நோட்டீஸ் விவகாரத்தைப் பரபரப்பாக்க வேண்டாம்: எஸ்பிபி புதிய கோரிக்கை!

முக்கியமாக ஊடகவியலாளர்களுக்கும் என்னுடைய கோரிக்கை. இந்த சர்ச்சை துரதிர்ஷ்டவசமானது. கடவுளின் படைப்பில் அனைவரும் நல்லவர்களே, சமமானவர்களே...
நோட்டீஸ் விவகாரத்தைப் பரபரப்பாக்க வேண்டாம்: எஸ்பிபி புதிய கோரிக்கை!

அனுமதியில்லாமல் இளையராஜா பாடல்களை மேடைகளில் பாடுவதற்குத் தடை விதித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டதை அடுத்து இனி இளையராஜா இசையமைத்த பாடல்களைப் பாட மாட்டேன் என்று பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். இதையடுத்து உருவான சர்ச்சை உருவானதால் அவர் இன்னொரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திரையிசைப் பயணத்தில் 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதையொட்டி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உலகம் முழுவதும் பயணித்து இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். கச்சேரியின் ஒரு பகுதியாக அமெரிக்காவில் அவரது இசைக் குழு பயணித்து வருகிறது. இந்த நிலையில் அங்கிருந்து தன்னுடைய அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், தன் இசை ரசிகர்களுக்கு சனிக்கிழமை இரவு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதன் விவரம்:

ரசிகர்களுக்கு வணக்கம். சியாட்டிலிலும், லாஸ் ஏஞ்சலீஸிலும் நடைபெற்ற இசைக்கச்சேரியில் கலந்து கொண்டவர்களுக்கும், அந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும் நன்றி.

சில நாட்களுக்கு முன், இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் எனக்கும், பாடகர் சரண், பாடகி சித்ரா, உலகளவில் கச்சேரியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில் இளையராஜா கம்போஸ் செய்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறிச் செய்தால் காப்புரிமை சட்டத்திற்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத் தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், இந்த மாதிரியான சட்ட திட்டங்கள் பற்றிய புரிதல் எனக்கு இல்லை. என் மகன் சரண்தான், இந்த உலக கச்சேரியை ஏற்பாடு செய்தார். "எஸ்.பி.பி. 50' என்ற பெயரில் கடந்த வருடம் டொரன்டோவில் முதல் கச்சேரியைத் தொடங்கினோம். அதன்பிறகு ரஷியா, ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர், துபாய் மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளில் நிகழ்ச்சி நடத்திவருகிறோம். அப்போதெல்லாம் இளையராஜா சார்பில் எந்த நோட்டீஸýம் வரவில்லை. ஆனால், அமெரிக்காவில் இசைக்கச்சேரி நடத்தும் போது மட்டும் ஏன் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. முதலில் சொன்னமாதிரி எனக்கு இந்தச் சட்டம் குறித்த அறிவு கிடையாது. ஆனாலும் இதுதான் சட்டம் என்றால் எற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். மேடைகளில் இனி பாட மாட்டோம்: இந்தச் சூழ்நிலையில் நானும், எங்கள் அணியினரும், இன்றிலிருந்து இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாட மாட்டோம். ஆனாலும் இந்தக் கச்சேரி நடக்கவேண்டும். கடவுளின் ஆசீர்வாதத்தில் இளையராஜா தவிர, பல இசையமைப்பாளர்களின் இசையில் நான் பாடல்கள் பாடியிருக்கிறேன். அந்தப் பாடல்களை இனிவரும் கச்சேரிகளில் பாடுவேன். உங்கள் அனைவரிடமும் நான் கேட்கும் ஒரே கோரிக்கை, இந்த விஷயம் பற்றி எந்தவிதமான விவாதமோ, கருத்தோ சொல்ல வேண்டாம் என தனது முகநூல் பதிவில் எஸ்பிபி குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து சமூகவலைத்தளங்களில் சர்ச்சை உருவானது. தான் பாடிய பாடலைப் பாட பாடகருக்கு உரிமையில்லையா என்றும் எஸ்பிபி ராஜாவிடம் அனுமதி பெறாதது ஏன் என்று கேள்வி எழுப்பபட்டு பலவிதமான விவாதங்கள் நடைபெற்றன.

நோட்டீஸ் அனுப்பியது ஏன் என்று இளையராஜா தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது. காப்புரிமை விவகாரங்களில் இளையராஜாவுக்கு ஆலோசகராக இருக்கும் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்தி: பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தை மக்கள் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. நோட்டீஸ் அனுப்புவது என்பது வழக்கமான நடைமுறைதான். இளையராஜாவின் பாடல்களை அவரது அனுமதியுடன் உரிய ராயல்டி தொகை செலுத்திப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. இதை முறைப்படுத்த வேண்டும் என்பதே நோக்கமாகும். சாதாரண மேடைக்கச்சேரி செய்பவர்களிடமிருந்து ராயல்டி எதுவும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் வணிக நோக்கத்துடன் பாடல்களைப் பயன்படுத்துவோர் அதற்குரிய கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்றார்.

இணையத்தில் சர்ச்சை எழுந்துள்ளதையடுத்து எஸ்பிபி தன்னுடைய ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய எல்லா நண்பர்களுக்கும் இசை ரசிகர்களுக்கும் முக்கியமாக ஊடகவியலாளர்களுக்கும் என்னுடைய கோரிக்கை இது. ராஜா - எஸ்பிபி விவகாரத்தைப் பரபரப்பாக்கவேண்டாம். இது துரதிர்ஷ்டவசமானது. அவ்வளவுதான். நம் சகஜ வாழ்க்கையைத் தொடரவேண்டும். கடவுளின் படைப்பில் அனைவரும் நல்லவர்களே, சமமானவர்களே. நன்றி என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com