மிகைப்படுத்திச் சித்தரிக்கிறார்கள்: அன்புச்செழியனுக்கு விஜய் ஆண்டனியும் ஆதரவு!

அன்புச்செழியன் என்னிடம் சரியான முறையில்தான் நடந்து வருகிறார். அனைவரும் அவரைச் சற்று மிகைப்படுத்திச் சித்தரிப்பதாகத் தோன்றுகிறது...
மிகைப்படுத்திச் சித்தரிக்கிறார்கள்: அன்புச்செழியனுக்கு விஜய் ஆண்டனியும் ஆதரவு!

அன்புச்செழியன் என்னிடம் சரியான முறையில்தான் நடந்து வருகிறார். அனைவரும் அவரைச் சற்று மிகைப்படுத்திச் சித்தரிப்பதாகத் தோன்றுகிறது என நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த திரைப்படத் தயாரிப்பாளர் அசோக்குமார் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இயக்குநரும், நடிகருமான சசிகுமாரின் மைத்துனரான இவர், சசிகுமாரின் திரைப்பட நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளராவும், அலுவலக நிர்வாகியாகவும் இருந்து வந்தார். தற்கொலை செய்துகொண்ட அசோக்குமார், தனது கடிதத்தில் ஃபைனான்சியர் அன்புச்செழியனிடம் பெற்ற கடனுக்கு கந்துவட்டி கொடுத்து வந்ததும் அவர் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்ததும் அதனால்தான் தற்கொலை முடிவு எடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அக்கடிதத்தின் அடிப்படையில் வளசரவாக்கம் போலீஸார், அன்புச்செழியன் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்தனர். அதேவேளையில் இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் அன்புச்செழியன் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் என வலியுறுத்தினர். தலைமறைவாக உள்ள அன்புச்செழியனைக் கைது செய்வதற்கு 3 தனிப்படைகள் அமைத்து சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன் உத்தரவிட்டார்.

அன்புச்செழியனை கைது செய்வதற்கு மதுரை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு தனிப் படை போலீஸார் விரைந்துள்ளனர். அவரது இருப்பிடத்தை அறிய அவரது குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அன்புச்செழியனை ஓரிரு தினங்களுக்குள் கைது செய்வதற்கான நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

நான் கடந்த 6 வருட காலமாக, தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் திரு. அன்புச்செழியனிடம் பணம் வாங்கித்தான் படங்கள் எடுத்து வருகிறேன். வாங்கிய பணத்தை முறையாகத் திரும்பச் செலுத்தியும் வருகிறேன். இதுநாள் வரையில் அவர் என்னிடம் சரியான முறையில்தான் நடந்து வருகிறார். அனைவரும் அவரைச் சற்று மிகைப்படுத்திச் சித்தரிப்பதாகத் தோன்றுகிறது. 

திரைப்படத்துறையில் 99% தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள், கடன் வாங்கி படம் எடுத்துதான் இந்நாள் வரையில் முன்னேறி இருக்கிறார்கள். எனக்கும் கடன் இருக்கிறது. உழைத்துக்கொண்டிருக்கிறேன் என்று அன்புச்செழியனுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதற்கு முன்பு,  இயக்குநர் சீனு ராமசாமி ட்விட்டரில் கூறியிருந்ததாவது: எம்.ஜி.ஆர், சிவாஜி போல் இல்லை இன்றைய நடிகர்கள். அன்பு செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்படுவது வேதனை. நான் நியாயத்தின் பக்கமே... என்று எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் விஜய் ஆண்டனியின் அறிக்கை பரபரப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com