் வாழ்வின் கடமைகளுள் ஒன்றாகக் கருதுகிறேன். அவர் படங்களைப் போலவே அவரும் மறக்கப்படக்கூடாதவர் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
கே.பாலசந்தருக்கு சிலை: வாழ்வின் கடமைகளுள் ஒன்றாகக் கருதுகிறேன்

இயக்குநர் கே.பாலசந்தருக்கு சிலை அமைத்துத் திறப்பதை என் வாழ்வின் கடமைகளுள் ஒன்றாகக் கருதுகிறேன். அவர் படங்களைப் போலவே அவரும் மறக்கப்படக்கூடாதவர் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

நூறு படங்களுக்கு மேல் இயக்கி இந்தியாவின் தாதாசாகேப் பால்கே விருது பெற்றவர் இயக்குநர் கே.பாலசந்தர். ரசிகர்களால் இயக்குநர் சிகரம் என்றழைக்கப்படும் கே.பாலசந்தர், கலையுலகில் ஐம்பது ஆண்டுகளுக்குமேல் இயங்கியவர். கே.பாலசந்தரின் திரை வாழ்க்கை அடையாளமாகவும், அவரின் நட்பைப் போற்றும் விதமாகவும் கவிஞர் வைரமுத்து அவருக்கு சிலை வைக்கிறார்.

ஜூலை 9-ஆம் தேதி...: திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை ஒட்டிய நல்லமாங்குடிதான் பாலசந்தர் பிறந்த ஊர். அவர் பிறந்த வீடு இப்போது ஒரு பள்ளிக்கூடமாக இருக்கிறது. அந்தப் பள்ளி வளாகத்திற்குள் இந்த சிலை நிறுவப்படுகிறது.

கே.பாலசந்தரின் பிறந்த ஊரில் அவர் பிறந்த நாளான ஜூலை 9-ஆம் தேதி மாலை 5 மணிக்கு சிலை திறப்பு விழா நல்லமாங்குடி குரு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி வளாகத்தில் நடக்கிறது.

வெண்கலத்தில் செய்யப்பட்ட பாலசந்தரின் மார்பளவுச் சிலையை அவரது மனைவி ராஜம் பாலசந்தர் திறந்து வைக்கிறார். நடிகர் கமல்ஹாசன், இயக்குநர்கள் மணிரத்னம், வஸந்த் எஸ்.சாய், தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் பாலசந்தருக்குப் புகழுரை வழங்குகிறார்கள். பாலசந்தர் குடும்பத்தினர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொள்கிறார்கள்.

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து ஊடகங்களுக்கு புதன்கிழமை அளித்துள்ள செய்தி:

திரையுலகில் என்னால் மறக்க முடியாத ஒரு பேராளுமை இயக்குநர் கே.பாலசந்தர். ஒரு மகனைப்போல என்னை அவர் நேசித்தார். ஒரு தந்தையைப் போல் அவரை நான் நேசித்தேன். அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருந்த தமிழ் சினிமாவில், ஒரு மடை மாற்றத்தை ஏற்படுத்தியவர் அவர். சமூகத்தின் இருட்டின்மீது வெளிச்சம் பாய்ச்சி ஒரு கலாசார அதிர்ச்சியை ஏற்படுத்தியவர். தமிழ் சினிமாவிற்கு இந்திய முகம் கொடுத்தவர்.

தரம் பிரிக்க முடியாத படைப்புகள்: அவர் படங்களைப் போலவே அவரும் மறக்கப்படக்கூடாதவர். அவர் படங்களை வெற்றிப் படங்கள், தோல்விப் படங்கள் என்று தரம் பிரிக்க முடியாது. புரிந்துகொள்ளப்பட்டவை, புரிந்துகொள்ளப்படாதவை என்று மட்டுமே இனம் பிரிக்கலாம்.
அவருக்குச் சிலை எடுப்பது என்பது அவருக்கு நான் செலுத்தும் நன்றி மட்டுமல்ல; முன்னோடிகளை மதிக்கும் ஒரு கலாசாரமாகும். இந்தப் பணியை என் வாழ்வின் கடமைகளுள் ஒன்றாகக் கருதுகிறேன் என்றார் கவிஞர் வைரமுத்து.

வெற்றித்தமிழர் பேரவையைச் சார்ந்த தஞ்சை இரா.செழியன், ஆசிப் அலி, சுப்பிரமணிய சர்மா, தருமசரவணன், பன்னீர்செல்வம், மற்றும் நல்லமாங்குடி கமலக்கண்ணன், ரெங்கநாதன், கும்பகோணம் தி.வெ.ஷத்தீஷ், சிலைச்சிற்பு செந்தில் உள்ளிட்டோர் விழாக் குழுவாகச் செயல்படுகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com