ஜிஎஸ்டி-க்கு எதிர்ப்பு: திங்கள் முதல் திரைப்படக் காட்சிகள் ரத்து!

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பில், சினிமாவுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக...
ஜிஎஸ்டி-க்கு எதிர்ப்பு: திங்கள் முதல் திரைப்படக் காட்சிகள் ரத்து!

ஜிஎஸ்டி-க்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக திங்கள் முதல் தமிழகத்தில் திரைப்படக் காட்சிகள் ரத்தாக உள்ளன. 

சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய வரிச் சீர்திருத்தமாகக் கருதப்படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரியின் (Goods and Services Tax) சுருக்கமே ஜிஎஸ்டி. இதுவரை நடைமுறையில் உள்ள மத்திய கலால் வரி, சேவை வரி, மதிப்புக் கூட்டு வரி மற்றும் உள்ளூர் வரிகள் ஆகிய பல்வேறு வரிகளுக்கு மாற்றாக, நாடு முழுவதும் ஒரே சீரான வரியை விதிப்பதற்காக, சரக்கு-சேவை வரிச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பில், சினிமாவுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சினிமா டிக்கெட் விலை உயரும் நிலை உருவாகியுள்ளது. இந்த வரி விதிப்புக்குத் திரைத் துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கமல் உள்ளிட்ட திரையுலகினரின் கோரிக்கையை ஏற்று ரூ.100 மற்றும் அதற்கு குறைவான சினிமா டிக்கெட்டுகளுக்கான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 100 ரூபாய்க்குக் கூடுதலான சினிமா டிக்கெட்டுக்கான வரி 28 சதவீதமாகத் தொடரும்.

மேலும் தற்போது திரையரங்குகள் 30% நகராட்சி வரி செலுத்தவேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. ஆனால் ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் நகராட்சி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுபோல தமிழகத்திலும் ரத்து செய்யப்படவேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்நிலையில், தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் கூறியதாவது: ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்து அரசுக்குப் பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளோம். ஆனால் அரசிடமிருந்து எங்களுக்குப் பதில் வரவில்லை. 50 ரூபாய்க்கு மேல் ஜிஎஸ்டி எவ்வளவு எனத் தெரியவில்லை. சினிமா டிக்கெட்டுகளுக்கான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 100 ரூபாய்க்குக் கூடுதலான சினிமா டிக்கெட்டுக்கான வரி 28 சதவீதமாகத் தொடரும் என மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் 30% நகராட்சி வரி தரவேண்டும் என்று தமிழக அரசு கூறுகிறது. எனவே மொத்த வரியாக 48% அல்லது 58% வருகிறது. இதை எங்களால் தாங்கமுடியாது. மக்கள் மீது இந்தப் பளுவை வைத்தால் அவர்களாலும் முடியாது. இதனால் திரையரங்குகளில் கூட்டம் குறையும்.

இந்த நிலையில் 100 ரூபாய் டிக்கெட் விலைக்கு 63 ரூபாய் வரியாகக் கட்டவேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. இப்போது படங்கள் 100 நாள் ஓடுவதில்லை. 25 நாள்கள்தான் ஓடுகிறது. திரையரங்குகளுக்கு அதிகமாக இளைஞர்கள்தான் வருகிறார்கள். அவர்களால் இந்த கட்டண உயர்வைத் தாங்கமுடியாது. மேலும் இணையத்திலும் எல்லாப் படங்களும் வெளிவந்துவிடுகின்றன. 

அரசுக்கு கோரிக்கைகள் வைத்துள்ளோம். சினிமாவைச் சார்ந்து 10 லட்சம் குடும்பங்கள் உண்டு. எங்கள் தொழிலைக் காப்பாற்றுங்கள். ஒருவேளை எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் திங்கள் முதல் தமிழகம் முழுக்கத் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com