தமிழ் சினிமாவில் யாருக்கெல்லாம் ரெட் கார்ட்? இயக்குநர் மணி ரத்னத்தின் புதிய படத்தில் சிம்பு நடிக்க முடியாதா?

இயக்குநர் மணி ரத்னத்தின் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார் என்பது அனைவரும்
தமிழ் சினிமாவில் யாருக்கெல்லாம் ரெட் கார்ட்? இயக்குநர் மணி ரத்னத்தின் புதிய படத்தில் சிம்பு நடிக்க முடியாதா?

கனவுத் தொழிற்சாலை எனக் கூறப்படும் சினிமாவில் கதைக்கு, டைட்டிலுக்கு என எதற்கு வேண்டுமானாலும் பஞ்சம் ஏற்படலாம், ஆனால் சர்ச்சைகளுக்கு ஒருபோதும் குறைவிருக்காது. ஒரு பக்கம் திரைப்படத் தயாரிப்பாளர் அன்புச்செழியன் பிரச்னை கோடம்பாக்கத்தையே உலுக்கிக் கொண்டிருக்க இன்னொரு புறம் நடிகர் சிம்பு உள்ளிட்ட சில நடிகர்களுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் கடுமையாக சில முடிவுகளை எடுத்துள்ளது. அது சம்மந்தப்பட்ட ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் நியாயமானதுதான் என்றும் கூறப்படுகிறது.

இயக்குநர் மணி ரத்னத்தின் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த செய்திதான். அதற்கு முன்னால் வலைத்தளங்களில் புதிய கெட்டப்பில் சில போட்டோக்களை சிம்பு வெளியிட்டார், அது அவரே இயக்கி நடிக்கவிருக்கும் புதிய படத்துக்கானது என்று கூறப்பட்டது. அப்படத்தின் ஆரம்பக் கட்ட பணிகளில் சிம்பு ஈடுபட்டிருக்கும் சமயத்தில் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து சிம்புவுக்கு ரெட் கார்டு போடப்பட்டது எனும் செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாகியது. இனி சிம்புவால் எந்த படத்திலும் நடிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

சில நாட்களுக்கு முன்‘அண்ணாதுரை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சங்கச் செயலாளரான தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு நடிகரின் பெயரைக் குறிப்பிடாமல் அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் இருப்பதாகக் கூறினார். அவர் வேறு யாருமல்ல சிம்புதான் என்று ரசிகர்கள் யூகித்துவிட்டனர்.

'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக சிம்புவிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படத் துறையினருக்கு, அவர் யாராக இருந்தாலும் ரெட் கார்டு கொடுத்துவிட்டால், அவர் சம்மந்தப்பட்ட பிரச்னை தீரும் வரை எந்தப் படத்திலும் பங்கேற்க முடியாது. இதற்கு முன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்ட் கொடுத்திருந்தது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த இறைவி திரைப்படம் சினிமா தயாரிப்பாளர்களை அவமானப்படுத்துவதாகக் கூறி எழுந்த சர்ச்சையால் தயாரிப்பாளர் சங்கத்தால் கார்த்திக் சுப்புராஜுக்கு ரெட் கார்ட் தரப்பட்டதாகக் கூறப்பட்டது. தயாரிப்பாளர் சங்கம் அனுமதித்தால் மட்டுமே கார்த்திக் சுப்புராஜால் படங்களை இயக்க முடியும் என்ற நிலைமை ஏற்பட்டது. 

இயக்குநர் சிம்பு தேவனின் இயக்கத்தில் 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ வடிவேலு நடிப்பதாக இருந்தது. ஆனால் வடிவேலு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல், அட்வான்ஸ் பணத்தையும் திருப்பித் தராமல் இருந்ததால் படக்குழுவினருக்கு நஷ்டமும், கால தாமதமும் ஏற்பட்டது. படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் ஷங்கர் நடிகர் வடிவேலுக்கு எதிராக ஒரு புகாரை சமீபத்தில் அளித்திருந்தார்.  அந்தப் பிரச்னை இன்னும் தீர்க்கபடவில்லை. அதன் முடிவில் வடிவேலுவுக்கும் ரெட் கார்ட் கொடுக்கப்படலாம். 

'சாமி 2' படத்திலிருந்து திரிஷா விலகலைத் தொடர்ந்து, அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருக்கிறது. அவருடைய விலகலைத் தொடர்ந்து, படத்தின் கதையில் மாற்றங்கள் செய்துவருகிறார்கள். இதன் மீது தயாரிப்பாளர் அளித்த புகாரின் பேரில் திரிஷாவிடம் விளக்கம் கேட்டுள்ளார்கள். இந்தப் பிரச்னையும் இன்னும் நிலுவையில் உள்ளது.

சிம்புவுக்கு எதிராக ஏற்கனவே பல புகார்கள் இதற்கு முன்னரும் இருந்துவந்ததால், AAA படத் தயாரிப்பளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்விதமாக, இந்த ரெட் கார்ட் கொடுக்கப்பட்டுள்ளது என்கிறது கோலிவுட் தரப்பு. மேலும் தயாரிப்பாளர் சங்கம் அனுமதித்தால் மட்டுமே  சிம்பு புதிய படங்களில் இனி நடிக்க முடியும். இது அவரது சினிமா வாழ்க்கையில் பின்னடைவு ஏற்படுத்திவிடும்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இயக்குநர் மணிரத்னம் இயக்கவிருக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் அறிவித்தது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, ஃபகத் ஃபாஸில் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் தயாரிப்புப் பணிகள் ஆரம்பித்துவிட்ட நிலையில், ஜனவரி 2018-ல் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. தற்போது சிம்புக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையால் இப்படத்தில் அவர் நடிப்பது சந்தேகம்தான் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com