பிறந்த நாளன்று அரசியலுக்கு வருவாரா ரஜினிகாந்த்! 

டிசம்பர் 12-ம் தேதி தனது பிறந்த நாளில் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்கவுள்ளார்
பிறந்த நாளன்று அரசியலுக்கு வருவாரா ரஜினிகாந்த்! 

கமல் ஹாசனைத் தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் தனது பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதியில் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளி வந்துள்ளது.

ஊடக கணிப்புக்களுக்கு மாறாக நடிகர் ரஜினிகாந்த் சொந்தக் கட்சி தொடங்கவே அதிக வாய்ப்புகள் உள்ளது. பி.ஜே.பி உள்ளிட்ட தேசிய கட்சிகளில் இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை. 

சில மாதங்கள் முன்பு ரஜினி தனது ரசிகர்களை நேரில் நான்கு நாட்கள் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் நல்ல அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அரசியல் சிஸ்டம் கெட்டுப் போய் உள்ளது. அரசியல் என்ற போர் வரும் வரைக் காத்திருப்போம். போர் வந்தால் சேர்வோம்' என்று கூறியிருந்தார். அவரது பேச்சு பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது அத்தகைய போர் அறிவிப்பினை அவர் தனது பிறந்த நாளன்று அறிவிப்பார் என்று நம்பப்படுகிறது.

1996-ம் ஆண்டு / 1998-ம் ஆண்டு பொதுத் தேர்தல்/மக்களவைத் தேர்தல்களில் சில காரணங்களால், அரசியலில் சில கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய சூழல் ரஜினிக்கு ஏற்பட்டது. அப்போதிலிருந்து அவரது பெயர் அரசியலில் தீவிரமாக அடிபட ஆரம்பித்தது. ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்ப்பார்ப்பில் காத்திருந்தது. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் முடிந்த நிலையில், மக்கள் ரஜினியின் மீதான அந்த ஒற்றைக் கேள்வியில் மக்கள் ஆர்வம் இழந்துவிட்டனர். 

கபாலி படம் வெளிவந்த சமயத்தில், 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ரஜினி தனது அரசியலில் நிலைப்பாட்டைப் பற்றி நீண்ட இடைவெளிக்குப் பிறகு குறிப்பிட்டார்.

'ஆன்மிக நாட்டமுள்ளவராதலால், ரஜினி ஒரு இடதுசாரி அல்ல, அதற்காக அவர் ஒரு வலதுசாரியாகவும் இருந்ததில்லை. ரஜினி தன் சுயம் சார்ந்து நடுநிலையுடன், தனியாகவே இருப்பார், அதுவே சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் ஈர்க்கும் விதமாக இருக்கும்’ என்கிறது ரஜினி தரப்பு.

ஆனால் ரஜினியால் எவ்வித கட்சி சார்பின்றி தனியாக தேர்தலில் வெற்றி பெற முடியாது. ஒரு வெற்றிகரமான கூட்டணியை உருவாக்குவதன் மூலம் அது சாத்தியமாகலாம். ஆனால் அது மிகப் பெரிய சவாலான விஷயம். 'அடுத்து என்ன நடக்கும் என்பதை ஆண்டவன்தான் தீர்மானிக்கிறான். இப்போது, நடிகனாக என்னுடைய கடமையைச் செய்கிறேன். நாளை என்ன பொறுப்பு கொடுத்தாலும், அதில் நியாயமாகவும், உண்மையாகவும் இருப்பேன்’ என்று கூறி வருபவர் ரஜினி என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்களைப் பொறுத்தவரையில், நடிகர் அக்ஷய் குமார் மற்றும் எமி ஜாக்சன் நடிப்பில் இயக்குநர் ஷங்கரின் '2.0' பட டிரெய்லர் வெளியீட்டுக்குப் பிறகு ரஜினி உற்சாகமாக உள்ளார். இத்திரைப்படம் 2018, ஜனவரி மாத இறுதியில் வெளியிடப்படும். ரஜினியின் மற்றொரு படமான 'காலா' படமும் 2018-ம் ஆண்டு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com