தமிழ் உணர்வுள்ள யாரும் தமிழகத்தை ஆளலாம்: கமல்ஹாசன்

தமிழன்தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்பது சரியாகாது. தமிழ் உணர்வோடு இருக்கும் யாரும் ஆளலாம் என்று ரஜினியின் அரசியல் சர்ச்சைகள் குறித்த கேள்விக்கு நடிகர் கமல்ஹாசன் பதிலளித்தார்.
தமிழ் உணர்வுள்ள யாரும் தமிழகத்தை ஆளலாம்: கமல்ஹாசன்

தமிழன்தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்பது சரியாகாது. தமிழ் உணர்வோடு இருக்கும் யாரும் ஆளலாம் என்று ரஜினியின் அரசியல் சர்ச்சைகள் குறித்த கேள்விக்கு நடிகர் கமல்ஹாசன் பதிலளித்தார்.

விஜய் டி.வி.யில் வரும் ஜூன் 25-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ள "பிக் பாஸ்' நிகழ்ச்சியில், அதன் தொகுப்பாளராகப் பங்கேற்கிறார் நடிகர் கமல்ஹாசன். இந்நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் வெள்ளிக்கிழமை அவர் கூறியது:

இப்போது இருக்கும் அரசியல் சூழலில் யாருமே வரக் கூடாது என்றுதான் தோன்றுகிறது. அதில் ஏன் நடிகர்களைத் தனியாக ஒதுக்க வேண்டும். பகுத்து அறிபவர்கள் யாரும் அரசியலுக்கு வரக் கூடாது என்று தோன்றுகிறது.

வெகுஜனக் கூட்டத்தில் நான் ஒருவன்: நான் அரசியலுக்கு வந்து வெகு நாள்கள் ஆகி விட்டது. சரியாகச் சொல்ல வேண்டுமானால், 21 வயதில் வாக்களித்த போது என் விரலில் மை வைத்த தருணத்தில் இருந்தே அரசியலுக்கு வந்து விட்டேன். ஆனால், போட்டி போடும் அரசியலில் நான் இல்லை. யார் வர வேண்டும். யார் வரக் கூடாது என்று முடிவு செய்யும் வெகுஜனக் கூட்டத்தில் நின்று கொண்டிருக்கிறேன். அடுத்து யார் வர வேண்டும் என்பதை நேரம் வரும் போது பார்த்துக் கொள்வோம்.

தமிழ் உணர்வுதான் முக்கியம்: தமிழன்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்பது சரியாகாது. தமிழ் உணர்வோடு இருக்கிற யாரும் இருக்கலாம். காந்தி தமிழனா? நேரு தமிழனா? சுபாஷ் சந்திரபோஸ் தமிழனா? ஆனால் போஸ் என்ற பெயரில் நிறைய பேர் எங்கள் ஊரில் இருக்கிறார்கள். காந்தி எனப் பெயர் உள்ளவர்கள், இந்தியாவின் பல ஊர்களில் இருக்கிறார்கள். அதனால் தமிழனா என்கிற விஷயம் பெரிதல்ல.

கேரள மக்களுக்கு நான் மலையாளி: கேரள மக்கள் என்னை ஒரு மலையாளியாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் அதுவும்தான். அதற்காக அந்த ஊருக்கு நான் முதலமைச்சர் ஆக வேண்டுமா என்று கேட்டால், எனக்கு அதில் ஆர்வமில்லை. அவ்வளவுதான்.

அரசியலில் போட்டி என்பதே தவறான வார்த்தை. அரசியல் என்பது சேவைதான் என நினைக்காமல், அதை சம்பாதிக்கும் ஓர் அரங்கமாக நினைத்துக் கொள்வது தவறு என்று நினைக்கிறேன்.

ரஜினியின் குற்றச்சாட்டில் தவறில்லை: அரசியல் அடிப்படை அமைப்பு மாறி விட்டதாக ரஜினி சொன்னதில் வித்தியாசமும் இல்லை. தவறும் இல்லை. எல்லோரும் சொல்வதைத்தான் அவர் சொல்லியிருக்கிறார். குறிப்பிட்டு மாற வேண்டும் என்று சொன்னால், நிறையச் சொல்லலாம். அரசியல் முதலில் சம்பாதிக்கும் தொழில் அல்ல என்று சொல்ல வேண்டும்.

சேவை என்பது மாறி விட்டது: இனி வரும் மக்கள் பிரதிநிதிகளிடம் எங்களுக்காக நீ வேலை செய்கிறாய் என்று சொல்லி நல்ல சம்பளம் கொடுத்து விட வேண்டும். சேவை, தியாகம் என்பதை அவர்கள் வேறு மாதிரி எடுத்துக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன். இது மாதிரி நிறைய விஷயங்களை மாற்றியாக வேண்டும்.

திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப் பேரவை வைர விழா குறித்து ஒரு குறும்படம் எடுத்துள்ளேன். அது விரைவில் வந்து விடும்.

போர் வரும் போது பார்த்துக் கொள்வோம் என்ற ரஜினி கூற்று குறித்து கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றார் கமல்ஹாசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com