
சினிமா பிரபலத்துக்கு அனுப்பப்பட்ட மோசடி மெயில்கள்: சுசித்ரா காவல்துறையிடம் புகார்!
By எழில் | Published on : 13th May 2017 04:15 PM | அ+அ அ- |

சில மாதங்களுக்கு முன்பு, பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் இருந்து தனுஷ் மற்றும் இதர பிரபலங்களைப் பற்றி பல்வேறு விதமான ட்வீட்கள் வெளியாகின. இதனால் ட்விட்டர் வலைத்தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேச் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. பிரபல நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள், வீடியோக்கள், மின்னஞ்சல்கள் என தனிப்பட்ட தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டதால் தமிழ்த் திரையினர் மிகுந்த கவலையடைந்தனர்.
பிறகு, அத்தகைய புகைப்படங்களும் வீடியோக்களும் அவருடைய ட்விட்டர் கணக்கிலிருந்து அகற்றப்பட்டன. சுசித்ராவின் ட்விட்டர் கணக்கும் நீக்கப்பட்டது. இதனால் சுசித்ராவின் ட்விட்டர் சர்ச்சைகளுக்கு முடிவுகட்டப்பட்டது. அப்போது இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையிடம் மனு அளித்தார் சுசித்ரா.
இந்நிலையில் இன்று சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அவர் வருகை தந்தார். அங்கு சுசித்ரா அளித்த மனுவில் கூறியதாவது:
எனது ட்விட்டர் கணக்கில் புகைப்படங்கள் வெளியானதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. என் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏப்ரல் மாதத்தில், எனது மின்னஞ்சலையும் ஹேக் செய்து அதிலிருந்து என் கையெழுத்துடன் சினிமா பிரபலத்துக்கு மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் மனு அளித்துள்ளார். இந்தப் புகார் மனு சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.