நடிகர் திலீப் துபாய் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி!

நடிகை கடத்தல் வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த நடிகர் திலீப், துபாய் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது...
நடிகர் திலீப் துபாய் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி!

நடிகை கடத்தல் வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த நடிகர் திலீப், துபாய் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

துபாயில் ஆரம்பிக்கவுள்ள உணவகத்தின் திறப்பு விழாவில் பங்கேற்க அனுமதி அளிக்குமாறு கேரள உயர் நீதிமன்றத்திடம் மனு தாக்கல் செய்தார் நடிகர் திலீப். இதையடுத்து அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இறுதியில், நவம்பர் 28-ம் தேதி நடைபெறும் உணவகத் திறப்பு விழாவில் திலீப் பங்கேற்க நான்கு நாள்களுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் திலீப்பின் கடவுச்சீட்டை 6 நாள்களுக்குத் தரவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கேரளத்தில் நடிகை, கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி காரில் சென்று கொண்டிருந்தபோது பல்சர் சுனில் உள்ளிட்ட நபர்களால் கடத்தப்பட்டார். பின்னர், அவர் அந்த நபர்களிடம் இருந்து தப்பினார். அவர்கள் தன்னை 2 மணிநேரத்துக்கு மேல் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக அந்த நடிகை, காவல்துறையில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபரான பல்சர் சுனி உள்ளிட்ட 6 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, இந்த விவகாரத்தில் மலையாள நடிகர் திலீப்புக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, திலீப்பை ஜூலை 10-ம் தேதி கைது செய்த போலீஸார், அவரை ஆலுவா நகர கிளைச் சிறையில் அடைத்தனர். நடிகையைக் கடத்தி, துன்புறுத்துவதற்கான சதித்திட்டத்தை திலீப்தான்
தீட்டினார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இதனிடையே, தனக்கு ஜாமீன் வழங்குமாறு கோரி திலீப் நான்கு முறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவற்றில் இரண்டு மனுக்கள் அங்கமாலி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும், இரண்டு மனுக்கள் கேரள உயர் நீதிமன்றத்திலும் தாக்கலாகின. எனினும், நான்கு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து திலீப், கேரள உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்தார். திலீப்புக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். அப்போது நீதிபதி கூறியதாவது: திலீப்புக்கு எதிரான புலன்விசாரணை இறுதிக்கட்டத்தில் இருப்பதால் அவரை இனிமேலும் காவலில் வைத்திருக்கத் தேவையில்லை என்று கருதுகிறோம். திலீப், இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழிக்கக் கூடாது. அவர் தனது கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும். அவர் ரூ.1 லட்சத்துக்கான பத்திரத்தை டெபாசிட் செய்ய வேண்டும். இதே தொகைக்கான மேலும் இரண்டு உத்தரவாதங்களையும் அவர் அளிக்க வேண்டும். இவ்வழக்கின் விசாரணை அதிகாரிகளுக்குத் தேவைப்படும்போதெல்லாம் அவர் நேரில் ஆஜராக வேண்டும். அச்சு அல்லது மின்னணு ஊடகங்களுக்கு அளிக்கும் பேட்டி உள்பட எந்த முறையிலும் திலீப், இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட நபரை அச்சுறுத்தவோ, ஆதிக்கம் செலுத்தவோ கூடாது என்று நீதிபதி தெரிவித்தார்.

இந்நிலையில், தற்போது வெளிநாடு செல்ல திலீப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com