நடிகர் சங்கக் கட்டடம்: இடைக்காலத் தடை!

தியாகராயநகரில் பொது பாதையான 33 அடி சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்கத்தால் கட்டப்படும் கட்டுமானத்துக்குத் தடை கோரிய வழக்கில்...
நடிகர் சங்கக் கட்டடம்: இடைக்காலத் தடை!

தியாகராயநகரில் பொது பாதையான 33 அடி சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்கத்தால் கட்டப்படும் கட்டுமானத்துக்குத் தடை கோரிய வழக்கில், கட்டடம் கட்ட நடிகர் சங்கத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தியாகராயநகர் வித்யோதயா காலனியைச் சேர்ந்த கே.எம்.ஸ்ரீரங்கன், ஆர்.அண்ணாமலை ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்த மனு விவரம்: சென்னை தியாகராயநகர் ஹபிபுல்லா சாலை, பிரகாசம் தெருவை இணைக்கும் 33 அடி அகல பொதுப் பாதையை நடிகர் சங்கத்தினர் மறித்து தங்களது பயன்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் வித்யோதயா காலனி குடியிருப்பு வாசிகள் பிரகாசம் சாலைக்குச் செல்வதற்கு வேறு வழியின்றி சுற்றிச் செல்ல நேரிடுகிறது. அந்த 33 அடி பொதுப்பாதையை அதிகாரிகள் சட்ட விரோதமாக நடிகர் சங்கத்துக்குப் பட்டாப்பதிவும் செய்து கொடுத்துள்ளனர். 

தற்போது இந்தப் பாதையையும் ஆக்கிரமித்து அந்த இடத்தில் ஆயிரத்து 400 இருக்கைகள் கொண்ட பிரம்மாண்ட திருமண மண்டபம், நீச்சல்குளம் அடங்கிய பிரமாண்ட கட்டடம் கட்ட மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. அவர்கள் திருமண மண்டபம் கட்டுவதற்கு நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் இப்பகுதியில் திரையரங்குடன் கூடிய வணிக வளாகம் கட்ட ஏற்கெனவே அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது முறைகேடாக 33 அடி சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்கம் சார்பில் கட்டடம் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை விடுமுறை கால நீதிமன்றத்தில் நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. அப்போது, ஆய்வறிக்கை தாக்கலாகும் வரை எந்தக் கட்டடப் பணியும் மேற்கொள்ள தடை விதிக்கப்படுகிறது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும், நடிகர் சங்கக் கட்டடம் அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையராக கே.இளங்கோவனை நீதிபதிகள் நியமித்தார்கள். நடிகர் சங்கமும், மனுதாரரும் இணைந்து ஆணையருக்கு ரூ.1 லட்சம் சம்பளம் வழங்கவேண்டும். கட்டடம் கட்டப்படும் இடத்தை இளங்கோவன் ஆய்வு செய்து மே 29-ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்கள். இந்த வழக்கு ஜூன் 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாசர் தலைமையிலான நிர்வாகம் நடிகர் சங்கத்தின் பொறுப்பை ஏற்றுள்ளது. இந்த அணியினரின் முக்கியத் தேர்தல் அறிவிப்பாக நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டடம் இருந்தது. இதற்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி உள்ளிட்ட பல்வேறு வழிகளில் நிதி திரட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா சென்னை தியாகராயர் நகர், ஹபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் சமீபத்தில் நடைபெற்றது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷால், துணைத் தலைவர் பொன்வண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் செங்கல் எடுத்துக் கொடுத்து அடிக்கல் நாட்டினர்.

அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த புதிய கட்டடத்தின் திறப்பு விழா இருக்கும். நான்கு அடுக்கு மாடிகளுடன் உருவாக்கப்படவுள்ள இந்தக் கட்டத்தில் திருமண மண்டபம், உடற்பயிற்சி அரங்குகள், சந்திப்புகளுக்கான பிரத்யேக அரங்குகள், திரையரங்குகள் உள்ளிட்ட பல விதமான வசதிகள் ஏற்படுத்தப்படும். இந்தக் கட்டடத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.50 லட்சம் அளவில் வருவாய்க்கு ஏற்பாடு செய்யப்படும் என்று விஷால் அப்போது பேட்டியளித்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டடப் பணிகளுக்காக நடிகர்கள் விஷால், கார்த்திக் இருவரும் தலா ரூ.5 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்தார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com