கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் காலமானார்

நடிகர் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் (82) லண்டனில் மாரடைப்பால் சனிக்கிழமை காலமானார். 
கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் காலமானார்

நடிகர் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் (82) லண்டனில் மாரடைப்பால் சனிக்கிழமை காலமானார். 
லண்டனில் உள்ள தனது மகள் அனுஹாசன் வீட்டில் தங்கியிருந்த அவருக்கு சனிக்கிழமை நள்ளிரவு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் உயிர் பிரிந்தது. 
1936-ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்த சந்திரஹாசன் வழக்குரைஞர் பட்டம் பெற்றவர். கமல்ஹாசனின் இரண்டாவது மூத்த சகோதரர் இவர். நடிகை சுகாசினியின் தந்தை சாருஹாசன் அனைவருக்கும் மூத்தவர்.
கமலின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் பங்குதாரராக இருந்து நிர்வகித்து வந்தார் சந்திரஹாசன். அவரது மனைவி கீதாமணி, கடந்த ஜனவரி மாதம் சென்னையில் காலமானார்.
நடிகர் சங்கம் இரங்கல்: பால்யகாலம் முதல் கமல்ஹாசனுக்கு வழிகாட்டியாக, உறுதுணையாக, அவரது வளர்ச்சிக்கு காரணமாக இருந்து வந்தவர் சந்திரஹாசன். எனவே தான் அவரை தனது மூத்த சகோதரர் என்றில்லாமல் அப்பா என்றே கமல் எப்போதும் குறிப்பிடுவார். அவரது இழப்பு திரைத்துறையைச் சார்ந்தோருக்கு பேரிழப்பாகும். அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறோம் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. 
கமல்ஹாசன் இரங்கல்: சந்திரஹாசன் மறைவுக்கு கமல்ஹாசன் தனது சுட்டுரை பக்கத்தில் தெரிவித்த இரங்கல் செய்தி: நண்பனாய் நல்லாசானாய் தமயனும் தகப்பனுமாய் அவரை பெற்றதால் உற்றது நல் வாழ்வு. எனக்காக அவர் கண்ட கனவுகளில் பாதியைக் கூட நான் நிறைவேற்றவில்லை என அவர் கூறியுள்ளார்.
திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல்: நடிகர் கமலின் சகோதரர் சந்திரஹாசன் உடல்நலக் குறைவால் லண்டனில் காலமானார் என்ற செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். தமிழ் திரையுலகத்துக்கு ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் அவர் ஆற்றிய பணிகளை நினைவுகூரும் இந்த நேரத்தில், அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். தனது பாசத்திற்குரிய சகோதரரை இழந்து வாடும் கமல்ஹாசனுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com